ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்

கவிஞர் வீரமணி அவர்களின் ஓர் அருமையான கவிதையை முதலில் நம்மை படிக்கச் சொல்லுகிறார் இக்கட்டுரை ஆசிரியர். அதன்பின் ஒரு கவிதை படிக்கும் போது எத்தகைய தடுமாற்றம் நம்மை ஆட்கொள்கிறது என விளக்குகிறார். இதனை வாசித்தபின் நீங்கள் கவிதையை ரசிக்கும் முறையே மாறிவிடும்.

கண்ணற்றவன்

பார்த்துப் புளித்த பிரபஞ்சம்
யாராரோ மென்று துப்பிய – வார்த்தைகள்
எனதென்று புதிதாய் எழுத எதுவுமில்லை என்பதால்

நான்
வீடற்றவன் ஜன்னல் வழி
கண்ணற்றவன் – கவிதைகளைத் திருடி
முகமற்றவனிடம தந்தேன்…

அவன் வாசிக்காமலேயே
சிலாகிக்கிறான்…

பின் – பூவற்ற
மாலையில்
காற்றைக் கட்டி அணிவிக்கிறான்

சுமக்க முடியாமல் தள்ளாடுகையில்
கையற்றவன்
தாங்கிக் கொள்கிறான்

உடல் அற்ற ஒருவன்
திடீரென்று நெஞ்சைப் பிளந்து
வார்த்தைகளை
திணித்து
மூடுகிறான்

தொண்டைக்குழியில் வார்த்தைகள்
உயிரை அடைத்து நிற்கிறது…

யாரோ என் வீட்டு ஜன்னலை உடைத்து
கதவின் வழியே போயிருக்கிறார்கள்…

வீடு முழுதும் தேடியும்
மூக்குக் கண்ணாடி கிடைக்கவில்லை

பெரும் குடிகாரனின் அதிகாலை வியாதிபோல்
என் விரல்கள் நடுங்குகின்றன…

நான் எழுதத்
தொடங்குகிறேன்
என் கவிதையை
இதுவரை யாரும் கேட்காத வார்த்தைகளுடன்…

– கவிஞர் வீரமணி

 

கவிதையும் கவிஞரும் எப்பொழுதும் சும்மா இருப்பதில்லை….

வருவதை லபக்கென்று பிடித்தும் அதை லாபகமாய் கடை விரித்தும் விடுகின்றனர் அவர்கள்.

குழந்தை பிறந்தால் கண் காது மூக்கு நிறம் என ஒரு கூட்டம் விமர்சிக்க வரும் தானே?

கவிதை பிறந்தாயிற்று. பொத்தி வைக்க முடியுமா?

பூ மலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லி விடவா வேண்டும்?

ரசிப்போம்; ருசிப்போம்; கொண்டாட்டம்தான் தேனீக்களுக்கு.

கவிதை பிறப்பும் மலர்வும் தனக்கானதா? இல்லை பிறருக்கானதா? என்பதைப் போல் பெரிய தத்துவம் இது…..

 

தன் நேரங்களைப் பிய்த்துக் கொண்டு போகும் உயிரிகளிடம் இருந்து நேரத்தைக் காக்கப் போராட வேண்டியிருக்கிறது . கிடைத்த நேரங்களில் அந்தப் போராட்டத்தை நினைத்துப் பாதி நேரம் போய்விடுகிறது. அப்படி இப்படி நெளிந்து கவிதை குழிக்குள் தேடினால்…..

நெடுந்தொலைவு செல்ல வேண்டுமா? இல்லை கிளைகள் பிரிந்து பிரிந்து ஓரிடத்தில் நின்று விடுமா ? இல்லை பாறைகள் திடீரென்று விழுந்து வழி மறைக்குமா?

கவிதை படிக்கும் முன் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதே!

அது சொல்ல முடியாத‌து.

கவிதை படிக்கும்போது, படிப்பவரை, தலைப்பு எங்கோ ஒரு பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.

முதல்வரி, இரண்டாம் வரி, எனத் தொடர்கையில் உள்வெளி திறக்கிறது. வானம் வந்து கைகட்டிக் கிடக்கிறது. வார்த்தைகளும் வார்த்தைகளுக்கு இடையில் உள்ள சொல்லப்படாத பொருள்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னிற்கும்.

 

வார்த்தைகள் கவிஞரின் வார்த்தைகள் அல்ல. படிக்கும்பொழுது வார்த்தைகள் என் பொருள்களாலே நிறைந்து வழிகின்றன…. புரிதல் வார்த்தைகளைத் தன்வசம் இழுத்துச் செல்லுகிறது.

எனக்குள் சொல்லித் தரப்பட்ட வார்த்தைகள் அதன் நளினத்தை விட்டுக் கொடுக்காமலேயேதான், தன்னை அடையாளப்படுத்துகின்றன.

எங்கோ எதிலோ உணரப்பட்டவை என் உணர்தல்களோடே காட்சிப்படுகின்றன.

இப்பொழுது நான், கவிதைக்குள் என் வார்த்தைகள் சொல்லித் தருவதை உணர்வதா? வார்த்தைகளின் கைகோர்ப்பைக் கொண்டு கவிஞன் என்ன கூற நினைத்தான் எனக் கொள்வதா? தடுமாற்றம் தான்.

ஒவ்வொரு கவிதை படிக்கும் பொழுதும், இந்தத் தடுமாற்றம் இயல்பாய் ஏற்பட்டு விடுகிறது. என்னை அறவே தூக்கி எறிந்துவிட்டு எனக்குப் பதில் கவிஞரை உட்காரவைத்து அவர் வாயினால் அவ்வார்த்தைகளின் பொருளைக் கேட்பதானால் ரொம்ப கஷ்டம் தான்.

கவிதையைப் படிப்பதற்கு ஏன் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்? நானா? நீயா? எனக் கவிஞனிடம் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

அவன் ஏன் நாம் படிக்கும்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும்? எழுதியவனுக்கு எழுதியதோடு வேலை முடிந்துவிட்டது. பிறகு ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு முன்பும் தலை வணங்கி மீண்டும் பொருள் சொல்லத் தொடங்குகிறான்?… கவிஞன் தவிர்த்த வார்த்தைகளோடு பயணம் தொடர்ந்தது; தொடர்கிறது…

 

கவிதைக்குள் உள்ள வார்த்தைகள் பிரபஞ்சத்தில் சிலருக்குச் சொந்தமானதாகவும் இருக்கின்றன. அவர்கள் அந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் தான் என உலகம் இலகுவாய் சொல்லி விடுகிறது. அம்மாதிரி வார்த்தைகள் வந்தால் நெருடுகிறது . ஒன்று, இதில் எதைப் போய்ப் பார்ப்பது….

சொல்லாமல் போன வார்த்தைகள் பெரும் அலங்காரங்களுடன் வரவில்லை என்றாலும் நெளிந்து நின்றன‌ கொஞ்சம் பிசுபிசுப்புடன்,…

அப்படியும் புரிந்து நகர்ந்தால்….

உலக மொழிகளுக்குத் தக வார்த்தைகள் சில இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. அந்த வார்த்தைகளின் மூலக்கூறுகள் எவை என்றே தெரியாமல் அதனை உணர்தல் முடியாது.

எப்பப் போறது அந்த இடத்துக்கு? புரியத் தாமதமாகும் வார்த்தைகளோடு வளரக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

கவிதையைப் படித்து முடிப்பதற்குள் எத்தனை முறை சலிப்பு வீட்டிற்குள் தான்… சுயம் இருக்கிறதே…. அப்பப்பா…
கவிதையின் முடிப்பு எப்பொழுதும் இப்படியே தான் முடிய வேண்டுமா எனில், சில பொழுதுகளில் மாறும். அப்பொழுது மட்டுமல்ல; கவிதை எப்பொழுதும் இனிது…

பாரதிசந்திரன்

 

பாரதிசந்திரன்

 

 

 

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

6 Replies to “ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்”

  1. கவிதைகள் வாசிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை சுட்டியுள்ள வாசிப்பு வழிகாட்டி.

    இக்கவிதையின் மீதான உங்கள் வாசிப்பைப் பகர்ந்திருக்கலாம்.

    சரி புதிர்த் தன்மை சர்ரியலிசம் ஆகுமா?

  2. கவிதையும் கவிதைக்கான ஊடுருவும் நிலைப்பாடும் உள்வாங்கும் தீர்க்கமான உணர்தலும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. கவிதை மிக அழகான கவிதை. கவிஞருக்கும் விமர்சகருக்கும் வாழ்த்துகள்.

  3. கவிப்பிரியர்களுக்கு தங்களின் கவி வழி விமர்சனம் நல் விருந்து. ஒவ்வொரு கவிதையைப் படிக்கும் போதும் வித்யாசமான புரிதல்கள் உண்டாவது இயல்பு. இந்த வித்யாசமான முயற்சியும் அவ்வுணர்வை பிரதிபலித்திருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.