ஷியாம் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. விஷயம் இதுதான்.
அப்பா ஏற்பாடு செய்திருந்த பெண்ணை, பிள்ளை நிராகரித்துவிட்டு தான் விரும்பும் ‘வனிதா’ என்கிற பெண்ணை மணக்கப் போவதாகச் சொல்ல இருவருக்குள்ளும் வாக்குவாதம்.
முடிவில் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து “வெளியே போடா நாயே! என் முகத்தில் இனி விழிக்காதே!” என அப்பா மங்களம் பாடி பிரச்சனையைத் தீர்த்தார்.
சீதா தான் புலம்பிக் கொண்டிருந்தாள். “இப்படி பண்ணிட்டீங்களே! ஒரே பிள்ளையைத் துரத்தி அடிச்சிட்டு எப்படிங்க நாம் நிம்மதியா இருக்க முடியும்?”
“ஏய், ஒழுங்கா, மரியாதையா வாயை மூடிக்கிட்டு இரு. முடியாதுன்னா நீயும் போய்ச் சேரு” விசுவநாதனின் கர்ஜனையில் சீதா ஒடுங்கிப் போனாள்.
இருப்பத்தைந்து வருட சர்வீசுக்குப் பின் நாற்பத்தைந்து வயதில் ராணுவத்தை விட்டு வெளியேறி பென்ஷனுடன் தனியார் வங்கி ஒன்றில் கேஷியராக பணிபுரிந்து காலந்தள்ளும் விசுவநாதனின் திடகாத்திரமான உடம்பும், கர்ஜனைக் குரலும் பார்ப்பவர்கள் மனதில் ஒருவித பயத்தை உண்டு பண்ணும்.
கண்டிப்புக்குப் பெயர் போனவர்; ஷியாமின் தன்னிச்சையான போக்கிற்கு நொடியில் முடிவு கட்டி விட்டவர்.
சாதாரண காய்ச்சல் என நினைத்து அலட்சியத்துடனும் சட்டை செய்யாமலும் நடமாடிக் கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் படுக்கையில் விழுந்தார்.
பரிசோதித்ததில் கண்பார்வையை இழக்கச் செய்யும் ஒருவித வைரஸ் ஜூரம் தாக்கியிருப்பதாக வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி கலங்க அடித்தார் டாக்டர்.
பிள்ளையைக் கூப்பிட்டுக் கொள்ளாலாம் என்கிற சீதாவின் கெஞ்சல்கள் அந்த நிலையிலும் எடுபடவில்லை.
சீதா செய்வதறியாமல் தவித்த போதுதான் நரம்புகள் பாதிக்கப்பட்டதால் மாற்றுக்கண் பொருத்தி பார்வையைப் பெறச் செய்யலாம் என டாக்டர் சமாதானப்படுத்தினார்.
மாற்றுக்கண் பொருத்தப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் குணம் பெற்ற நிலையில் அன்று கட்டு அவிழ்க்கப்படும் நாள்.
கட்டை அவிழ்ப்பதற்கு முன் “மிஸ்டர் விசுவநாதன்! உங்களுக்கு கண்தானம் அளித்த நபரின் குடும்பம் இதோ உங்க பக்கத்திலேயே வந்திருக்கு. மெதுவா கண்களைத் திறந்து இவங்களைப் பாருங்க” என்றவாறே கட்டை அவிழ்த்தார் டாக்டர்.
கண்களை மெதுவாகத் திறந்தார் விசுவநாதன். தோளில் ஒருகுழந்தையை அணைத்துக் கொண்டு பெண் ஒருத்தி தன் எதிரில் நிற்பது மட்டும் மங்கலாகத் தெரிந்தது.
மெதுவாகக் கண்களை சிமிட்டி உற்றுப் பார்த்தார். மங்கலாகத் தெரிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக ‘பளிச்’சென கண்களில் பட அதிர்ந்தார். இதயமே நின்று விட்டாற் போல் ஓர் உணர்வு.
“நீயா?” எனப் பதட்டத்துடன் விசுவநாதன் கேட்கவும், டாக்டர் தொடர்ந்தார்.
“சாலை விபத்துல இவங்க ஹஸ்பெண்ட் அடிபட்டு பலத்த காயங்களுடன் மிகவும் மோசமான நிலையில் இங்கே வந்து அட்மிட் ஆனார். எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவரைப் பிழைக்க வைக்கவே முடியலே. உயிர் பிரியும்போது தன் கண்கள் இரண்டையும் பார்வையற்ற எவருக்காவது தானமாக அளிக்கும்படிக் கேட்டுக்கிட்டாரு. அவரோட கண்களைத்தான் உங்களுக்குப் பொருத்தியிருக்கோம்” டாக்டர் சொல்ல சொல்ல விசுவநாதனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய் பேச நா எழவில்லை.
நெஞ்சில் இனம் புரியாத ஓர் வேதனை படர, அப்பெண்ணை ஏறிட்டு நோக்க முடியாமல் தலைகுனிந்தபடியே டவலால் வாயைப் பொத்திக் கொண்டு விம்ம ஆரம்பித்தார்.
அந்தப் பெண் ‘வனிதா ஷியாம்’ என்பதை சீதா புரிந்து கொண்டவளாய் ‘ஷியாம்!’ என்று அழ ஆரம்பித்தாள்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998