ஒரு தாள் போதுமே

ஒரு தாள் போதுமே – அறிவியல் குறுங்கதை

நவீன ஆராய்ச்சிகள் பற்றிய கலந்துரையாடலுக்காக, ஆசிரியர் வேதிவாசனை அழைத்திருந்தார் அவரது நண்பர் கனிமதாசன்.

அன்று நேரம் இருக்கவே தன்னுடைய நண்பர் கனிமதாசனுடன் கலந்துரையாட வருகிறேன் என‌ இசைவு தெரிவித்திருந்தார் வேதிவாசன்.

சொன்னபடி அன்று நண்பர் கனிமதாசனைக் காண அவரது வீட்டிற்குச் சென்றார் வேதிவாசன்.

நண்பர் கனிமதாசனின் படிப்பக அறையின் உள்ளே நுழைந்த வேதிவாசனுக்கு ஒரே ஆச்சர்யம். காரணம், அங்கிருந்த அலமாரியில் நிறைந்திருந்த அச்சிடப் பயன்படும் காகித தாள்களைக் கண்டுதான்.

ஆச்சர்யத்துடன் “என்ன சார்…? இவ்வளவு தாள்களும் அச்சிடத்தானா?” எனப் புன்னகையுடன் வினவினார் வேதிவாசன்.

“ஆமாம் சார்.., தகவல்களை அச்சிட்டு படித்தால்தான் வசதியாக இருக்கு. கணினியிலேயே படிப்பது கடினமா இருக்கு, சார். என்ன பன்றது, இதற்கே அதிக செலவு ஆகுது.” என சற்றே சோர்வுடன் பதிலளித்தார் கனிமதாசன்.

“எதிர்காலத்துல இந்த செலவு குறைஞ்சிடும், கவலையை விடுங்க” என ஆரூடம் உரைத்தார் வேதிவாசன்.

“என்ன சார் சொல்றீங்க?” என்று கேட்டார் கனிமதாசன் ஆர்வத்துடன்.

“ஆமாம் சார், வருங்காலத்துல இவ்வளவு தாள்களை வாங்க தேவை இருக்காது. ஏன்னா… ஒரு தாளையே பல முறை அச்சிட பயன்படுத்திக்கலாம்.” என்றார் வேதிவாசன்.

“அப்படியா?, இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னா நல்லா இருக்கும்” என்றார் கனிமதாசன்.

 

“சொல்றேன்… டை-அரைசல்-ஈத்தீனை அடிப்படையாக கொண்ட புதிய மையை (ink) விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.”  என்றார் வேதிவாசன்,

 

இதோட சிறப்பு என்னனா, ஒளியோட அலைநீளத்தை பொறுத்து இந்த மையின் நிறம் மாறும். முக்கியமா, கண்ணுரு ஒளி முன்னிலையில், இந்த மை நிறமற்று போயிடும். அதாவது மை அழிஞ்சிடும்.” என விளக்கினார் வேதிவாசன்.

“ஆஹா, புறவெளிச்சத்திலும் கண்ணுரு ஒளி இருக்கே, அச்சிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் சாதாரண வெளிச்சத்திலேயே மறைந்திடுமா?” என தனது சந்தேகத்தை எழுப்பினார் கனிமதாசன்.

“இல்லைங்க சார். குறிப்பாக செனான் மின்விளக்கு (Xenon Lamp) உமிழும் கண்ணுரு ஒளியில் (போதுமான ஒளிக்கற்றை செறிவு இருப்பதால்) தான் இந்த மை அழியுமாம்.

அதோடு புறஊதா ஒளியின் அலைநீளத்தை பொறுத்து இந்த மை மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய நிறங்கள் அடைவதுனால், அச்சிடப்பட்ட தகவல்களும் மஞ்சள் அல்லது நீலநிறத்தில் இருக்குமாம்.

ஆக, கருப்பு வெள்ளைக்கு பதிலாக, இனி மஞ்சள் அல்லது நீலநிறத்தில் அச்சிட்டு படிக்கலாம். அத்தோடு கண்ணுரு ஒளியை பயன்படுத்தி தாளை வெண்மையாக்கி மீண்டும் அச்சிட பயன்படுத்திக்கலாம்.” என்றார் வேதிதாசன்.

“அருமையான கண்டுபிடிப்பு சார். எங்க சார் இந்த மை கிடைக்குது?. இதற்குன்னு ஏதேனும் பிரத்யோக அச்சு எந்திரம் வாங்கணுமா?” என்று கேட்டார் கனிமதாசன்.

அதற்கு வேதிவாசனோ “இது ஆய்வக அளவிலேயே உறுதி செய்யப்பட்டிருக்கு. பொதுப்பயன்பாட்டிற்கு வந்ததும் சொல்றேன். மேலும் இந்த மையைப் பயன்பாட்டிலுள்ள காட்ரேட்ஜ்களில் (Printer catridge) நிரப்ப முடியும் என்பதால் நாம் பயன்படுத்தும் அச்சு எந்திரமே போதுமானது” என்றார்.

“அருமையான கண்டுபிடிப்பு சார். விரைவிலேயே இது மக்களின் பயன்பாட்டிற்கு வரணும். அப்போதான் தாள்களை வாங்கும் பணம் மிச்சமாகும்.” என்றார் கனிமதாசன்.

“பணம் மிச்சத்திற்கு மட்டும் அல்ல. இக்கண்டுபிடிப்பு சுற்று சூழலுக்கும் நல்லது தான்” என்றார் வேதிதாசன்.

‘ஆமாம் மரக்கூழிலிருந்து தானே காகித தாள் தயாரிக்கப்படுகிறது. தாளின் பயன்பாடு குறைய மரங்களை அழிப்பதும் குறையும் அல்லவா?’ என்று எண்ணிய கனிமதாசன் “ஆமாம் சார், சரியா சொன்னீங்க, ஒரு ஆளுக்கு ஒரு தாள் போதுமே” என்றார்.

இப்படியாக ஒரு தாளில் இருந்து தங்களது நவீன ஆராய்ச்சி பற்றிய கலந்துரையாடலைத் தொடங்கினர் இருவரும்.

 முனைவர்.ஆர்.சுரேஷ்

சென்னை, அலைபேசி: 9941091461

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.