ஒரு நட்பின் மரணம் – சிறுகதை

முன் குறிப்பு:

இந்தக் கட்டுரையை வாசித்த பின் “அட… நம்மளுக்கும் இதே மாதிரி நடந்திருக்கே…” என்று தோணலாம்.

எதிர்காலத்தில் இனி நடக்குமானால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நண்பர்களே!

தன் பள்ளித் தோழி வாணியை 25 வருடங்கள் கழித்து தன் சொந்த ஊரில் சந்தித்த சரண்யா முதலில் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

“அட… நான் அந்த கடைசி பெஞ்சுல உக்காந்திருப்பேன்ல என்ற கேங்கோட… கணக்கு சுத்தமா வராதே… அடிக்கடி மேக்ஸ் (மேத்ஸ்… மேத்ஸ்! உனக்கு இங்லீஷும் வர்லையே… சரண்யாவின் மைண்ட் வாய்ஸ்) டீச்சர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருப்போமல்ல…” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் மூலம் சரண்யாவின் ஞாபகங்களைக் கிளற, மிக மங்கலாக அவள் நினைவில் வந்து போனாள் சிறு வயது வாணி.

பின்னர் பரஸ்பரம் இருவரும் தங்கள் அலைபேசி எண்களை பரிமாறிக் கொள்ள, மறுநாள் விடியல் சரண்யாவின் வாட்ஸ் அப்பில் வாணியின் காலை வணக்கம் வண்ணப் படத்துடன் ஆரம்பித்தது.

அரக்கப் பரக்க சமைத்து, தன் இரு பிள்ளைகளை தயார்படுத்தி, பள்ளி வேனில் ஏற்றிவிட்டு, கணவருக்கு தேவையானவற்றை உணவு மேசையில் பரப்பி, காக்காய் குளியல், மடிப்புக் கலையாத புடவை என தயாராகி, இரண்டு இட்லிகளை சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்பவளைப் போல நான்கே விள்ளல்களில் வாய்க்குள் திணித்து, அது தொண்டையில் சிக்கலில்லாமல் இறங்க அரை டம்ளர் தண்ணீரையும் பின்னோடு அனுப்பி, செருப்பின் வாரில் காலை நுழைத்து, அகல அகலமாய் அடி எடுத்து வைத்து, வேக நடையில் பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் நேரம்… மஞ்சள் நிற வாகனம் தன் மெகா சைஸ் முகத்தை தெருமுனையில் காண்பிக்க… வீதி என்றும் பாராமல் ஓட்டமாய் ஓடி… வந்து நின்ற பேருந்தில் தன்னைத் திணித்து, வழக்கமான இரண்டாவது சீட்டில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன் அலைபேசி அழைத்தது.

எதிர் முனையில் வாணி. “நான் உனக்கு குட்மார்னிங் மெசேஜ் போட்டேன். பதிலே இல்ல…”

“இன்னும் பாக்கல…”

“ஓஹோ… சரி… காலையில் என்ன சமைச்ச…? மதியத்துக்கும் அதேவா? காலேஜுக்கு எப்படிப் போவ…? டூ வீலர்லையா இல்ல பஸ்லையா…? காட்டன் சேலை கட்டுவியா… சிந்தெடிக்கா…? என்ற வாணியின் ஆர்வமிக்க கேள்விகளை பேருந்தில் நாராசமாய் ஒலித்த “தாய்க் கிழவி… தாய்க்கிழவி” தன் காலில் போட்டு மிதித்ததில் அவை நசுங்கின.

சரண்யா அன்றைக்கு தனக்கு வாட்ஸ்அப் வழியே இடப்பட்ட பணிகளை ஆராய்ந்தாள்.

முதல் நாள் மாலை நடைபெற்ற மகளிர் மேம்பாட்டு மையத்தின் மீட்டிங் மினிட்ஸை அன்று காலை 10 மணிக்குள் தனக்கு அனுப்ப வேண்டும் என்று மையத்தின் செயலர் கூறியிருந்தார்.

அதேபோல டிபார்ட்மெண்ட் மீட்டிங் மினிட்ஸை காலை 10 மணிக்குள் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவளுடைய துறைத்தலைவர் செய்தி அனுப்பியிருந்தார்.

ஒன்பதரைக்கு முதல் பாடவேளை ஆரம்பம். ஒன்பது மணிக்கு கல்லூரியில் நுழைந்ததும் இந்த இரண்டு வேலைகளையும் முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மதிய உணவு இடைவேளையில் அலைபேசியைத் திறந்தவளுக்கு, ‘என்னடி பேசினாலும், மெசேஜ் பண்ணாலும் உங்ககிட்ட ரெஸ்பான்ஸே சரியில்லையே? ஒட்டவே மாட்டீங்கற…?’ என்று ஆதங்கத்தை கொட்டிய வாணியின் கேள்விகள் கண்ணில் பட,

‘இங்க வேலை ஜாஸ்தி’ என்று அனுப்பிய அடுத்த நொடி,

‘அப்ப எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?’ என்று வந்து விழுந்தது.

‘ஹையோ…. ஹையோ… இன்னும் வெளையாட்டுப் புள்ளையாவே இருக்கியே வாணி’ மனதுள் நினைத்தபடி டேட்டாவை ஆஃப் செய்தாள்.

பின் வகுப்பறை, மாணவர்கள், ஃப்ரீ பீரியடில் பவித்ராவின் (அன்றைக்கு அவள் லீவ்) வகுப்பிற்கு சப்ஸ்ட்டிடியூஷன் க்ளாஸ் என நிமிடங்கள் கரைய… ‘அப்பாடா… கடைசி பீரியட் ஃப்ரீ’ என இருக்கையில் அமர்ந்ததும்,

“மேம், மன்த்லி அட்டெண்டென்ஸ் ரிப்போர்ட் இன்னிக்கு சப்மிட் செய்யணும். தேதி ரெண்டாயிடுச்சில்ல… நான் என் க்ளாஸுக்கு முடிச்சிட்டேன்” என்ற குணசுந்தரியிடம்,

“தேங்க் காட் குணா.. காலேஜ் முடிய இன்னும் அரைமணிநேரம் இருக்கு…” அவள் இருக்கையை விட்டு எழுவதற்குள் புனிதா கம்ப்யூட்டரை ஆக்ரமிக்க…..

இவள் தவிப்புடன் காத்திருந்து கடைசிப் பத்து நிமிடங்களில் வேலையை முடித்து, ஹெச்.ஓ.டியிடம் கையெழுத்து வாங்குவதற்குள் மணியடித்து விட, படிகளில் இறங்கிக் கொண்டிருந்த மாணவ வெள்ளத்தில் கலந்து, மூன்று மாடி இறங்கி (ஆக்சுவலா ஓடி) முதல்வரிடம் கையெழுத்து வாங்கி, சி.ஓ.இ. ஆஃபீஸில் ஒப்படைத்து, மீண்டும் பஸ்ஸூக்கு ஓட்டம்.

அலறல் பாடல்களுடன் பஸ் நகர்ந்தது.

‘இப்பயாச்சும் வாணியிடம் சேட் (chat) செய்யலாம். என் மேல செம கோபத்திலே இருப்பா…’ என்று அலைபேசியைத் தொட்டவளுக்கு,

‘நீ தான் என்னைக் காலையிலே சார்ஜ் போடலைல. அஸ்கு…. புஸ்கு….” என அலைபேசி கருந்திரையைக் காட்ட, ‘சுத்தம்’ சலித்தவாறே அதை பைக்குள் போட்டாள்.

‘இந்த வார இறுதியில் வாணிக்கு ஃபோன் செய்து, தன் வேலைப் பளுவுக்கிடையில், தான் சாப்பிட்டோமா என நினைக்கக் கூட இயலாத பணிச்சூழலில் அலைபேசியில் சேட் செய்வதெல்லாம் இயலாத காரியம் என்பதை பக்குவமாக எடுத்து சொல்லணும்’ என நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை சரண்யா குக்கர் விசிலுக்காக காத்திருந்த நேரத்தில் வாட்ஸ் அப் பக்கம் போக, வாணியின் ஸ்டேட்டஸ்,

‘உன்னை மதிக்காதவர்களை ஒரு நொடி கூட நினைக்காதே; அற்பங்களைப் பற்றி அற்புதங்கள் எண்ணலாமா…?’ என்றது.

‘தேவுடா…! தமிழ் சீரியலில் இருந்து சுட்டிருப்பா போல… அற்பம்னு என்னைத் தான் சொல்லுதோ இந்த அற்புதம்….?’

ஆம் என்பதைப் போல குக்கரும் விசிலடித்து ஆமோதித்தது.

‘சூப்பரா இருக்குடி என இவள் குசும்பாக மெசேஜ் செய்ய, அங்கிருந்து பதில் இல்லை. அன்று மாலையே சரண்யாவை வாணி பிளாக் செய்து விட… ‘

ம். ஒரு நட்பின் மரணம் அலைபேசியால் நிகழ்ந்தது’ என கன்னா பின்னாவென வரிகள் ஓடின அவளுள்.

அதே சமயம் மனதின் மூலையில் நிம்மதி எழுந்ததும் நிஜம்.

விஜிரவி

One Reply to “ஒரு நட்பின் மரணம் – சிறுகதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.