அன்று காலை ஊழியர் ஒருவரின் பென்ஷன் சம்பந்தப்பட்ட விவரம் ஒன்றைப் பெறுவதற்காக அக்கவுண்ட்ஸ் பிரிவிற்குச் சென்றான் தெய்வசிகாமணி.
அச்சமயம் வழக்கமான புன்முறுவலுடன் தன்னிடம் பர்சனலாகப் பேசவேண்டும் எனக் காஷியர் லோகநாயகி சொன்னபோது, அது தன் திருமணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவன்.
அலுவலகக் கேண்டீனில் காலை பதினொன்றரை மணியளவில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லோகநாயகி வந்து விஷயத்தைக் கூறினாள்.
அந்த நிமிடம் முதல் தெய்வசிகாமணியின் மனம் ஒரு நிலையில் இல்லை. அவன் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுதான் அது. புதிதாக எதுவும் அவள் கேட்டுவிடவில்லைதான்.
இதுவரை பலரும் அவனிடம் பேசிய பேச்சுதான். இருந்தாலும் லோகநாயகி தன்னை இவ்வளவு குறைவாக மதிப்பீடு செய்வாள் என தெய்வசிகாமணி எதிர்பார்கவில்லை.
‘தன்னை எவ்வளவு மட்டமாக நினைத்து விட்டாள்? என்ன விதத்தில் குறைந்து போய்விட்டோம்? படிப்பு இல்லையா? நல்ல சம்பளம் இல்லையா? பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் இல்லையா?
திருமண வயதையெல்லாம் தாண்டி விட்டது ஒன்றுதான் குறை. எப்படி இதுமாதிரி வரன் குறித்து, அதுவும் தன்னிடம் பேச மனம் வந்தது அவளுக்கு?
என்னதான் நாற்பது வயதைத் தாண்டி விட்டாலும் அதற்காக இப்படிப்பட்ட வரனா?’ லோகநாயகி மீது தெய்வசிகாமணிக்கு அசாத்திய கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
‘இதைச் சொல்லத்தான் இவ்வளவு நாட்கள் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்முறுவலுடன் தனியாகப் பேச வேண்டும் என்றாளா? சே, எவ்வளவு கேவலமாக நினைத்து விட்டாள்?’ நினைக்க, நினைக்க உள்ளம் கொதித்தது தெய்வசிகாமணிக்கு.
மனதை அமைதி படுத்த முடியவில்லை. அப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்க பூசி மெழுகிப் பேசிவிட்டு வந்து விட்டான்.
அன்று மட்டுமின்றி, சென்ற இருநாட்களாக அலுவலகம் வந்தாலே லோகநாயகி சொன்னதை நினைத்து அவன் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. அவனால் வேலையில் நாட்டம் கொள்ள முடியவில்லை.
தெய்வசிகாமணிக்கு நாற்பத்திரெண்டு வயது. எளிமையான குடும்பம். ஒரே தங்கை. தங்கையின் ஜாதகக் கோளாறினால் இருப்பதைந்து வயதைத் தாண்டியும் அவள் திருமணம் நடைபெறவில்லை. எவ்வளவோ இடங்கள் பார்த்தான். ஒன்றுகூட அமையவில்லை.
தங்கைக்கு திருமணம் ஆகாததால் அவனுடைய வாழ்க்கை பற்றி எவ்வித சிந்தனையுமின்றி இருந்து விட்டான். கிடைக்கிற சம்பளத்தில் அன்றாட அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறைவேற்றிக் கொண்டு தாய், தங்கையுடன் இழுத்துப் பிடித்து வாழ்க்கையை ஓட்டிவர முடிந்தது.
தங்கையின் திருமணம் அவள் முப்பந்தைந்து வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடந்து முடிந்தது.
ஓர் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து விடுபட்டு, கிட்டதட்ட ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகியும், நடுவில் தாய் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்ததால் தாயைக் கவனிப்பதிலும், தங்கைக்குத் திருமணத்திற்குப் பின் வரிசையாக வந்த சம்பிரதாயச் செலவுகளாலும் அவனைப் பற்றி நினைக்க முடியாமல் காலம் ஓடி விட்டது.
அலுவலகம் முடிந்து மாலை வீடு திரும்பும் சமயம் நண்பன் திருவேங்கடம் திரும்பவும் தெய்வசிகாமணியிடம் “டேய், நானும் இரண்டு நாட்களாய்ப் பார்க்கிறேன். எதையோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கே. கேட்டாலும் சொல்லமாட்டேங்கிறே. என்ன ஆச்சு உனக்கு? எதுவாய் இருந்தாலும் மனம்விட்டுப் பேசுடா” என்றான்.
தெய்வசிகாமணி ஆத்திரம் தீர லோகநாயகி கேண்டீனில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் திருமண விஷயமாய் அவனிடம் பேசியவற்றை ஒருவித பதட்டம் மேலிட, கோபம் முகத்தில் தாண்டவமாட சொல்லி முடித்தான்.
அவ்வளவையும் பொறுமையாகக் கேட்ட திருவேங்கடம் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
தெய்வசிகாமணி, “என்னடா, மனசுல இருக்கிறதை சொல்லு, சொல்லுன்னு உயிரை எடுத்தே. இப்போ பேசாம இருக்கே. அவள் எப்படிடா இப்படி ஒரு வரனை எனக்குப் பார்க்க முடிந்தது? வேறு வரனே கிடைக்கலியா அவளுக்கு? அவளை நினச்சாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சரி, சரி வேறு ஏதாவது பேசுவோம். மறுபடியும் என்னை டென்ஷனாக்கிட்டியே” என்றான்.
திருவேங்கடம் இப்போது பேச ஆரம்பித்தான்.
“சிகாமணி, ஏன் இப்படிக் குதிக்கறே, கொஞ்சம் அமைதியாய் இரு. எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். நம் எதிர்பார்ப்புகள் ஜாஸ்தியாய் இருந்து, அவைகள் நினைத்தபடி அமையாதபோதுதான் நமக்கு கோபம், தாபம், ஆத்திரம், வெறுப்பு எல்லாமே ஏற்படுது.
நம் சூழ்நிலை, நடைமுறை நிலைமைக்கேற்றபடி நம்மை நாமே சாந்தப்படுத்தி, சமாதானப்படுத்தி, தீர ஆலோசிச்சுப் பார்த்தால், நல்ல கோணத்தில் நினைச்சுப் பார்த்தால் எல்லாமே நியாயமாகப்படும். அனாவசியக் குழப்பத்திற்கோ, தேவையற்ற பிரச்சினைக்கோ இடமிருக்காது.
எனக்கென்னவோ லோகநாயகி கேட்டது தப்பில்லைன்னுதான் தோணுது. இந்த இடத்துல நீ ஒன்றைப் புரிஞ்சுக்கணும். நம் வாழ்க்கையில் நாம் எவ்வளவோ விஷயத்துல ‘ஒரு வழிப் பாதை’ யாய் நினைச்சுத்தான் செயல்படுறோம். நமக்குச் சாதகமாய் அமைவதை எடுத்துக்கிட்டு, அமையாததை ஒதுக்கிற மனோபாவம் முதலில் நம்மிடமிருந்து மறையணும்.
கணவனை இழந்து, ஐந்து வயசுக் குழந்தையோடு காலத்தை ஓட்டி வரும் முப்பத்தைந்து வயசு உறவுப் பெண் ஒருத்தியைத் திருமணம் செஞ்சுக்க உங்கிட்ட லோகநாயகி கேட்டதற்காக இவ்வளவு வருத்தப்படுற.
உன்னோட தங்கைக்கு நீ யாரைத் திருமணம் செஞ்சு வச்சே? அவளுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது. ஜாதகத்தில் வேறு கோளாறு. கையில கிடச்ச வரனை எப்பாடுபட்டாவது முடிச்சு, பொறுப்பிலிருந்து விடுபடணும்னுதானே உனக்கு தோணுச்சு.
அவளுக்கும் மனசுல எவ்வளவோ ஆசைகள் இருந்திருக்காதா? தன்னால் தன் அண்ணன் வாழ்க்கை பாழாயிடக் கூடாதுங்கிற ஒரே காரணத்திற்காகத் தானே நீ பேசி முடிவு செஞ்ச ஐம்பது வயசு வரனை மனசார ஒத்துக்கிட்டு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டிருக்கா. அவள் இப்போ நல்லா இல்லை?
அவள் வாழ்வு அமோகமாய் இல்லை? அவளுக்கு இருக்கிற பெருந்தன்மையும், விசாலமான எண்ணமும் உங்கிட்ட எப்படிடா இல்லாமப் போச்சு? உன் வயசுக்கு இனி இருபது வயசுக் குமரியா வரப் போறா? இல்லை எதிர்பார்க்கத்தான் முடியுமா, நன்கு யோசிச்சுப் பார்.”
நீண்ட பிரசங்கமே செய்த திருவேங்கடம் சென்று விட்டான்.
இரவு முழுக்க சிந்தனைக் கடலில் மூழ்கி எழுந்த தெய்வசிகாமணி, காலை புனித நதியில் நீராடி எழுந்தவனைப் போல தெளிந்த மனத்துடன் காணப்பட்டான். மனம் அமைதி அடைந்திருந்தது. ஒருவித தீர்மானத்திற்கு வந்திருந்தான்.
அலுவலகம் சென்றதும் முதல் வேலையாய் அக்கவுண்ட்ஸ் பிரிவில் லோகநாயகி இருக்கைக்குச் சென்று புன்முறுவலுடன் அவளிடம் சொன்னான்.
“உங்ககிட்ட பர்சனலாப் பேசணும். பதினொன்றரை மணிக்கு கேண்டீன் பக்கம் வாங்க.”
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!