ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 2

கோவையின் இதயப்பகுதியில் அமைந்திருந்தது அந்த லக்ஸுரி அப்பார்ட்மென்ட்.

நான்கு படுக்கை அறை, மூன்று அட்டாச்டு பாத்ரூம், ஒரு பொது பாத்ரூம், விசாலமான கிச்சன், டைனிங் ஹால், இரண்டு பால்கனிகள், தனியாய் சுவாமி அறை, பெரிய ஹால், ஃபிரென்ச் விண்டோ என்று வசதியான முப்பத்தி ஐந்து குடியிருப்புகள் இருந்தன.

லிஃப்ட் வசதி, ஸ்விம்மிங்பூல், ஜிம் வசதி, பச்சைப் பசேலென்று லான், அதில் இரண்டு ஊஞ்சல்கள், ப்ரேயர் ஹால். பிள்ளையார் மட்டுமே இருக்கும் சின்னஞ்சிறிய கோயில், கார்கள் நிறுத்துமிடம் என சர்வ வசதிகளோடும் கூடிய அந்த அபார்ட்மென்டின் மூன்றாம் தளத்தில் இருந்த அந்த போர்ஷன் மிகவும் அமைதியாய் இருந்தது.

அரசு மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட்டாய்ப் (இயன்முறை மருத்துவர்) பணி புரியும் இருபத்திரெண்டு வயது மகள் வந்தனா பணிக்குச் சென்று விட வசந்தி என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்மணி கையில் ஏதோ ஒரு புத்தகத்துடன் பால்கனியில் கிடந்த நாற்காலியொன்றில் வந்தமர்ந்தார்.

வயது நாற்பத்தி நான்கு, நாற்பத்தஞ்சு இருக்கலாம் அவருக்கு. நாற்பத்தி நான்கு வயதென்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

வயது அவ்வளவெல்லாம் இருக்காது என்பார்கள். ஒருவேளை பிறப்புச் சான்றிதழைக் காட்டினால் நம்பலாம்.

இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட மிகப் பிரபலமானத் தனியார் நிறுவனமொன்றில் உயர் பதவியில் இருப்பவர்.

மூன்று மாதங்களுக்கு முன்புவரை சென்னையில் பணிபுரிந்தவர்.

மகள் வந்தனா நாலுவருடங்கள் பிஸியோதெரபி மருத்துவம் படித்து ஆறுமாதம் பயிற்சி முடித்து கோயமுத்தூர் அரசு மருத்தவமனையில் முதன் முதலாய் பணியில் சேர்ந்த போது மகள் ஹாஸ்டலில் தங்குவதை விரும்பாமல் ம்யூச்சுவல் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு சென்னையிலிருந்து இங்கே கோவை பிராஞ்சுக்கு வந்தவர்.

நாற்பத்துநான்கு வயதிலும் மேக்கப் இல்லாமலே அழகான தோற்றம்.

இந்த வயதிலேயே இப்படி ஒரு தோற்றப்பொலிவு என்றால் இளம் வயதில் எத்தனை அழகாக இருந்திருப்பார் இவர் என்று இவரின் வயதை அறிந்தவர்கள் நினைக்காமல் இருக்க முடியாது.

இன்னும் அவரை விட்டு இளமை விடைபெற்றுச் செல்ல விரும்பவில்லை என்பதை இந்த வயதிலும் அவரின் தோற்றம் எண்ண வைத்தது.

அத்தனை அழகு, அத்தனை அமைதி, அத்தனை கம்பீரம். ஆனாலும் அந்த அமைதியையும் தாண்டி மிகலேசாய் ஏதோவொரு சோகம் முகத்தில் நிரந்தரமாய் குடியிருப்பதாய் அவரை அடிக்கடி பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

அருண்குமாரின் அறையில் இருக்கும் ஓவியப் பாவையைப் பார்த்தவர்கள் யாராவது இருந்து அவர்கள் இவரைப் பார்த்தால், அடுத்த கணமே, ‘என்னதிது! அந்தப் படத்துல இருக்குற பொண்ணு மாரியே இருக்காங்க இந்தம்மா! அந்தப் படத்துப் பொண்ணு சின்ன வயசுப் பொண்ணு! இவங்க நடுத்தர வயசானவங்க அவ்ளவுதான்!’ என்று குழம்பித்தான் போவார்கள்.

இன்று ஏனோ அவர் அலுவகம் செல்லாமல் விடுப்பில் இருந்தார்.

மணி பதினொன்று.

“வசந்தியம்மா! வசந்தியம்மா! போஸ்ட்!” என்று சப்தம் கொடுத்து விட்டு நிலைவாசப்படியின் கதவின் முன்னிருக்கும் கிரில் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த சின்ன சைஸ் தபால் பெட்டியைத் தட்டி ஓசை எழுப்பிவிட்டுப் போனார் தபால்காரர்.

‘அட! என்னது போஸ்ட்டா? இந்த வாட்ஸ்ஸப் காலத்துல! போஸ்ட்ல யாரு எத அனுப்பப் போறாங்க. ம்..’என்று நினைத்தவாறே எழுந்து சென்று வாசல் கதவைத் திறந்து போஸ்ட்பாக்ஸில் கைவிட்டு அதில் கிடந்த கவரை எடுத்தார்.

சென்னையிலிருந்து சேவாசங்கமொன்று பண உதவிகேட்டு அடிக்கடி அனுப்பும் கடிதம் அடங்கிய கவர் அது.

சென்னை முகவரிக்கு வந்துவிட்டு இந்த முகவரிக்கு போஸ்ட்மேனால் அனுப்பப்பட்ட கடிதம்.

முகவரி மாற்றம் யாரொருவருக்கும் தெரிவிக்கவில்லை என்பதால் சென்னை வீட்டைக் காலி செய்யும்போது போஸ்ட்மேனிடம் மட்டும் தற்போதைய முகவரியைக் கொடுத்துவிட்டு வந்ததால் அவர் அனுப்பியிருப்பது கவரின் மேலிருக்கும் விபரத்தால் புரிந்தது.

‘வந்தனாவைப் பணம் அனுப்பச் சொல்லணும்!’ என்று நினைத்தவாறே கவரை இடது கைக்கு மாற்றிக்கொண்டு ,வலது கையால் கதவைத் தாழிட முயன்றபோது அருகேயிருந்த லிஃப்ட் கதவு திறந்துகொள்ள வேலைக்காரி யமுனாக்காவும் அவளின் எட்டு வயது பேரனும் வெளியே கால் வைத்தார்கள்.

“வாங்க யமுனாக்கா!” என்று சொல்லிவிட்டு இவர் உள்ளே செல்ல, கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு பேரனோடு வசந்தியம்மாவைப் பின் தொடர்ந்தாள் வேலைக்காரம்மா. கையில் மஞ்சப்பை.

“இன்னிக்கிக்கு ஆபீஸு போவலையா? லீவு போட்டுட்டீங்களா! அதா இப்ப வரச்சொல்லி காலேல போனு பண்ணிணீங்களா?

என்னடா சாயந்திரம் ஆறுமணிக்கு மேலதானே போவம். இன்னிக்கு காலேல பத்தர மணிக்கே வரச் சொல்றாவுளேனு நெனச்சேன்!” என்றாள் யமுனாக்கா.

யமுனாக்காவின் பேச்சுக்கான பதிலெதுவும் தரவில்லை வசந்தியம்மா.

யமுனாக்காவின் கைபிடித்து நிற்கும் பையனைப் பார்த்தார்.

“என்ன பேரனா? என்னமோ பேர் சொல்லுவீங்களே! என்ன அது?”

“வேம்புங்க!”

“ம்..ம்.. வேம்பு! வேம்பு! என்ன படிக்கிற?”

பதில் சொல்லாமல் நாணிக் கோணினான் பையன்.

“ஏய்! அம்மா கேக்குறாங்கள்ள சொல்லுடா! எத்தினியாவது படிக்கிறேன்னு சொல்லு!”

“மூணாவுது!” பக்கத்தில் நிற்பவர்க்குக்கூட காதில் விழாத அளவு மெதுவாய்ச் சொன்னான்.எட்டுவயது என்பதால் மேல்வரிசைப் பற்கள் இரண்டைக் காணவில்லை. அந்த இடைவெளிவழியாய்க் காற்றுதான் வந்தது.

“ஸ்கூல் போகல?”

“அதையேங் கேக்குறீங்கம்மா! ஒப்பணக்காரத் தெருவு இருக்குல்ல அங்க நேத்து ராவு ரெண்டு பேர வெட்டி கொன்னுட்டானுக.

கொன்னுப்புட்டு தலைய தூக்கிக்கிட்டுப் போயி பஸ்டாண்டு கக்கூஸுல போட்ருக்கானுவ அங்கிட்டு ரெண்டு எடத்துலயும் ஒரே களேபரமாருக்கு.

அந்த ஒப்பணக்காரத் தெரு வாண்ட தா இவ ஸ்கூலு. அதா, இன்னாக்கி ஸ்கூல லீவு வுட்டுட்டாங்க!”

சொல்லிக்கொண்டே பத்துப்பாத்திரம் கிடக்கும் இடத்திற்குப் போய் பாத்திரங்களைக் கழுவினாள்.

வீடு பெருக்கினாள். காய்ந்த துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தாள்.

வேலை செய்யும் நேரத்தில் மனம் ‘நேத்து ஆயிரம் ரூவா பணம் கேட்டமே? இந்த அம்மாவுக்கு நாம கேட்டது நெனப்புல இருக்குமா? தருவாங்களா?’ திரும்பவும் கேட்ட பாடால்ல இருக்கு!’ என்று திரும்பத் திரும்ப நினைத்தது.

‘தோ! ஆச்சு கெளம்புற நேரம் வந்தாச்சி. இந்தம்மா பணம் குடுக்குமா! மறந்தாப்ல இருந்துடுமா?’ தவியாய்த் தவித்தது யமுனாக்கா மனசு.

“அம்மா! நா கெளம்புறேம்மா!”

“அக்கா இருங்க! நேத்து பணம் கேட்டிங்கள்ள இந்தாங்க!” இடது கைக்குள் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்டினார் வசந்தி.

வாய் முழுவதும் பல்தெரிய சந்தோஷத்தோடு கைநீட்டி பணத்தை வாங்கிக் கொண்டாள். இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.

“குலதெய்வம் கோயிலுல பேத்திக்கி முடியிறக்கி மாவிளக்கு போடனும். கிராமத்துக்குப் போவுறோம். இவுனுக்கும் அப்பிடியே இன்னோரு தடவ மொட்ட போட்டுடலாமுன்னு இருக்கு. அதா செலவுக்கு..”

சொல்லிக்கொண்டே சுவற்றில் சாய்த்து வைத்திருந்த மஞ்சப் பையைக் கையிலெடுத்த யமுனாக்கா, திடீரென நினைவு வந்தவளாக பைக்குள்ளிருந்து சுருட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளைப் பேப்பர் ஒன்றை வெளியில் எடுத்தாள்.

“அம்மா! நம்மூரு காந்திநகரு பஸ்டாண்டு இருக்கில்ல! அதா ஒப்பணக்காரத் தெருவுல தலையவெட்டி பஸ்டாண்டு கக்கூஸுல தலையக் கொண்டு போய் போட்ருக்கானுவன்னு சொன்னேன்ல அந்த பஸ்டாண்டுதா!”

“யமுனாக்கா! நாங்க இந்த கோயமுத்தூருக்கு வந்தே மூணுமாசம்தான் ஆகுது.

வந்ததுலேந்து ஆஃபீஸத் தவிர ஒரு எடமும் போகல! அதுனால இன்னும் இந்த ஊருல எனக்கு எந்த எடமும் தெரியாது!

வந்தனா வேல பாக்குற ஹாஸ்பிடல்கூட இன்னும் போவுல! இனிமேதா இந்த ஊருல அங்க இங்க போவணும் எல்லாந் தெரிஞ்சிக்கணும்.”

“அதுக்கென்னம்மா! தெரிஞ்சிகிட்டா போவுது. முன்னாடி சென்னையிலதானே இருந்தீங்க? நா வேலைக்கு வந்த புதுசுல சொல்லீருக்கீங்க!”

“ஆமா! சென்னையிலதா இருந்தோம். சரி நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க!”

“ம்.. எங்க வுட்டேன். ஆமாங்கம்மா காந்தி நகரு பஸ்டாண்டு இருக்குல்ல. வர்ர ஜனங்களும் போற ஜனங்குளுமா ராவுல்ல பகலில்லனு கூட்டம் கூட்டம் கூட்டந்தானுங்கம்மா பஸ்டாண்ட சுத்தி.

அங்கிட்டு சின்னதா ஒரு ஷெட்டுமா! அதுக்குள்ளாற ஒரு ஆளுதா நிக்கிலாம்.

அந்தத் துக்கிணியூண்டு எடத்துல, ஒரு ஸ்டூலுல கலரு பென்சிலு, பேப்பரு, ப்ரஷ்ஷு அல்லாத்தியும் வெச்சிக்கிட்டு ஒருத்தரு அம்பது வயசுக்குள்ளாறதா இருக்குமு. அவுரு தானும் நின்னுக்கிட்டு,

அம்மா! அந்த ஆளப்பாத்தா ஐயோன்னு கத்திடுவாங்க நெஞ்சுல ஒரம் இல்லாதவுங்க. அவ்வளவு கோரமான மொகம் பூராம் பூரானா பட்ட பட்டையா மொகத்துல ரெண்டு மூணு எடத்துல தையலு! எடது கண்ணு பாதிக்கும் கொஞ்சமாதா தொறந்திருக்கு.

பட்டையா ப்ரேமு போட்ட கண்ணாடி. எடது கை வேற வெளங்காத கைபோல!

மொழங்கைக்குக் கீழால மடங்கிப் போயி, வெரலுங்க உள்ளு நோக்கி மடங்கி எதுக்கும் ஒதவாத கையா நிக்கிது.

காலுங்க வேற நெட்டையும் குட்டையுமா, கைப்புள்ள பாத்தாகூட குடிச்ச பால பயத்துல மொத்தமா வெளிய
கக்கிடுங்க..அம்மாம் கோரமுங்க!

ஆனா அவுரு பாத்தவங்கள பாத்தாமாரி அஞ்சு நிமிசத்துல அப்பிடியே படம் வரஞ்சு குடுத்துடறாரும்மா. அம்மாம் கிடுகிடு, அம்மாம் சுறுசுறுப்பு அம்மாம் வேகமு.

அவருட்ட எம்மாம் கூட்டம் தெரியுமா மொதல்ல இவுனு அவருக்குட்ட போய்நின்னு படம் வரஞ்சுக்க பயந்தான்.

நாந்தானுங்க இவுனுக்கு தைரியம் சொல்லி நிக்க வெச்சேன். அந்த ஆளுக்கு மொகந்தான் கொடூரம்.மனசு
ரொம்ப நல்ல மனசுங்கம்மா!

எல்லார்ட்டியும் படம் வரஞ்சுதர இருவத்தஞ்சு ரூவா கேக்குறாரு! இவன வரஞ்சு குடுக்க பதினஞ்சுதாம்மா வாங்கினாரு.

ஆனா ஒன்னு சொல்லணும்மா அந்த படம் வரையிரவரு சின்னவயசுல ரொம்ப அழகா இருந்திருப்பாருனுதா தோணுது . எதுனா ஆக்சிடண்ட்டு கீக்சிடண்டுல மாட்டிருப்பாரு போல!

மொகத்துல போட்டுருக்குற தையலுங்கள பாத்தா அப்டிதா தோணுது.

யாரு பெத்த புள்ளையோ! கல்யாணம் ஆனவரோ, புள்ளைங்க கிள்ளைங்க இருக்குதோ? என்னவோ போங்க. அந்தாளப் பாத்தா பாவமாதா இருக்கு என்று சொல்லிக் கொண்டே போனவர்.

இந்தால பாருங்கம்மா! அச்சு அசலா இவுன எப்புடி வரஞ்சிருக்காருன்னு!” சொல்லிக்கொண்டே கையில் வைத்திருந்த பேப்பரை வசந்தியிடம் நீட்டினாள் வேலைக்காரி யமுனாக்கா.

அடுத்த நொடி

“என்ன சொன்ன! என்ன சொன்ன! படம் வரஞ்சு குடுத்தானா! ஒம் பேரன படம் வரஞ்சு குடுத்தானா!

வசந்தியின் கோபத்தையும் அவரின் கத்தலையும் அவர் அப்பாத்தாவின் முகத்தில் பேப்பரை விசிறியடித்ததையும் பார்த்து பயந்து போன சின்னப் பையன் வேம்பு “அப்பத்தா!” என்று கத்திக் கொண்டே யமுனாக்காவைக் கட்டிக் கொண்டான்.

பயத்தில் உறைந்து போய் நின்றாள் வேலைக்காரி யமுனாக்கா.

சட்டெனத் திரும்பி வராண்டா நோக்கி நடந்துபோய் சேரில் அமர்ந்து கொண்ட வசந்தியின் கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களில் இறங்கி கோடுபோட்டது.

பேரனின் கைகளைப் பிடித்தபடி ஒன்றும் புரியாதவளாய் மெல்ல வெளியேறினாள் யமுனாக்கா

நாற்காலியிலேயே தலையை சாய்த்தபடி அமர்ந்திருந்த வசந்தியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து வற்றிக் காய்ந்து மறுபடியும் நனைந்து கேவல் எழும்பி அடங்கி என மாறி மாறி நடக்க அவரின் எண்ண ஓட்டம் பல வருடங்கள் பின்நோக்கிச் சென்றது.

(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 2” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுத… ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 1 […]

  2. […] ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 3 ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுத… […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.