ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 3

“வசந்தி! வசந்திகுட்டி!” சமையலறையிலிருந்து தாய் சரஸ்வதி அழைக்கும் குரல் காதில் விழுந்தும் சிமென்ட் பூசப்படாத செங்கல் பதிக்கப்பட்ட கூடத்துத் தரையில் வெகு மும்முரமாய் மாக்கல் துண்டால் யானைப்படம் வரைந்து கொண்டிருந்தாள் ஏழு வயது வசந்தி.

யானையின் நான்கு கால்களில் மூன்று கால்கள் அளவில் சிறிதும் பெரிதுமாயும் ஒருகால் சூம்பிப் போயும் இருந்தன.

யானையின் படத்தை உற்றுப் பார்த்த வசந்திக்கு ஒரே யோசனையாய் இருந்தது.

‘நேத்து கோயில்லயான பாத்தோம்ல. அதுங்காலு இப்பிடியா இருந்திச்சி. ம்கூம். இப்டி இல்ல. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டாள்.

வாயில் எச்சிலைக்கூட்டி வலதுகை நான்குவிரல்களால் எச்சிலைத் தொட்டுத்தொட்டு தரையில் தான் வரைந்திருந்த யானையின் கால்களை அழித்தாள்.

மீண்டும் யானையின் கால்களைச் சரியாகப் போடவேண்டும் என்ற எண்ணத்தில் மாக்கல் துண்டினை கையிலெடுத்தபோது “அடி வசந்தி குட்டீ! அம்மா கூப்புடறேன்ல. என்னான்னு கேக்கமாட்டியா?” என்ற கூப்பாடு மிகுந்த சத்தமாய் செவிக்குள் நுழைந்தது.

“இன்னாம்மா! எதுக்கு கத்துற?” சிணுங்கலாய்க் கேட்டாள் வசந்தி.

“தோ பாரு! பனங்கெழங்கு சுட்டு வெச்சிருக்கேம் பாரு. ஒனக்கு புடிக்குமில்ல!”

“ஹை! தோ வாரேம்மா!” வாய் சொல்லியதே தவிர இடத்தை விட்டு எழாமல் யானைக்குத் தந்தம் வரைவதில் மும்முரமாய் இருந்தாள் வசந்தி.

‘வசுக்குட்டி! கூப்புடக் கூப்புட வராம அப்பிடி என்னதாம் பண்ணுறா?’ என்று நினைத்தபடி சுட்ட பனங்கிழங்கில் நாலு கிழங்கை கையிலெடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே கூடத்துக்கு வந்தாள் சரஸ்வதி.

குனிந்தபடி தரையில் வெகு சுவாரஸியமாய் படம் வரைந்து கொண்டிருக்கும் மகளைப் பார்த்துவிட்டு மிக மெதுவாய் அடி வைத்து சப்தமின்றி நடந்து வந்து வசந்தியின் பின்புறம் நின்றாள்.

மகளைச் சுற்றி சின்னதும் பெரிசுமாய் விலங்குகள், பூக்கள், பாம்பு, பறவைகள் என ஏகத்துக்கும் படங்கள் வரைந்து தள்ளப்பட்டிருந்தன.

ஆனால் விலங்குகளை இன்ன விலங்கு இது என்று பார்ப்பவர்களால் சரியாய் சொல்லிவிடமுடியாது.

‘அடி மாரியாத்தா! வரஞ்சு வெச்சுருக்குற படத்தையெல்லாம் விரலால் தொட்டுத் தொட்டு இது என்ன சொல்லு பாக்கலாம். இது, அப்பறம் இதுன்னு கேக்க ஆரம்பிச்சுடுவாளே!

வரைந்திருக்கும் மாட்டைப் பார்த்தால் காண்டாமிருகம் போல்தான் இருக்கும். அததான் வரஞ்சிருப்பா போலருக்குன்னு நம்பி காண்டாமிருகம்னு சொல்லிட்டா முடிஞ்சிது கதை

என்னது! என்னது! என்ன சொன்ன? என்ன சொன்ன? இது காண்டாமிருகமா ஒனக்கு? இது மாடு.. தெரீல!” தரையில் உருண்டு புரளுவாள். அழுது ஆகாத்தியம் பண்ணுவாள்.

சாப்டமாட்டேம் போன்னு சத்யாகிரகம் பண்ணுவாள். இன்னிக்கு எதக் கேப்பாளோ! எதுல மாட்டப் போறேனோ?’ பயந்து போனாள் சரஸ்வதி.

பின்னால் திரும்பிப் பார்த்தாள் வசந்திக்குட்டி. கையில் பனங்கிழங்கோடு அம்மா நிற்பது தெரிந்தது.

“அம்மா! பாரேன்! எத்தன படம் போட்ருக்கேம் பாரு. நல்லாருக்கா?”ஆர்வமாய் கேட்டாள்.

கேட்டுக் கொண்டே இடதுகையால் ஒரு பனங்கிழங்கை வாங்கிக் கடித்தாள்.

“எஞ்செல்லமே! எல்லா படமும் ரொம்ப ரொம்ப நல்லாருக்குடி!” செல்லப்.பெண்ணின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தாள்.

அடுத்து பெண்ணின் வாயிலிருந்து வரப்போகும் கேள்விக்குப் பயந்தாள்.

“அம்மா! தோ பாரு! இந்த யான நல்லாருக்கா?” விரலால் யானையென வரைந்த படத்தை சுட்டிக் காட்டினாள் வசுக்குட்டி (வசந்தி).

பாத்தவுடனேயே ‘பக்’கென்று சிரிப்பு வந்துவிட்டது சரசுவுக்கு (சரஸ்வதி). கஷ்டப்பட்டு புடவை முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டாள்.

யானையின் வால் மாட்டின் வால்போல் மிகநீளமாக தரையைத் தொடும் அளவு இருந்தது.

அம்மா சிரிப்பை அடக்கத் தவிப்பது புரிந்து போனது வசுக்குட்டிக்கு.

“ஏஞ் சிரிக்கிற! இது யான மாதிரி இல்ல? பாரு! பெரீசா ஒடம்பு, பெரீசா காது, நீட்டமா தும்பிக்கயி, நாலு காலு, வாலு!” கையால் அபிநயம் காட்டினாள்.

“எல்லாஞ் சரிடா குட்டீ! யானைக்கு வாலு இம்மாம் நீட்டமாவா இருக்கும்? குட்டியூண்டு தானே இருக்கும்.”

“ம்..” தலையைச் சொரிந்தாள். முதல்நாள் கோவிலில் பார்த்த யானையின் வாலை நினைவுக்குக் கொண்டு வர முயன்று தோற்றாள் வசுக்குட்டி.

அம்மாவிடம் தோற்றுப் போனதாய் மனம் வெட்கப்பட்டது. வெட்கமும் லேசான அவமானமும் முகத்தில் வந்து ஈஷிக்கொண்டது. அதை வேறு படத்தைக் காட்டி சரியான விடையை வாங்கி துடைக்கத் தோன்றியது.

இவளிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்த சரசுவின் மனம் மகளைச் சமாதானம் செய்யும் வழியைத் தேடியது.

“சரி, போட்டம்! இது என்ன சொல்லேம் பாப்பம்?” விரல் முக்கோணம் போல் முகத்தை வரைந்து அது படம் எடுப்பதைப் போல் நிற்க வைத்து பிரிப்பிரியாய் விரல் நீளத்துக்கு இரண்டு கோடுகளை அதன் வாயிலிருந்து நீட்டி வரைந்து சுருட்டி சுருட்டி உடம்பை வரைந்து இரண்டடி நீளத்துக்கு வாலைபோல் வரைந்து வைத்திருந்த படத்தைத் தொட்டுக் காண்பித்தாள்.

“ஐயோ! அம்மாடி. பா.. பா.. பாம்பு! பாம்பு! பயம்மாருக்கு.” கைகளை உதறி உதறி பயந்தவள் போல் நடித்தாள் சரசு.

வசுக்குட்டியின் முகத்தில் கிலோ கணக்கில் சந்தோஷம் வந்து ஒட்டிக் கொண்டது.

தான் வரைந்த பாம்பைப் பார்த்து அம்மா பயந்துவிட்டதாக நினைத்தது அவளின் பிஞ்சு மனம் அம்மாவை ஜெயித்து விட்டதாக மகிழ்ந்தது.

அந்த சந்தோஷத்தில் வலது கையை பாம்பின் முகம்போல் குவித்து “உஸ்! உஸ்!”ஸென்று சப்தமெழுப்பி அம்மாவின் காலை கையால் கொத்தினாள்.

பயந்தவள்போல் கூடத்தில் அங்குமிங்கும் சின்னதாய்க் கத்திக் கொண்டே ஓடினாள் சரசு. விடாமல் துரத்தி பயம் காட்டினாள் வசு.

மகள் விரட்ட, தாய் ஓட ஒரே சிரிப்பும் சப்தமுமாய் களேபரப்பட்டது வீடு.

வெறுமே சாத்தியிருந்த வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மாசிலாமணி ரேழியில் செருப்புகளைக் கழற்றிப் போட்டுவிட்டு “என்னாச்சு! ஆத்தாளுக்கும் மவளுக்கும். போடுற சப்தம் தெருமொன வரையிலும் வருது!” என்று கேலி செய்து சிரித்துக் கொண்டே கூடத்தில் கால் வைத்தார்.

“ஹை! அப்பா வந்தாச்சு! அப்பா வந்தாச்சு! அப்பா! அப்பா!” என்று கத்திக்கொண்டே அப்பாவிடம் ஓடினாள் வசுக்குட்டி.

அப்பாவைக் குனிய வைத்துக் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா! அப்பா! இங்க பாரேன்! இங்க பாரேன்! நா நெறையா படம் போட்டுருக்கேன். நல்லாருக்கா சொல்லேன்.” தரையைக் காட்டினாள்..

“அப்பா! அம்மா இந்த யானையப் பாத்து சிரிக்கிதுப்பா! நா போட்டுருக்குற யான நல்லால்ல?”

யானையையும் அதன் வாலையும் பார்த்த மாசிலாமணிக்கு சிரிப்பு வந்தாலும் சர்வ ஜாக்கிரதையாக சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

“ஹை! யான ரொம்ப நல்லாருக்கு வசுக்குட்டி. நேத்து கோயில்ல பாத்தோம்ல அந்த யான மாரியே ஜம்முனு இருக்குடா கண்ணு” மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

“நல்ல அப்பா! என் செல்ல அப்பா!” மீண்டும் அப்பாவைக் குனிய வைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள் வசுக்குட்டி.

“வெவ்வவ்வே!” அம்மாவுக்கு அழகு காட்டிச் சிரித்தாள்.

“முகம் கழுவிட்டு வாங்க! காபி கொண்டு வரேன்!” கணவனிடம் சொன்னாள் சரசு.

“தோ வரேன் சரசு!” என்றவர் “வசுக்குட்டி ஒனக்கு அப்பா என்ன வாங்கிண்டு வந்ருக்கேன் பாரு!” ஒருபக்கம் யானையும் மற்றொரு பக்கம் குட்டியைப் பற்றியபடி நிற்கும் குரங்கு படமும் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த சாக்குத் துணிப்பையொன்றை மகளிடம் நீட்டினார்.

“ஹையா யான! ஹையா கொரங்கு! பள்ளிக்கூடத்துக்குப் போக புதுப்பை என்றபடி பரபரப்பும் சந்தோஷமுமாய் பையை கைநீட்டி வாங்கியவள் பையின் உள்ளே கைவிட்டுப் பார்த்தாள்.

“அப்பா! என்னப்பா இது?” என்று கேட்டுக் கொண்டே பைக்குள் இருந்தவற்றை வெளியே எடுத்தாள்.

ஒருடிராயிங் நோட்டும் கலர் பென்சில்கள் அடங்கிய அட்டை டப்பாவும் அவள் கையில் வந்து அவளைப் பார்த்துச் சிரித்தன.

தன் சந்தோஷ உணர்ச்சியை அடக்க முடியாமல் வீரிட்டுக் கத்தினாள் வசந்தி என்ற வசுக்குட்டி.

(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 3” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுத… ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 2 […]

  2. […] ஒருவார்த்தை சொல்வாயா பெண்ணே? பகுதி-4 ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுத… […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.