ஒருவார்த்தை சொல்வாயா பெண்ணே? பகுதி-4

தமிழ்ப் பெண்

காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. அதிகாரம், அந்தஸ்து, பணபலம், படைபலம் எதைக் கொண்டும் காலத்தை நொடிநேரம் கூட நிறுத்திவிட முடியாது. போன நொடி திரும்பியும் வராது.

அந்தக் காலம்தான் ஒவ்வொரு வரையும் உடலாலும் உள்ளத்தாலும் வாழ்க்கை நிலையிலும் எப்படியெல்லாம்
மாற்றிவிடுகிறது.

‘ஏழு வயதில் தரையில் படம் வரைந்து தாயிடம் கோபப்பட்டு சுவற்றில் பென்சிலால் கிறுக்கிக் கிறுக்கி ஏ,பி,சி,டி எழுதி அப்பாவிடம் செல்லமாய்த் திட்டு வாங்கிய அந்தச் சின்னஞ்சிறு சிறுமியா இது?’ என்று எண்ணுமளவுக்கு பதினேழு வயதுப் பதின்பருவச் சிட்டாய் வளர்ந்து நிற்கும் வசந்தி, பீரோவில் பதித்திருக்கும் கண்ணாடியின் முன் நின்று தன்னை இப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டாள்.

அன்று வெள்ளிக் கிழமை.

பள்ளிக்கு யூனிஃபார்ம் அணிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால்
மெரூன்கலர் பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட், வி ஷேப்பில் பச்சைநிற தாவணி அணிந்து அடர்த்தியான முடியை வெள்ளைநிற ரிப்பன் கொண்டு மடித்துக் கட்டிய ரெட்டைப் பின்னலோடு நின்றிருந்தாள்.

காதில் வளையம். நெற்றியில் சின்ன சைஸ் மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டு. பொட்டுக்கு மேல் துக்குணியூண்டு அம்மா வைத்துவிட்ட விபூதி.

கழுத்தில் சின்னச் சின்ன வெள்ளை நிற உருண்டை மணிகளைக் கோர்த்துக் கட்டியத் துவளும் மணிமாலை, வலது கையில் சுண்டுவிரல் அகலப்பட்டையான மெரூன் கலர் ஒற்றைப் ப்ளாஸ்டிக் வளையல்.

இடதுகையில் கறுப்புப் பட்டையோடு கூடிய சின்ன சைஸ் ரிஸ்ட்வாட்ச். இயற்கையாகவே அமைந்துவிட்ட ரோஜாக்கலர் இதழ்கள்.

குறைந்த அழகு உள்ள பெண்ணின் அழகைக்கூட அதிகப்படுத்திக் காட்டும் வளர் பருவ ஸ்வீட் செவன்ட்டீன். அழகை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்துப் பிறந்துவிட்ட வசந்தியை எப்படிக் காட்டும்?

பதினேழு வயதிலேயே தெறிக்கும் அழகு வசந்தி. பருவம் அவளைச் சுவீகரித்துக் கொண்டது போல அழகை அவளின் உடலெங்கும் வாரி வழங்கியிருந்தது.

வசந்தியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடினால் நிச்சயம் தோற்றுத்தான் போக வேண்டியிருக்கும்.

தாய் சரசு இவள் இல்லாத நேரங்களில் அடிக்கடி கணவன் மாசிலாமணியிடம் “பொண்ணு வளத்தியோ பீர்க்க வளத்தியோன்னுவாங்க. அது சரிதாங்க. நம்ம வசந்தி எப்பிடி வளந்து நிக்கிறா பாருங்க! அதும் எம்மாம் அழகா? எங்கண்ணே பட்டுடும் போலருக்குங்க. ஆனாலும் கொஞ்சம் கவலையாவும் இருக்குங்க இவ அழக பாத்தா!” என்பாள்.

சரசு இப்படிச் சொன்னாலும் பெண்ணின் அழகுபற்றி குரலில் பெருமை வழியும்.

“ஏய்! ஏய்! அங்க பாரு! அங்க பாரு! ஒங்காலுகிட்ட தேளு! தேளு!” சின்னதாய்க் கத்துவார் நாற்பத்திநாலு வயது மாசிலாமணி.

“எங்கங்க? எங்கங்க தேளு?” கணவனின் கத்தலால் பயந்து துள்ளி நகர்வாள் சரசு.

‘பகபக’வென்று சிரிப்பார் மாசிலாமணி. “நம்பிட்டியா! நம்பிட்டியா!” என்பார்

“அப்ப தேளு இல்லியா! பொய்யா சொன்னீங்க..ஓ! புரிஞ்சிடிச்சி! புரிஞ்சிடிச்சி! நா நம்ம பொண்ண ரொம்ப
அழகுன்னு சொல்லிட்டே,

எங்கடா பொண்ணுக்கு திருஷ்டிப்பட்டுடுமோன்னு பொய் சொல்லி என்னைய பயந்து நகர வெச்சு பொண்ணுக்கு திஷ்டி படாம திஷ்டிய கழிச்சிட்டீங்க. சரியா?”

இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள்.

இது அடிக்கடி நிகழும் நிகழ்வு.

இப்போதும் வசந்தி கண்ணாடிமுன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சரசுவும் மாசிலாமணியும் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“சரசு! நம்ம பொண்ணு அழகு மட்டுமா? படிப்புலயும் சுட்டி தா! பாத்துகிட்டேயிரு ப்ளஸ்டூவுல நம்ம பொண்ணுதா ஜில்லாவுக்கே ஃபர்ஸ்ட்டா வருவா!

பாரேன் படம் வரையுற போட்டீலெல்லாம் கலந்துகிட்டு எம்மாம் கப்புங்க சர்டிபி கேட்டுங்க வாங்கி வாங்கி அலமாரிபூரா நெரப்பினா வச்சிருக்குது!” இப்போது மாசிலாமணியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது.

“ஆமாங்க! ரெண்டு வருஷமா தானே! பெரிய க்ளாசுக்கு வந்தாச்சி, நெறைய படிக்கனும்னு படம் வரையிறத
நிப்பாட்டி வெச்சுருக்குறா!”

தங்கள் பெண் வசந்தியை நினைத்து இருவருமே ஏகத்துக்கும் பெருமைப்பட்டார்கள்.

காலை மணி எட்டே முக்கால் எனக் காட்டியது சுவர்க் கடிகாரம்.

“வசு! மணி எட்டேமுக்காலு ஆயிடுச்சி! ஸ்கூலுக்கு லேட்டாவுல. எங்க ஒஞ் சிநேகிதிங்கள காணும்?” ஈரக்கையைப் புடவைத் தலைப்பில் துடைத்தவாறே சமையலறையிலிருந்து வெளியே வந்த சரசு கேட்டு முடிப்பதற்குள்,

“டீ வசு! வசந்தி! கெளம்பிட்டியா? வாடி போலாம்!” வாசலிலிருந்து கோரஸாய்க் கத்தினார்கள் தோழிகள்.

“தோ! வரேங்கடி!” ஓரிரு புத்தங்களையும் ஒரே ஒரு நோட்டினை மட்டுமே எடுத்துக் கொண்டு அவற்றை மார்போடு அணைத்துக் கொண்டு அதன்மீதே குட்டியான டிஃபன் பாக்ஸை வைத்துக் கொண்டு, ரேழியில் கிடக்கும் செருப்பை மாட்டிக் கொண்டு, “அம்மா போய்ட்டு வரேம்மா!” சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தாள் வசந்தி.

“பத்ரமா பாத்து போய்ட்டு வா!” சரசுவின் குரல் உள்ளிருந்து கேட்டது.

“சரிம்மா!” கழுத்தைத் திருப்பி உள்ளே பார்த்து பதில் குரல் கொடுத்துவிட்டு தெருவில் இறங்கினாள்.

“ஹாய் வசந்தி! குட்மார்னிங்டி!” தோழிகளின் சேர்ந்து ஒலித்த குரல்கள்.

“வெரிகுட் மார்னிங் ஃப்ரண்ட்ஸ்!” தோழிகளை நேசமாய்ப் பார்த்து சிரித்தாள்.

புவனா, ரேகா, மாலதி, ராதா, கல்யாணி, வசந்தி மொத்தமாய் ஆறு இளங்குமரிகள் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும்.

ஒரே சிரிப்பும் கிண்டலுமாய் நகர்ந்தது தோழிகள் க்ரூப்.

புவனா ஏதோ தணிந்த குரலில் சொல்ல வெடித்துச் சிதறியது சிரிப்பலை.

தன் வீட்டு ஒட்டுத் திண்ணையில் ஊன்றுகோலோடு அமர்ந்திருந்த கோவாலு தாத்தாவுக்கு ‘கலகல’வென்ற சிரிப்போடு தன்னைக் கடந்து செல்லும் பேத்தி வயதுப் பள்ளிச் சிறுமிகளைப் பார்க்கக் காரணமின்றி கோபமும் எரிச்சலும் மண்டியது.

கையிலிருந்த தடியால் ஓங்கி தரையில் தட்டினார்.

“போகுதுங்க பாரு! படிச்சி கிளிச்சி ஒன்னு கலெக்டரு, ஒன்னு டாக்டரு, ஒன்னு இன்ஜினீரு, ஒன்னு வக்கீலு, ஒன்னு போலீசு, இன்னோன்னு தாசில்தாரா ஆகப் போவுதுங்க!

பொட்டக் களுதங்க!.சிரிப்ப பாரு! அடக்கமில்லாம. இதுங்கள சொல்லக் கூடாது. இதுங்கள பெத்ததுங்குள சொல்லனும்” சொல்லிவிட்டுக் கெட்ட வார்த்தையொன்றைச் சொல்ல க்ரூப்பின் காதில் கிழவனின் வார்த்தைகள் விழ, முடிந்தது கதை.

வசந்தியைத் தவிர மற்றவர்கள் கிழவனைப் ‘பிலுபிலு’வென்று பிடித்து ஒருவழி பண்ணிவிட்டார்கள்.

“ஏய்! வயசானவரு, சொல்லிட்டுப் போட்டம் விடுங்கடி!” என்று வசந்தி எவ்வளவோ சொல்லியும் மற்றவர்கள் விடுவதாயில்லை.

கிழவனை உண்டு இல்லை என ஆக்கிவிட்டுத்தான் நகர்ந்தார்கள்.

ஆயிற்று மெயின்ரோட்டில் கால்வைத்தது தோழிகள் படை.

அவ்வப்போது வந்து செல்லும் பஸ்களுக்காகக் காத்திருப்பவர்கள் உட்காருவதற்காக ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நாலுபேர் அமரக் கூடிய சிமென்ட் மேடையில் நெருக்கியடித்து அமர்ந்திருந்தார்கள் வாலிபப்பசங்கள்.

பஸ்ஸுக்காக ஒன்றும் அவர்கள் காத்திருப்பதாகத் தெரியவில்லை.

“டேய்! டேய்! வராங்கடா! வராங்கடா!” ‘சளசள’வெனப் பேசிக் கொண்டிருந்தவர்கள் சட்டெனப் பேச்சை நிறுத்திவிட்டு பத்தடி தூரத்தில் நடந்துவரும் வசந்தி&கோ-வை முடிந்தவரை கண்களால் அள்ளி அள்ளிப் பருகினார்கள்.

ஆனாலும் பசங்களின் பார்வை முழுவதும் வசந்தியின் மீதே தொன்னுத்தொன்பது விழுக்காடு பதிந்திருந்தது.

அவர்களின் மனம் ‘வசந்தியின் பார்வை தன்மீது எதேச்சையாகவாவது விழாதா?’ என ஏங்கியது.

அப்படியொரு பேறு வாய்த்தால் அவளைத் தன் தோற்றம் இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தலை முடியை கைகளால் தடவித் தடவி சீர் செய்து கொள்வதும் சேமியா மீசையை நீவிவிட்டுக் கொள்வதும் ஷர்ட்டை இழுத்துவிட்டு காலரை மடக்கிவிட்டு என்று ஏதேதோ செய்து கொண்டார்கள்.

வசந்தி க்ரூப் தங்களைக் கடந்து செல்லும்வரை பரபரப்பில் மூச்சுமுட்டும் வாலிபப் பசங்களுக்கு.

நண்பர்கள்தான் என்றாலும்கூட எங்கே வசந்தியின் பார்வை நம்மீது விழாமல் இவுனுக வேற எவம் மேலயாவது விழுந்திடுமோ என்ற கவலை ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் அரிக்கும்.

வசந்தி க்ரூப் தூரத்தில் சென்று மறையும் வரை கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மனதுக்குள் வசந்தியோடு வாழ்ந்து குடும்பம் நடத்தி பிள்ளைக்குட்டிகளையும் பெற்று விடுவார்கள்.

அந்த அளவுக்கு மனக்குதிரை கற்பனையில் றெக்கை விரித்துப் பஞ்ச கல்யாணிக் குதிரையாய்ப் பறக்கும். தினம் தினம் இந்த நேரத்தில் இதேபோல் நடக்கும் வைபவம் இன்றும் நடந்தது.

கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிக்கு தினம் நடந்தே செல்வதும் நடந்தே வீடு திரும்புவதும் பழக்கம் என்பதாலும் பேசிக் கொண்டே நடப்பதால் நடப்பது கொஞ்சமும் சிரமமாகத் தெரியாது என்பதாலும் வசந்தி க்ரூப் ஜாலியாகப் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

“டீ! பாருங்கடி! செல்வம் தியேட்டர்ல வேதம் புதிது படம்டி! சத்யராஜ் படம், பாரதிராஜா படம் வந்ருக்குடி.. போஸ்டரப் பாரேன். டீ அமலாடி! பாத்தியா?”

“அய்ய! கார்த்திக் படம்ன்னா போவுலாம். இந்த படத்துக்கெல்லாம்.. போயி..”

“டீ! டீ! விருபாட்சிபுரம் முருகன்ல மௌனராகம்டி. ஏய்! வாங்கடி! வாங்கடி! மௌனராகம் போலாண்டி!கார்த்திக் பஸ்ஸ நிறுத்தி ரேவதிகூட பேசுறது.

மிஸ்டர் சந்ரமௌலி மிஸ்டர் சந்ரமௌலினு ரேவதியோட அப்பாவ கூப்புடறுது. ரேவதி பயப்புடறது. நல்லாருக்கும்ல!”

“ஆமாம் போடி! அந்த படத்த அது வந்தப்பவே பாத்தாச்சு. மறுபடி போவணுமா?”

ஆளாளுக்குப் பேசினார்கள்.

“அங்க பாருடி அந்த போஸ்டர, டையமண்ட் தியேட்டர்ல பாக்யராஜோட இது நம்மாளுடி! ஏய், இது ஷோபனாதானேடி!”

“ஆமாண்டி லூஸு!”

“சொல்லுங்கடி! வர்ர நாத்திக் கெழம மேட்னி போவமா?”

“எந்த படத்துக்குடி?”

“டீ! வேதம் புதிது போவண்டி. அதுல ஒரு பாட்டு இருக்குடி கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவான்னு
அமலாவும் யாரோ புதுஸா ராஜாவாம்டி ஹீரோ! சூப்பர் பாட்டுடி! போவண்டி! வாங்கடி!”

கல்யாணியைத் தவிர மற்றவர்கள் கலகலப்பாய் பேசிக் கொண்டார்கள்.

“டீ!.கல்லு நீயேண்டி உம்முனு இருக்க!”

“ப்ச்! போங்கடி! எங்க வீட்ல தனியால்லாம் சினிமாக்கு விட மாட்டாங்கடி! அப்பா அம்மாவோடதா போகணும்.”

அய்யோ..அப்பா அம்மா வோடயா..நாம இன்னும் சின்னப் பாப்பாவா..அப்பா அம்மாவோட சினிமா பாக்க..

“அதானே!”

“ரொம்ப கஷ்டம்டி. அதும் லவ் சீன் வந்துட்டா போதும். இடது பக்கம் அப்பா, வலதுபக்கம் அம்மா, சீன பாக்குறதா, பாக்காம அங்க, இங்க பாக்குறதா குனிஞ்சு ஹேண் பேக்க நோண்டுறதானு நெளிய வேண்டியிருக்கும். அவுங்களோட பாக்கப் போவுறதவிட போகாமயே இருக்கலாம்.”

“ஃப்ரெண்ஸுகளோட போனாதா என்ஜாய் பண்ணலாம்ப்பா!” என்றாள் ராதா

“ஆமாண்டி! ஆமாண்டி!” ஆமோதித்தார்கள் மற்றவர்கள் வசந்தி உட்பட.

“நானும் தனியா வரேங்கடி ஒங்களோட. பாரு வீட்ல ரகள அடிக்கிறேன் ஃப்ரண்ஸ்களோட தாம் போவேன்னு!” உறுதியாய்ச் சொன்னாள் கல்லு..கல்யாணி.

அரசு மேல்நிலைப்பள்ளி என்ற பெயர்ப் பலகையோடு நின்றிருந்த அந்த ஆண், பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியின் வாசலை வசந்தி க்ரூப் அடைந்தபோது மணி ஒன்பது பதினாறு.

மணி ஒன்பது பதினெட்டு.

இன்று தனது வகுப்பறையில் தனது வாழ்க்கையே புரட்டிப் போடப்போகும் அந்த அவனை முதன்முதலாய் சந்திக்கப் போவது தெரியாமல் வகுப்புக்குள் தன் தோழிகளோடு கால் வைத்தாள் வசந்தி.

(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்