ப்ளஸ்டூ பி பிரிவு.வகுப்பில் நாற்பது மாணவர்களும் பனிரெண்டு மாணவியரும் படிக்கும் நிலையில் ஃபஸ்ட்
பிரியட் தொடங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்க பெரும்பாலும் மாணவர்கள் அனைவருமே ஆஜராகியிருந்தனர்.
அனைவர் கண்களும் ஆவலோடு வாசலை நோக்கியே திரும்பியிருந்தது வசந்தியின் வருகையை எதிர்நோக்கி.
உள்ளே நுழைந்த தோழிகளின் நடுவே அழக்குப் பெட்டகமாய் கைதேர்ந்த சிற்பி பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பம்போல் ‘பளிச்’சென்று தனியே தெரிந்தாள் வசந்தி.
“ஏய்! பாவாட தாவணீலயே இது இப்பிடி அழகா இருக்குனா, மார்டன் டிரஸ் போட்டா? கேட்ட பாலகிருஷ்ணனிடம் “டேய்! டேய்! ரொம்ப வாயப் பொளக்காதடா! நாலு ஈ, அஞ்சாறு கொசு வாய்க்குள்ளாற போய்ட்டு பாரு!”
கோவிந்தராஜு சொல்ல அசடு வழிந்தது பாலகிருஷ்ணன் முகத்தில். பக்கென்று வாயைப் பொத்திக் கொண்டான்.
முதல் பிரீயட் ஆங்கில வகுப்பு.
“என்னடி இங்கிலீஷ் வாத்யார இன்னும் காணும்?”.கேட்டாள் புவனா.
“ஐயோடி! என்னடி இவ இங்கிலீஷ் வாத்யார் வல்லியேன்னு ரொம்பத்தா கவலப்படுறா! நானே இன்னிக்கு டெஃபோடில்ஸ் போயம கேப்பேன்.
சரியா சொல்லாதவுங்கள வெய்யில்ல கிரவுண்டுல கொக்குபோட்டு நிக்க வெப்பேன்னுட்டு சார் சொல்லிருக்காரேன்னு பயந்துகிட்டு இருக்குறேன்.
நீ வேற இங்கிலீஷ் வாத்தியார் வல்லேன்னு ரொம்பத்தா கவலப்படுற!” என்றாள் ராதா.
“வசந்தி ஒன்ன கேக்கவே வேண்டாம். நீல்லாம் படிக்காமையா! ஏய் நா போயம சொல்றேன். சரியா சொல்றேனா பாரேன்” இது மாலதி.
“சொல்டி!” என்றாள் வசந்தி.
“டெஃபோடில்ஸ்.எழுதியது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்!”
“எழுதியதுன்னு மட்டும் தமிழ்ல சொல்லுவியா?” சிரித்தாள் வசந்தி.
“ஏய் நடுப்பற பேசாதடி மறந்துடும்!”
“சரிடி சொல்லு!”
“ம்.. சொல்றேன் கேளு!”
“ஐ வாண்டர்ட் லோன்லி ஆஸ் எ க்ளவுட்.
தட் ஃப்ளோட்ஸ் ஆன் ஹை ஓவர்
வேலிஸ் அண்ட் ஹில்ஸ்
வென் ஆல்
வென் ஆல்.. வென்ஆல்..”
தலையைச் சொரிந்தாள் மாலதி.
“என்னடி! மறந்து போச்சா? வென் ஆல் அட் ஒன்ஸ் ஐ சா எ க்ரௌவ்ட்.” ஞாபகப்படுத்தினாள் வசந்தி.
“ஆமா! ஆமா! இரு! இரு!
வென் ஆல் அட்வொன்ஸ்
ஐ சா எ க்ரௌவ்ட்..
எ ஹோஸ்ட் ஆஃப் கோல்டன் டெஃபோடில்ஸ்
பிஸைட் தி…பிஸைட் தி.. பிஸைட் தி”தடுமாறினாள் மாலதி.
மாலதியே சொல்லட்டுமென்று அமைதியாயிருந்தாள் வசந்தி.
“ஏய்! ஏய்! சொல்றேண்டி! சொல்றேண்டி!
பிஸைட் தி லேக் பெனித் தி ட்ரீஸ்
ஃப்ளட்டரிங் அண்ட் டான்ஸிங் இன் தி ப்ரீஸ்
அப்பாடி! ஏய் வசந்தி! சரியா சொல்லிட்டேனாடி! இந்த மொதோ பாரா ஆறு வரிய சொல்லவே தெணறுதுடி.! சார்ட்ட எப்பிடிதா சொல்லப்போறேனோ! பயமாருக்குடி!” பெருமூச்சு விட்ட மாலதி, “ஏண்டி இந்த போயம் மெமரி போயமே இல்ல. இத எதுக்குடி நெட்ருபண்ணணும்னு சொல்லி உசிர எடுக்குறாரு இந்த சார்!” புலம்பினாள்.
“இந்த போயம டெஸ்ட் வெப்பேன். இ.ஆர்.சி.எழுதச்சொல்லுவேன்னு சொல்லிருக்காரில்ல! நெட்ருபோட்டாதானே சரியா நம்மால எழுத முடியும்.
பப்ளிக் எக்ஸாமுல இந்த போயத்துலேந்து இ.ஆர்.சி.கேட்டா? நாம எழுதலாமில்ல. மார்க் கெடைக்குமில்ல.
சார்லாம் நல்லதுக்குதா சொல்லு வாங்கடி.நெட்ருபண்றது என்ன கஷ்டம்.
அர்த்தம் புரிஞ்சி படிச்சா க்ளாசிக் போயம்னு தோணும்டி இந்த போயம்” என்றாள் வசந்தி.
“அம்மாடி ஒங்கிட்டபோய் பொலம்பினேம் பாரு! லெக்சர் குடுத்து சாகடிப்பியே!” வசந்தியைச் செல்லமாய்க் கோபித்தாள் மாலதி
“ஏய் இவளே! சார் வரார்! சார் வரார்! ஆர் கே சார் வரார்டி! ஓட்ட வாய கொஞ்சம் மூடீண்ருடி!” கல்யாணியின் தொடையில் லேசாய்க் கிள்ளினாள் ரேகா.
“பத்து நிமிஷம் லேட்டாயிடுத்து! ம்.. ம்.. எல்லாரும் புக்க எடுங்க! புக்க எடுங்க!” சொல்லிக் கொண்டே அவசர அவசரமாய் உள்ளே நுழைந்தார் இங்கிலீஷ் வாத்தியார் ஆர்.கே.சார் என்று அழைக்கப்படும் ஆர்.கந்தசாமி.
“அட்டன்டன்ஸ் எடுக்கணுமே! அருணாச்சலம்!”
“ப்ரஸன்ட் சார்!”
“அமிர்தலிங்கம்!”
“ப்ரஸன்ட் சார்!”
மொத்தமாய் எடுத்து முடித்தாகிவிட்டது.
“கனகசபேசன்!”
எழுந்து நின்றான் மாணவன்.
“நேத்து என்ன பாடம் நடத்தினேன்? எதுவரை நடத்தி முடித்தேன்!”
“சார் நா நேத்து ஸ்கூலுக்கு வல்லிங்க சார்!”
“சார் டெஃபோடில்ஸ் போயம் மொத பாரா நடத்தினீங்க சார்!” தனஞ்செயன் பாதியளவு உடலைத் தூக்கி நின்று சொல்லி அமர்ந்தான்.
“நா ஒன்னக் கேட்டேனா? அவசரக்குடுக்க!.முந்திரிக் கொட்ட!”.
“சிவநேசன்!”
“சார்!” எழுந்து நின்றான்.
“எங்க போயாம முதல் நாலுவரிய சொல்லு!”
மலங்க மலங்க விழித்தான். “படிக்கில!”
“நீயெல்லாம் ஏம் படிக்கவர! எருமமாடு மேய்க்கப் போலாம்ல. போ! க்ளாஸ விட்டு வெளிய போய் நில்லு!”
அடுத்து தன்னைக் கேட்டுவிடுவாரோ என்று வயிற்றில் புளியைக் கரைத்தது முக்கால்வாசிப் பேருக்கு.
“வசந்தி!”
எழுந்து நின்றாள் வசந்தி.
“வாட் ஈஸ் த மீனிங் ஆஃப் டெஃபோடில்ஸ்?”
“கோல்டன் யெல்லோ கலர் ஃப்ளவர் சார்!”
“ஹூ ரோட் திஸ் போயம்?”
“வில்லியம் வோட்ர்ஸ் வொர்த் சார்!”
“குட்! முதல் நாலு வரிய” என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே வகுப்புவாசலில் வந்து நின்றார் ப்யூன் நல்லுச்சாமி.
“சார்! ஒங்கள ஹெச்சம் வரச் சொன்னாருங்க சார்!”
“என்னையா? கேட்டுக் கொண்டே கைகடிகாரத்தில் மணி பார்த்தார் ஆர்.கே சார்.
“க்ளாஸ் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. க்ளாஸ்ல இருக்குற எல்லாருக்கும் சொல்றேன்.
நாளை சனி, ஞாயிறு ஸ்கூல் லீவு. திங்கட் கிழம போயம சொல்லாதவங்கள கடுமையா பனிஷ் பண்ணுவேன்.
ஒழுங்கா படிச்சிகிட்டு வாங்க!” சொல்லிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினார்.
அடுத்த பிரியட் தமிழ். கே.டி.பி.எஸ்.வாத்தியார். ரொம்ப சாஃப்ட். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்போலும்.
தினம் எம்.ஜியாரின் படப்பாடல் நாலு வரியாவது பாடிவிட்டுதான் பாடம் எடுப்பார்.
இன்றும் “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்!” என்ற புரட்சித்தலைவர் பாட்டைப் பாடினார்.வகுப்பில்.
ஒரே கைதட்டல் சப்தம். ஜாலியாகப் போனது வகுப்பு.
அடுத்ததாய் மூன்றாம் பிரியட் பயாலஜி பிரியட். பத்து நிமிடங்கள் கடந்து போயும் ஆசிரியர் வரவில்லை.
வகுப்பறை ஒரே பேச்சும் சப்தமுமாய் இரைச்சலாக இருந்தது. பெஞ்சில் தாளம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள்.
“ஏய் இந்த பிரியட் முழுக்க சார் வராட்ட ஜாலில்ல!” கடைசி பென்ச் கன்னிகா சப்தமாய்ச் சொல்ல, “ஆமாண்டி! ஆமாண்டி! வராட்ட ஜாலிதாண்டி! என்றாள் வஞ்சுளவல்லி.
பெரும்பாலான மாணவிகளுக்கு சார் வரக் கூடாது என்பதுதான் விருப்பமாய் இருந்தது. மாணவிகள் சாமியிடம் வேண்டிக் கொண்டார்கள்.
இதற்குமேல் சார் வரமாட்டார் என்ற நம்பிக்கையில் முதல் நாள் பார்த்த இது நம்மாளு படத்தின் கதையை கோமதி வனிதாவுக்கு சின்னக்குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மொத்தத்தில் வகுப்பு சந்தைக் கடையாய் மாறியிருந்தது.
வகுப்பின் வாசலில் வந்து நின்றான் அந்த இளைஞன். அவனருகே நின்றிருந்த ப்யூன் நல்லுசாமி வகுப்பைச் சுட்டிக்காட்டி “இதான் ப்ளஸ் டூ பி செக்ஷன்!” என்று சொல்வது வகுப்பு மாணவ மாணவியருக்குக் கேட்டது.
மிஞ்சிமிஞ்சிப் போனால் இருபத்து மூன்று இருபத்து நான்கு வயதிருக்கலாம்.
நல்ல உயரம், உயரத்திற்கேற்ற உடல்வாகு, சுருள்சுருளாய் அடர்த்தியாய்க் கேசம், பளீரென்று சிவந்த மேனி, அரும்பு மீசை, தீர்க்கமான நாசி, நிகோடின் படியாதவை என்பதைப் பறைசாற்றும் பளிச்சென்ற உதடுகள். காதுகளின் கீழ்வரை நீண்ட கச்சிதமான கிருதா எனப் படுஸ்மார்ட்டாக இருந்தான் அந்த இளைஞன்.
வசந்தியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடினால் தோற்றுத்தான் போவோம் என்பதைப்போல் இந்த இளைஞனின் வசீகரம் பற்றிச் சொல்ல வார்த்தைகளைத் தேடுவதும் முடியாத முயற்சி தான்.ஏதோ அப்படி இப்படி என்று சொல்லலாம் அவ்வளவே.
படு சுறுசுறுப்பாய்த் தெரிந்த அவன் அணிந்திருந்த பேண்ட்டும், ஷர்ட்டும், பெல்ட்டும், சிக்கென்று அவன் உடலைப் பற்றியிருந்தது.
அதுவே அழகுக்கு அழகு செய்வது போல் அவனை இன்னும் அதிகமாக ஹேண்ட்சம்மாகக் காட்டியது.
ப்யூனுக்கு கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு படு ஸ்டைலாக வகுப்புக்குள் கால் வைத்து நுழைந்தான் அந்த இளைஞன்..
அப்படிப் படு ஸ்டைலாய் வகுப்புக்குள் நுழைந்த அந்த இளைஞன் தன் நெஞ்சினுள் நுழைந்து தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடப் போகிறான் என்பதை அறியாமல் வெகு மும்முரமாய் பயாலஜி புக்கில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் வசந்தி.
(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!