வகுப்புக்குள் நுழைந்த அந்த இளைஞன் படுஸ்டைலாய் இருகைகளையும் பேன்ட்டின் இரு பாக்கெட்களிலும் நுழைத்துக் கொண்டு, ‘விடுவிடு’வென்று நடந்து மேஜை வரை சென்று ஒரு யு-டர்ன் அடித்து ‘விருக்’கெனத் திரும்பி படுசுறுசுறுப்பாய், “ஹாய்! ஹலோ! டியர் ஸ்டூடென்ஸ்!” என்று சொல்லிக் கொண்டே வினாடி நேரத்திற்குள் மொத்த மாணவ மாணவியரையும் கண்களைச் சுழற்றிப் பார்த்தான்.
அந்த வினாடிக்குள் பார்வை வசந்தி மேல் விழுந்து அடுத்த மாணவியைப் பார்த்த கண்கள் சட்டென கண் சிமிட்டும் நேரத்துக்குள் மீண்டும் வசந்தியின் மீது பதிந்துவிட்டு நகர்ந்து மொத்தப் பேரையும் பார்த்து முடித்தது.
வகுப்பில் மொத்த மாணவ மாணவியரின் பார்வையும் அந்த இளைஞனின் மீதே மொய்த்தது. ‘குசுகுசு’வெனப் பேசிக் கொண்டார்கள் மாணவர்கள்.
“டேய்! புது பயாலஜி வாத்தியார் போலருக்குடா! சூப்பரா இருக்காரில்ல!”
“ஆமாண்டா! செமையா இருக்காருடா!”
மாணவர்களைப்போலவே மாணவிகளும்,” டீ! புது பயாலஜி சார் ரொம்ப அழகாருக்காருடி! இல்லடி!”
“ஆமாண்டி!” கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
“டியர் ஸ்டூடென்ஸ்! நான் அருண்குமார் M.F.A. (மாஸ்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்); அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியக் கலையில் முதுநிலை பட்டம் பெற்றவன்.”
சட்டென வசந்தி அவளையே அறியாமல் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
தொடர்ந்தான் அந்த இளைஞன்.
“நான் ஏன் அதிகப்படியா என்னை அறிமுகப்படுத்திக்கிறேன்னா, நீங்கள்லாம் நா ஒங்களோட புது பயாலஜி வாத்தியார்னு நெனச்சிருப்பீங்க! நெனச்சீங்க தானே?”
“ஆமா சார்! ஆமா சார்!” வகுப்பில் மாணவர்கள் சப்தமிட மாணவிகளின் பகுதி அமைதியாய் இருந்தது.
“ஹாய் கேர்ல்ஸ்! நீங்க அமைதியா இருக்கீங்க. நீங்கள்ளாம் அப்பிடி நெனைக்கிலயா!” என்று பார்வையைத் திருப்பி, மாணவிகளைப் பார்த்து லேசாய்ச் சிரித்தபடி கேட்டவனின் பார்வை வசந்தியின் மீது ப்ரத்யேகமாய்ப் படிந்துவிட்டு, மீண்டு மொத்த மாணவிகளையும் தொட்டுத் திரும்பியது.
“ஆ .. ஆ.. ஆமா சார்!” மாணவியர் சிலபேர் குரல் வெளியே வராமல் வாயை அசைத்தனர்.
ஒவ்வொரு மாணவியும் அவனின் அழகையும் ஸ்டைலையும் சுறுசுறுப்பையும் அவன் லேசாய்ச் சிரித்தபோது, அவன் கண்களும்கூட சிரிப்பதையும் பார்த்துப் பார்த்து, மெஸ்மெரிஸத்தில் கட்டுப்பட்டவர்கள் போல் அவனிடமிருந்து கண்களை எடுக்க முடியாமல் அமர்ந்திருந்தனர்.
மீண்டும் தொடர்ந்தான் அந்த இளைஞன்.
“நான் இந்த ஸ்கூல்ல ஆறாம் வகுப்புலேர்ந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்குமான டிராயிங் மாஸ்டரா அதுவும் தற்காலிக ஓவிய ஆசிரியரா நியமிக்கப்பட்ருக்கேன் மூன்று மாதத்திற்கு.
ஸ்கூல்ல வெறும் டிராயிங் மாஸ்டரா இருப்பது என் நோக்கமில்ல.
உலகப் புகழ்பெற்ற ஓவியர்களான லியனார்டோ டாவின்ஸி, மைக்கேல் ஆஞ்சலோ, ர்ஃபேல், டிட்டியன், ராஜா ரவிவர்மா, ஹென்ரிமத்தீஸ், நார்மன் ராக்வெல், எம் எஃப்.உசேன் இவங்கமாரி ஓவியம் வரையறதுல புகழ் பெறனும்கிறது என்னோட ஆச!
சும்மா ஒரு பயிற்சி அனுபவம் கெடைக்குமேன்னு இந்ந வேலைய ஏத்துக்கிட்டேன்.
இன்னிக்கு வேலைய ஏத்ததுமே முதல் வேலை உங்க வகுப்பு பயாலஜி வாத்தியார் நாலு நாள் விடுப்புல போயிருப்பதால இந்த க்ளாஸ பாத்துக்க அனுப்பப்பட்ருக்கேன்.
ஓ.கே.நா என்னை அறிமுப் படுத்திக்கொண்டாச்சு. ஒங்க பேர ஒத்தொத்தரா சொல்றீங்களா? கேர்ல்ஸ் மொதல்ல! லேடீஸ் ஃபஸ்ட் இல்லையா?” அழகாய்ச் சிரித்தான்; பற்கள் வரிசையாய்ப் பளீரிட்டன.
மாணவிகள் ஒவ்வொருவராய் எழுந்து பேர் சொன்னார்கள். சொன்னவர்கள் ஏனோ படபடப்பை உணர்ந்தார்கள்.
எழுந்து நின்றாள் வசந்தி. பாவாடை தாவணியும் ரெட்டை ஜடையும் பளீர் முகமும் பளிங்கு மேனியுமாய் அசத்தும் அழகில் தாவணி போட்ட தேவதையாய்த் தெரிந்தாள் வசந்தி. நொடி நேரம் அசந்து போனான் அருண்குமார்.
“நான் வசந்தி!” என்று அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது மீட்டப்பட்ட யாழின் இசைபோல் குரல் தேனாய் இனித்தது.
செவிக்குள் நுழைந்து இதயத்தில் இறங்கி “வசந்தி!” என்று பெயரை இதயம் எழுதிக் கொண்டது. சிம்மாசனம் போட்டு அவளை உட்கார வைத்தது.
அவளிடமிருந்து கண்களை அகற்ற முடியாமல் தவித்தான் அருண். அகல மறுத்து பிடிவாதம் பிடித்தக் கண்களை வலுக்கட்டாயமாய் நகர்த்தினான்.
‘ஒங்களப் போலவே ஒங்க பேரும் வெரி ஸ்வீட் அண்ட் க்யூட்!’ என்று சொல்ல மனமும் உதடுகளும் துடித்தன.
அடுத்து மாணவர்களும் பெயர்களைச்சொல்லி முடித்தனர்.
“ஓ.கே..ஓ.கே .இந்த பிரியட்ட நீங்க வெறுமனே அமைதியா ஒக்காந்திருக்க விரும்புறீங்களா? இல்ல போர்டுல நான் ஏதாவது படம் வரையவா அல்லது ஒங்கள்ள யாராவது வரையிறீங்களா?”
“படம் வரையிலாம் சார்! நீங்களே வரைங்க சார்!” மாணவர்கள் கோரஸாகக் கத்தினர்.
“ஓ.கே.மேஜை மீதிருந்த சாக்பீஸை எடுத்துக் கொண்டு ப்ளாக்போர்டு அருகில் சென்றான். அடுத்த அரைமணி நேரம் போர்டில் அவனின் வலதுகை நர்த்தனமாடியது.
காந்தியும், ஆபிரஹாம் லிங்கனும், கென்னடியும், மார்ட்டின் லூதரும், சுபாஷ் சந்திர போஸும், நர்த்தன நடராஜரும், மதுரை மீனாட்சியும், தஞ்சை பெரிய கோவிலும், ராஜராஜ சோழனும் எம்ஜியாரும், சிவாஜியும், சாவித்திரியும், சரோஜா தேவியும் கையில் ஒற்றை ரோஜாவோடு ஷாஜஹானும் பக்கத்தில் மும்தாஜும்அவன் வரைந்த ஓவியங்களில் உயிர் பெற்று வந்தாற்போல் சிரித்தனர்.
தஞ்சை பெரியகோயில் தன் பிரம்மாண்டத்தைக் காட்டியது. இறை உருவங்களின் பார்வையில் அருள் வழிந்தது.
அவன் கைகளுக்குத்தான் என்னவொரு வேகம், என்னவொரு லாவகம், என்னவொரு சுறுசுறு!
கிட்டத்தட்ட மாணவமாணவிகள் அனைவருமே விரிந்த கண்களும் திறந்த வாயுமாய் மெய் மறந்து போய் அந்த ஓவியங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
‘இந்த சாருக்கு இப்படியொரு திறமையா?’ அனைவர் நெஞ்சிலும் இதே எண்ணம்.
இயல்பாகவே ஓவியம் வரைவதில் பெரும் நாட்டமுள்ள வசந்தி கிட்டத்தட்ட தன்னையே மறந்து போனாள்.
அருண்குமார் வரைவதை முடித்துவிட்டு மேஜையருகே வந்தபோது மாணவ மாணவியரின் கைதட்டல் சப்தம் பள்ளியையே அதிர வைக்கும் அளவுக்கு எழுந்தது.
கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் கைதட்டல் சப்தம் நீடித்து முடிந்த பிறகும் தன்னை மறந்து கைத்தட்டலை நிறுத்தாமல் தட்டிக்கொண்டே இருந்தாள் வசந்தி.
அவளின் கைதட்டல் மட்டும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்க அனைவரின் பார்வையும் அவள்மீது திரும்பியது.
“டீ! வசந்தி! நீ மட்டும் கைதட்டிக் கிட்டே இருக்க. எல்லாரும் கைதட்டி நிறுத்தியாச்சு. நிறுத்துடி! கை தட்றத. எல்லாரும் ஒன்னையே பாக்குறாங்க பாரு!” வசந்தியில் காதில் கிசுகிசுத்துவிட்டு லேசாய் அவள் முதுகில் தட்டினாள் ரேகா.
பட்டென்று கைதட்டலை நிறுத்திய வசந்திக்கு வெட்கமாகிப் போனது; தலையைக்குனிந்து கொண்டாள்.
அருண்குமாரின் நெஞ்சுக்குள் மகிழ்ச்சி குற்றால அருவியாய் இறங்கி நிறைந்தது.
வசந்தியைப் பார்த்துப் பார்த்து பரவசமான கண்களை அதட்டி அகற்றி மற்ற மாணவர்களைப் பார்த்தான். அனைவரையும் பார்த்து நன்றி சொன்னான்.
“ஓ.கே. ஒங்கள்ள யாராவது வரையிறீங்ளா?”
அனைவரின் பார்வையும் வசந்தியைப் பார்த்தது.
ஒரே சமயத்தில் மூன்று நான்கு மாணவர்கள் எழுந்து நின்று, “சார் அந்த கேர்ள் வசந்தி இருக்காங்கள்ள அவுங்க சூப்பரா வரையு வாங்க சார்.
ஆன்யுவல் டேக்கெல்லாம் அவுங்கதான் சார் நிறைய படம் வரஞ்சு சொவத்துல ஒட்டு வாங்க..ஓவியப் போட்டீலலாம் அவுங்கதான் சார் எப்பவுமே ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குவாங்க!”என்று சொன்னார்கள்.
“இஸிட்?” வசந்தியைப் பார்த்தான் அருண்குமார்.
குனிந்தபடி அமர்ந்திருந்தாள் வசந்தி.
“மிஸ்.வசந்தி!” அழைத்தான்.
ம்கூம், அவள் நிமிரவே இல்லை.
“ஏய் வசந்தி! சார் கூப்புடறாரு பாரு! நீ பாட்டுக்கு குனிஞ்சிகிட்டு ஒக்காந்திருக்க. தப்பா நினைக்க மாட்டாரு!” என்றாள் ராதா.
மீண்டும் அழைத்தான் அருண்குமார்.
லேசாய் நிமிர்ந்தாள் வசந்தி.
“ஒங்குளுக்கு விருப்பமிருந்தா ஏதாவது படம் வரைய முடியுமா?” அவள் கண்களைப் பார்த்துக் கேட்டபோது அவள் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.
‘வேண்டாம்’ என்பதுபோல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினாள்.
அப்படி ஆட்டும் போது காது வளையங்கள் அப்படியும் இப்படியும் ஆடியபடி வசந்தியின் அழகை மேலும் கூட்டி வேடிக்கைக் காட்டியது.
அழகு இன்னமும் கூடிப்போய் அழகு தேவதையாய்த் தெரிந்தாள் வசந்தி. கூடிப்போன அழகோடு தேவதையாய்த் தெரிந்த வசந்தியை கண்ணிமைக்காமல் பார்த்தான் அருண்குமார்.
‘யப்பா!’ என்று நீட்டி முழக்கியது மனது.
‘டங்.. டங்.. டங்.. ‘பிரியட் முடிந்ததற்கான பெல் சப்தம்.
“ஓ.கே..வகுப்பு நேரம் முடிஞ்சிடிச்சு. கடந்த முப்பது நிமிஷத்துக்கும் மேலா உங்களோடு கழிந்த நேரம் எனக்குப் பெரு மகிழ்ச்சியையும் இனிய அனுபவத்தையும் குடுத்திச்சு.
மைடியர் ஸ்டூடென்ஸ் ஒங்க எல்லாருக்கும் நன்றி! வருகிறேன்! வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்!” சொல்லிக் கொண்டே வகுப்பிலிருந்து வெளியேறி நடந்தான்.
பத்தடி நடந்தவன் மெல்லத் திரும்பி வகுப்புக்குள் பார்த்தான் வசந்தி தெரிகிறாளா என்று.
அதே சமயம் வசந்தியும் தன்னையறியாமல் ஏதோ ஒரு உந்துதலில் வாசலை நோக்கித் திரும்பினாள்.
அருண்குமார் சார் லேசாய்த் தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது வசந்திக்கு. சட்டென தலையைத் திருப்பி டெஸ்க்கின் மீதிருந்த புத்தகத்தைக் குனிந்து பார்த்தாள்.
(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!