ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 7

மாலை மணி நாலு இருபது.

பள்ளி முடிந்துவிட்டதற்கான அறிவிப்பாய் “டங்.. டங்.. டங்..” என மணியடித்ததும் மாணவிகள் முதலில் வகுப்பை விட்டு வெளியே வந்தார்கள்.

பள்ளியின் மொத்த வகுப்பிலிருந்தும் மாணவிகள் கொத்துக் கொத்தாய் வெளியே வந்தார்கள்.

மாணவிகள் முதலில் பள்ளியிலிருந்து மொத்தமாய் வெளியேறிய பிறகுதான் மாணவர்கள் வெளியேற வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம் என்பதால், மாணவர்கள் வெளியேற அனுமதிக்கப்படக் காத்திருந்தார்கள்.

வெளியே வந்த மாணவிகளில் +2 சி செக்சன் மாணவிகளில் சிலர் ஓர் ஓரமாய்ப்போய் சிறுவட்டமாய் நின்று கொண்டார்கள்.

அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு லீவு என்பதால் ஏதோ சந்திக்க இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்போல
“ஏய்! இன்னும் ரெண்டுநாள் ஆகும்டி நாம பாத்துக்க. என்னமோ மாதிரி இருக்குடி. நீ வேற எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தோட பாதிக்கத தாண்டி சொல்லிருக்க, மீதிய இனிமே திங்கக்கெழமதானே கேக்கமுடியும்னு இருக்குடி!”

“ஆமாண்டி! ஆமாண்டி!” ஆமோதித்தார்கள் குழுவிலிருந்த இரு மாணவிகள்.

“ஏய்! இவளே படத்துல ராமராஜனும் சாந்திப் ப்ரியாவும் ஒரு பாட்டுப் பாடுவாங்கள்ள, அந்தப் பாட்டு நல்லாருக்கும்ல! அது என்ன சாங்டி?”

“ஏய்! ஏய்! நாஞ் சொல்றேண்டி! நாஞ் சொல்றேண்டி!” தொண்டையைச் செருமிக் கொண்டாள்

“சுஜி! டீ.! பாடறேன் கேளுங்கடி!

செண்பகமே செண்பகமே
தென் பொதிகை சந்தனமே
தேடிவரும் என்மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே!”

ராகம் போட்டுப் பாடினாள்.

“ஆமாண்டி! இந்த சாங்தாண்டி! இந்த சாங்தாண்டி! சூப்பரா இருக்கும்டி அந்தப் பாட்டு!”

கும்பலாய் ஒருஓரமாய் குழுமி நின்று பேசிக்கொண்டிருக்கும் மாணவிகளை பார்த்து “ஸ்கூல்விட்டு எத்தன நாழியாச்சு இன்னும் நின்னுக்கிட்டு என்ன வம்பு? அப்பறம் அவன் என்னப் பாத்து சிரிச்சான்; கிண்டலடிச்சான்.

ஆஹா மெல்லநட மெல்லநட மேனி என்னாகும்ன்னு பாடினான்னு ஹெட்மாஸ்டர்ட்ட போயி கம்ப்ளெயென்ட் பண்ண வேண்டிது.

ஸ்கூல் பெல்லடிச்சிதா, வெளியே வந்தமா வீட்டுக்குப் போனமான்னு இல்லாம இங்க நின்னுகிட்டு என்னா பேச்சு. போங்க! போங்க!” பொண்ணுங்கன்னாலே சிடுசிடுக்கும் மேத்ஸ் வாத்தியார் பள்ளி வாசலில் நின்று சத்தம் போட்டார்.

அந்த சப்தம் தனது க்ளாசிக் பஜாஜ் மோட்டார் பைக்கைத் தள்ளிக் கொண்டே பள்ளியிலிருந்து வெளியே வந்த
அருண்குமாரின் காதில் விழுந்தது.

குழுவாய் நின்ற பெண்களில் ‘வசந்தி இருக்கிறாளா?’ என்று பரபரப்பாய்த் தேடியது அவன் கண்கள்.

‘ம்கூம்! இவங்க காலேல நாம போன +2 பி செக்சன் பொண்ணுங்களா தெரியல. இவங்கள்ளபோய்
அந்தப் பொண்ணு வசந்திய தேடினா!’ ஏமாற்றத்தோடு வண்டியை ஸ்டார்ட் செய்தான் அருண்குமார்.

“வாங்கடி! வாங்கடி! போவோம். சிடுமூஞ்சி கத்த ஆரம்பிச்சிட்டாரு. ஏய் என்ன மறந்துடாதடி! நீயும் என்ன மறந்துடாதடி!” சொல்லிக் கொண்டே ஒருவர் கையில் ஒருவர் தட்டிக் கொண்டார்கள், ஏதோ இனிமே பாக்கவே மாட்டோம் என்பதைப்போல.

ரெண்டு ரெண்டு பேராய் வெவ்வேறு பக்கம் பிரிந்து நடந்தார்கள்.

வசந்தி க்ரூப் பள்ளியிலிருந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்து சிறிதுதூரம் சென்றபோது கடைத் தெருவுக்குள் நுழையும் இடது பக்கப் பாதை வர, “டீ! பட்டாணி கடேல பட்டாணி வாங்கலமா? தின்னுகிட்டே நடக்கலாம்ல. நேராப்போகாத கடைத்தெரு வழியா போவமா பட்டாணி வாங்கணும்ல” ராதா கேட்டபோது வசந்தியைத் தவிர மற்றவர்கள் “சரிடி! சரிடி!” என்றார்கள். வசந்தி மௌனமாய் இருந்தாள்.

“என்னங்கடி ஆச்சு இவுளுக்கு? உம்முனு இருக்கா. எதாவது ஜோக்கடிச்சிகிட்டே வருவா. இப்ப ஏ இப்பிடிருக்கா?” இது மாலதி.

“அதானே! தெரீல!” இது ராதா.

“எனக்குத் தெரிஞ்சிடுச்சு காரணம்!” இது கல்யாணி.

“சொல்டி! சொல்டி! கல்லு! ஏண்டி இப்டிருக்கா இவ?” இது ரேகா.

“காலேல தேர்ட் பிரீயட்க்கு அதா பயாலஜி க்ளாஸ்க்கு புது சார்! அதா டிராயிங்மாஸ்டரா இந்த ஸ்கூலுக்கு வந்ருக்கேன்னு சொன்னாருல்ல!”

“அருண்குமார் சார்!” கோரஸாகச் சொன்னார்கள் வசந்தியைத் தவிர மற்றவர்கள்.

“அவுரு! அவுரு!”

“சொல்லித்தொலடி!” சஸ்பென்ஸ் வெச்சுக்கிட்டு பரபரத்தார்கள்.

‘பக்’கென்றது வசந்திக்கு. ‘ஐயோ! கல்லு என்னத்தச் சொல்லப் போறா?’ நெஞ்சு படபடத்தது.

“அவுரு போர்டுல சூப்பர் சூப்பரா படங்க வரஞ்சாரில்ல! அதப்பாத்துட்டு நம்ம க்ளாஸே கை தைட்டிச்சில்ல! நாமல்லாம் கைதைட்டி முடிச்சும் வசந்தி முடிக்காம தட்டிக்கிட்டே இருந்தாள்ல. தனியா கை தட்டிக்கிட்டே இருந்தவள க்ளைஸ்ல பாய்ஸ்லாம் வேடிக்க பாத்தாங்கள்ல”

“பாய்ஸ் மட்டுமா? அந்த சாரும்னா வெச்ச கண்ண எடுக்காம வசந்தியையே பாத்துக்கிட்டுருந்தாரு!”

“சார் வசந்தியையே பாத்தத நாம் பாத்தேம்ப்பா!” இது புவனா.

“நீ மட்டுமா பாத்த. நானும்தா! நானும்தா!” ஒவ்வொருவராய்ச் சொல்ல அங்கே சிரிப்பலை எழுந்தது.

“பார்வேன்னா அப்பிடி இப்பிடி இல்ல!”

“ஆமாமா! ஆனா ஒன்னுடி அந்த சாரும் அழகுதாண்டி!”

“ஆமாம்ப்பா! ஆமாம்ப்பா!”

“நம்ம வசந்தி மட்டும் என்னவாம்?”

“அதா சார். அப்டியே மயங்..”

“ஏய்! வசந்திய ரொம்ப ஓட்டாதிங்கடி! அழுதுடப் போறா!”

“சும்மா விடுங்கடி அவள, தாமட்டும் கை தட்டிகிட்டு இருந்தத க்ளாஸ்ல எல்லோரும் வேடிக்க பாத்தத அவமானமா நெனைக்கிறாளோ என்னமோ! அதா பேசப் புடிக்காத மௌனமா வரா போலருக்கு!” வசந்திக்கு வக்காலத்து வாங்கினாள் ரேகா.

“அதுவும் சரிதாண்டி!” ஒருவழியாய் ஒத்துக் கொண்டார்கள் மாலதி, ராதா, புவனா, கல்யாணி நால்வரும்.

‘அப்பாடி!’ என்றிருந்தது வசந்திக்கு.

கடைத்தெருவுக்குக் கொண்டு விடும் பாதைக்குத் திரும்பியாயிற்று.

கடைத்தெருவில் அதிகக் கூட்டமில்லை. கடைத் தெருவிலேயே அமைந்திருந்த அங்காளம்மன் கோயில் வாசலில்தான் அனைத்துப் பேருந்துகளும் வந்து நிற்கும் என்பதால் பேருந்துக்காகக் காத்திருக்கும் சிலபேர்மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள்.

பேருந்து ஸ்டாப்பிங்கின் அருகிலேயே இருந்தது சிவசக்தி சைவ ஹோட்டல்.

ஹோட்டலிலிருந்து வெங்காய பஜ்ஜி, போண்டா, மசால் தோசையின் வாசனையும் டிகிரி காபியின் வாசனையும் காற்றில் மிதந்து வந்து அருகாமையில் நிற்பவர்களின் நாசிக்குள் நுழைந்து சாப்பிட வேண்டும் என்ற ஏக்க உணர்வை ஏற்படுத்தி சட்டைப் பாக்கெட்டை தட்டிப் பார்க்க வைத்தது.

பாக்கெட்டில் சில்லறை இருப்பவர்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்.காலி பாக்கெட்காரர்கள் வாசனையை மட்டும் நாசிக்குள் நிரப்பி ஆசையை முடித்துக் கொண்டார்கள்.

ஹோட்டலுக்கு நேரெதிரே இருந்தது கோணல்மாணலாக கனகராஜூ வளையல் கடை என்று எழுதப்பட்ட போர்டோடு கூடிய அந்த வளையல் கடை.

“டீ!.எனக்கு வளையல், ஸ்டட், ஹேர்கிளிப், ஸ்டிக்கர் பொட்டு வாங்கணும். வரீங்களாடி கடேல பாக்கலாம். வரதுதான் வந்தோம்; வாங்கிட்டுப் போயிடலாமில்ல!” என்றாள் புவனா.

க்ரூப்பாய் கடைக்குள் நுழைந்தார்கள்.

வளையல் கடைக்கு நேரெதிராயிருந்த ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் வாசல் தெரியக் கூடிய இடத்தில் அமர்ந்திருந்த அருண்குமார், சர்வர் டேபிளில் கொண்டு வைத்த காபியை ஆற்ற முற்பட்டபோது தற்செயலாய் அவன் கண்கள் வாசலைப் பார்த்தது.

பார்த்த கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தன.

‘ஹை! அந்தப் பொண்ணு வசந்தி!’

காபியை ஆற்றிக் குடிக்கப் பொறுமை இல்லை. ஆற்றிக் குடித்து பில்லுக்குப் பணம் கொடுத்து, அதற்குள்
வசந்தி க்ரூப் கிளம்பிவிட்டால்?

காபியைக் குடிக்காமலேயே வைத்துவிட்டு ரெண்டு ரூபாயை பில்லுக்குப் பணம் செலுத்தும் மேஜைமேல் வைத்துவிட்டு ஹோட்டலின் வாசலுக்கு வந்தான்.

வாசலில் நிறுத்தி வைத்திருந்த தனது வண்டி சீட்டின் அடியிலிருந்த பெட்டியைத் திறப்பது போல் பாவனை செய்து கொண்டே வளையல் கடையைப் பார்த்தான்.

வசந்தியின் தோழிகள் அனைவரும் வளையல், க்ளிப், பொட்டு, நெயில் பாலிஷ் என்று ஆளுக்கொன்றாய் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க வசந்தி எதிலும் ஆர்வம் காட்டாமல் நின்றிருந்தாள்.

அப்படி நிற்கும் வசந்தியின் மீது அருணின் (அருண்குமார்) பார்வை குவிந்தது.

‘ஐயோ! இதென்ன இப்படியோர் அழகு!’ என்று அவன் நினைக்கும் அதே நேரத்தில்.

‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்! நல்ல அழகியென்பேன்!

நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்!’ இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவையின் ஒலிபரப்பில் ஒலிபரப்பப்படும் பாடல் டீக்கடையிலிருந்து காற்றில் மிதந்து வந்து அருணின் நெஞ்சத்தில் ‘வசந்திதான் எத்தனை அழகு!’ என நினைப்பதை ஆமோதித்து அவனுக்கு நேசக்கரம் நீட்டியது.

வசந்தியைப் பார்த்துக் கொண்டே பாடலையும் ரசித்த அருணின் இதழ்களில் மெல்லிய சிரிப்பு இழையோடியது.

யாரோ தன்னைப் பார்ப்பது போல் ஓர் உள்ளுணர்வு.

‘ஓர் குறுகுறுப்பு வசந்திக்கு ஏற்பட்டது. ஏன் இப்பிடி தோணுது!’ என்று நினைத்தவாறு மெல்லத் திரும்பி கடைக்கு வெளியே பார்த்தாள்.

டூவீலரை ஸ்டார்ட் செய்யும் தோரணையில் வண்டி சீட்டில் அமர்ந்தபடி கழுத்தைப் பக்கவாட்டில் திருப்பி உதட்டில் புன்னகையோடு கடைக்குள் நிற்கும் தன்னைப் பார்த்தபடி இருக்கும் புதுடிராயிங் மாஸ்டர் அருண்குமாரைப் பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டுப் போனாள் வசந்தி.உடல் ‘குப்’பென்று வியர்த்தது.

“ஏய் வசந்தி! பாரேன் இந்த ஹேர்க்ளிப் வித்யாசமா சூப்பராருக்குல்ல. ஒனக்கு வேணுமா?” என்றுக் கேட்டபடித் திரும்பிய ரேகா.

வசந்தி வாசலில் யாரையோ பார்த்தபடி நிற்பதைக் கவனித்துவிட்டு வாசலைப் பார்க்க முடியாமல் மறைத்தபடி நிற்கும் ஒருநடுத்தர வயதுப் பெண்ணின் உருவத்தைத் தாண்டி கழுத்தை நீட்டி வாசலைப் பார்த்தாள்.

மெலிதாய்ச் சிரித்தபடி ஸ்டார்ட் செய்யப்பட்ட வண்டியில் அமர்ந்தபடி வசந்தியைப் பார்த்துக் கொண்டிருந்த அருணைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள் ரேகா.

‘இவரு! இவரு! இன்னிக்கு பயாலஜி பிரியடுக்கு வந்த புதுடிராயிங் மாஸ்டர் அருண்குமாரில்ல இவுரு!
க்ளாஸ்லியே வசந்திய அந்தப் பார்வ பாத்தாரு! இங்கியுமா?

வசந்திய யாருதா பாக்க மாட்டாங்க. அப்டியொரு அழகுனா வசந்தி! இந்த சார் மட்டும் என்ன எம்மாம் அழகு? அழக அழகு பாக்கதான் செய்யும்!’

வசந்தியும் அவுர பாக்குறாளா என்ன? இல்ல எதேச்சயா பாத்தாளா! எது எப்பிடீன்னாலும் நாம எதையும் தெரிஞ்சுக்கிட்டாமாரி காட்டிக்கக் கூடாது.

இவுளுங்க கிட்டல்லாம் போட்டுக் குடுத்தா, முடிஞ்சிது கத! வசந்திய வெச்சு செய்வாளுக! பாவம் வசந்தி!’ என்று நினைத்தவள் தன் பார்வையை மீண்டும் கையிலிருக்கும் ஹேர் க்ளிப் மீது செலுத்தினாள்.

தோழிகள் எத்தனை பேர் இருந்தாலும் க்ளோஸ் டு ஹார்ட்டாய் பெஸ்டீயாய் ஒருத்தர்தான் இருக்க முடியும். அப்படித்தான். வசந்திக்கு ரேகா, ரேகாவுக்கு வசந்தி.

இந்த விஷயம் என்றில்லை. இனி வசந்தியின் வாழ்க்கையில் அவள் சந்திக்கப்போகும் அனைத்து பிரர்ச்சனைகளிலும் அன்புத் தோழியாய் அவளைத் துவண்டுவிடாமல் தாங்கிப் பிடிக்கப்போவது ரேகாவைத் தவிர வேறு யாராய் இருந்துவிடப் போகிறார்கள்?

நடுக்கடைத் தெருவில் ஸ்டார்ட் செய்த வண்டியில் நீண்டநேரம் அமர்ந்திருந்தால் யாராவது கேள்வி கேட்டால் என்ன செய்வது என்று நினைத்தானோ என்னவோ, மீண்டும் கடைக்குள் முகத்தைத் திருப்பிக் கொண்ட வசந்தியிடம் சொல்லிக் கொள்வதுபோல ஆக்ஸிலரேட்டரை பிடித்து ‘டுர்.. டுர்..’ ரென்று சப்தம் எழுப்பிவிட்டு வண்டியை உருட்டி வேகம் கூட்டினான்.

அவ்வளவாய் டிராஃபிக் இல்லாததால் எதிரில் வாகனம் ஏதும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓடும் வண்டியிலிருந்து மெல்லத் திரும்பி வளையல் கடையைப் பார்த்தான் அருண்.

கடையிலிருந்து தன் வண்டி செல்லும் திசையை வசந்தி மெல்ல எட்டிப் பார்ப்பது தெரிந்தது.

தனக்குள் சிரித்துக் கொண்டான் அருண்.

(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுதி 7” மீது ஒரு மறுமொழி

  1. […] ஒரு வார்த்தை சொல்வாயா பெண்ணே? – பகுத… […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.