பள்ளியிலிருந்து நடந்து வந்து ஊர் எல்லையைத் தொட்டாகி விட்டது.
“வசந்தி! நாம பேசினபடி ஞாயித்திக்கெழம நாளைக்கு வேதம் புதிது படத்துக்குப் போறமா இல்லியா?” கேள்வி எழுப்பினாள் ராதா.
“ஆமாண்டி வசு! சொல்லுடி.நீ நிச்சயம்னு சொன்னாதா இன்னிலேந்தே அம்மாவ கெஞ்சி சம்மதம் வாங்க முடியும்!”
“அதானே! சொல்டி வசு!.நா ஒங்களோட தனியா சினிமாவுக்கு வர இன்னிலேந்து எங்கம்மாவுக்கு வேப்பல அடிக்கணும்டி!” என்றாள் கல்யாணி.
திடீரென வசந்திக்குப் படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போயிற்று.
“ப்ச்!” என்றாள் வசந்தி.
“ஏண்டி ஸ்கூலுக்கு வீட்லேந்து கெளம்பும்போது நன்னாதானேப்பா இருந்த! தீடீர்னு டல்லடிக்கிற!”
“அதெல்லாம் ஒன்னுமில்ல! நல்லாதான் இருக்கேன். ஆனா சினிமா..”அவள் சொல்லி முடிக்கும் முன் மற்ற நால்வரும் “ஆனா கீனால்லாம் வேண்டாம்! கட்டாயம் சினிமாவுக்குப் போறோம்” என்று சின்னதாய்ச் சப்தமிட்டார்கள்.
சம்மதிப்பதைத் தவிர வசந்திக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.
ஒருவர் கையை ஒருவர் தட்டி பாய் சொல்லிவிட்டுப் பிரிந்து அவரவர் வீடு நோக்கி நடந்தார்கள்.
வீட்டுக்கு வந்து கொல்லைப்புறம் சென்று முகம் கழுவிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள் வசந்தி.தாவணித் தலைப்பாலேயே ஈரமுகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“என்னாது துண்ட எடுத்து மொகத்த தொடைக்க மாட்டியா? தாவணித் தலைப்பாலயே தொடைக்கிற! புதுபழக்கமாருக்கு!” மகளைக் கிண்டலடித்தார் சரசு.
வசந்தி பதிலேதும் சொல்லவில்லை. சாதாரணமாய் அம்மாவை விளையாட்டாய் வம்புக்கிழுப்பவள்தான் வசந்தி.
ஆனாலும் என்ன காரணமோ அமைதியாய் இருந்தாள்.
“வசந்தி இந்தா கைமுறுக்கு! தேங்காண்ணேயில பண்ணிருக்கு. கோமதிக்கா கொண்டு குடுத்திச்சி!” அம்மா குடுத்த முறுக்கை எந்த பரபரப்புமின்றி வாங்கிக் கொண்டாள் வசந்தி.
‘தினமும் ஸ்கூல் விட்டு உள்ளே வரும்போதே அம்மா பசிக்குதும்மா! திங்க என்ன வெச்சுருக்க? என்னம்மா
வெச்சிருக்கன்னு பறந்தடித்துக் கொண்டு கேட்கும் மகள் இன்று எத்தபரபரப்பும் காட்டாது ஏன் திங்க ஒன்னுமில்லையாம்மா’ என்றுகூடக் கேட்காமல் இருப்பதோடு கொடுத்த முறுக்கைக்கூட அசுவாரயமாய் வாங்கிக் கொண்டது சரசுவுக்கு வியப்பாய் இருந்தது.
வந்ததுமே கொடுப்பதைத் தின்றுவிட்டு பள்ளிக்கூடம் போனதிலிருந்து திரும்பி வந்தவரை நடந்தையெல்லாம் சொல்பவள், ‘அம்மா நா ஸ்கூல் போனப்புறம் இங்க என்னம்மா நடந்துது?’ என்று கேட்டுத் தொணதொணப்பவள் இப்போது இப்படி அமைதியாய் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“வசந்தி! என்னாச்சு ரொம்ப அமைதியாருக்க? எந்த வாத்யாராவது திட்டினாங்களா? இல்லாட்டி பெரிய க்ளாஸ் ஆச்சே பாடம் அதிகமா நடத்துறாங்களா?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல. நெறையா நெட்டுரு பண்ண வேண்டிருக்கு. நெறைய எழுத வேண்டிருக்கு. விடேன்! தொணதொணங்காத!” அம்மாவின் கேள்விகளைப் புறக்கணித்து விட்டுத் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் வசந்தி.
“சரி! சரி! நீ உன் வேலையப் பாரு!” நகர்ந்தாள் சரசு.
“பாரு! நம்ம பொண்ணு பெரிய க்ளாஸில்ல படிக்கிது. அதா அதுக்கு நம்மகிட்ட பேசக்கூட நேரமில்ல. அது என்ன இன்னும் சின்னப் புள்ளையா நம்ம இடுப்ப கட்டிக்கவும். பொடவ தலப்ப புடிச்சிகிட்டு சுத்தவும்!” பெருமைப்பட்டுக் கொண்டே சமயலறைக்குள் நுழைந்தாள் சரசு.
புத்தகங்களும் நோட்டுக்களுமாய் வசந்தியைச் சுற்றிக் கிடந்தன. தமிழ், ஆங்கிலம், ஃபிஸிக்ஸ், பயாலஜி என்று புத்தகங்களை மாற்றி மாற்றி எடுத்துப் பிரித்துப் படிக்க முயன்றாள்.
ம்கூம்! எந்த பாடத்திலும் மனம் லயிக்கவில்லை!
‘அப்பா! எப்பிடி அந்த மாரி சரசரசரன்னு படம் வரைய முடியுது. அப்டியே ராஜராஜ சோழன பாத்தா எவ்வளவு கம்பீரம். தஞ்சாவூர் பெரியகோயில் அப்டியே தத்ரூபமா!
நாம போன வருஷத்துக்கு முந்தின வருஷம் தஞ்சாவூர் போனப்ப பெரியகோயிலுக்குப் போனமில்ல. அந்த மாரியே தானே அவுரு வரைஞ்சதும் இருந்திச்சு!’
சட்டென அருணின் சிரிக்கும் கண்களும் அழகு முகமும் நெஞ்சுக்குள் எட்டிப் பார்த்தது.
‘அவுரு நம்ம ஃப்ரெண்ஸ்லாம் சொல்லுறாப்ல அழக்கா இருக்காரில்ல!’
நாம வளையல் கடேல நிக்கிம்போது வண்டிய ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே நம்மள பாத்து சிரிச்சாரில்ல! ஏஞ்சிரிச்சாரு!’ மனது ஒன்னும் தெரியாத பாப்பாவைப்போல் நீட்டி முழக்கியது.
‘நல்ல வேள நாம மொகத்த திருப்பிக்கிட்டோம்!’
‘ஆமா திருப்பிக்கிட்ட. அப்றம் ஏன் வண்டி கொஞ்சதூரம் போனப்பறம் எட்டிப் பாத்த?’ மனசு கிடுக்கிப்பிடி போட்டது.
‘ப்ச்! படிக்க வேண்டியது, எழுத வேண்டியது நெறைய இருக்கு. நீ வேற தேமேன்னு இருக்குற என்னைய தூண்டி விடாத!’ வம்படிக்கும் மனதை அதட்டி அடக்கினாள்.மனது கேட்கும் கேள்விகளிலிருந்து தப்பிக்கப் பார்த்தாள்.
ஃபிஸிக்ஸ் புக்கை எடுத்து மின்னோட்டவியல் பாடத்தை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டாள்.
கையில் கூரான முனையோடு கூடிய பென்சில்.
கண்கள் பாட வரிகளில் மேய்ந்து மேய்ந்து அலுத்துப் போனது. அவளை அறியாமையிலேயே மனது வேறொரு காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் பாட வரிகளில் ஒருவரியைக்கூட மனது தன்னிடம் பதிய வைத்துக் கொள்ளவில்லை.
“ச்சே! மண்டேல எதுவுமே ஏறமாட்டேங்குது!” கையிலிருந்த பென்சிலை வேகமாய் புத்தகத்தில் போட்டாள்.
“டப்!” என்ற சப்தத்தோடு பென்சில் புத்தகத்தின் மீது விழுந்தது.
அந்த ‘டப்’ சப்தம் வசந்தியை நிகழ்வுக்குக் கொண்டு வர சட்டென அவள் கண்களில் பட்டது புத்தகப் பக்கத்தின் ஓரத்திலிருந்த வெற்றிடத்தில் அவளை அறியாமல் அவள் வரைந்திருந்த படம்.
தூக்கி வாரிப் போட்டது வசந்திக்கு.
படத்தில் சிரித்துக் கொண்டிருந்தான் அருண். ஒருசிறு தவறுகூட இல்லாமல் அச்சு அசலாய்.
சின்னச் சின்ன பொடி எழுத்துக்களில் ‘அருண்குமார்’ என்று வேறு எழுதியிருந்தாள்.
வியர்த்துப் போனது வசந்திக்கு.
‘என்னதிது! புது சார நாம் போயி எதுக்கு? ஏன்?’
‘ஐயோ! ரொம்ப யோசிக்கிற. மொத்தமா புது சார அஞ்சு நிமிஷமோ பத்து நிமிஷமோதா பாத்ருப்ப! பெரும்பாலும் தலையக் குனிஞ்சிகிட்டேதான ஒக்காந்திருந்த!
அதுக்குள்ளயே இப்பிடி ஒன்ன அறியாமலேயே வரஞ்சுருக்குற! அதுவும் அச்சு அசலா அப்டியே! தினம் தினம்தா ஸ்கூல்ல நெறைய சார பாக்குற இதுவர எந்த சாரையாவது இப்பிடி ஒனக்கே தெரியாம ஒங்கையி படமா வரஞ்சிருக்கா! சொல்லேம் பாப்பம்!’
மனசு அவள் எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாமல் அவளுக்கு செக் வைத்தது.
“வசந்தி! டீ வேணுமா! குடிக்கிறயா?” கேட்டுக் கொண்டே அம்மா நடந்துவரும் காலடி ஓசை.
‘படக்’கென்று புத்தகத்தை மூடினாள் வசந்தி.
‘டீ குடித்தால் தேவலாம்!’ போலத்தான் இருந்தது வசந்திக்கு. டீ டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டாள்.
‘பாவம் கொழந்த! எம்மாம் புத்தகம் பெரிசு பெரிசா. கனம் கனமா, கஷ்டப்பட்டு படிச்சு க்ளாஸுலயே பஸ்ட்டால்ல வருது!’ மகளை மனதால் மெச்சிக்கொண்டே நகர்ந்தாள் சரசு.
டீயைக் குடித்துவிட்டு டம்ளரை நகர்த்தி வைத்தவள். மீண்டும் ஃபிஸிக்ஸ் புக்கை எடுத்து அருணின் படம் வரைந்த பக்கத்தைத் திறந்து படத்தைப் பார்த்தாள்.
‘ம்கூம் யாராவது பார்த்தால் வம்பாகி விடும்’ என்று நினைத்தவள் அருணின் படம் சிதையாதவாறு படத்தைச்
சுற்றியிருக்கும் பேப்பரைக் கிழித்து படத்தைத் தனியாக எடுத்தாள்.
‘எதுக்கு சாரோட படம்ல்லாம்? கசக்கி சுருட்டி கிழிச்சுப் போட்டுடலாமா?’ என்று தோன்றிய நொடி “ம்கூம்.. ம்கூம்.. கிழிச்செல்லாம் போடவேண்டாம்!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டே சட்டென எழுந்தாள்.
தனது பள்ளிப் பாடப்புத்தகங்ளையும் வளையல், பொட்டு, பவுடர் அயிட்டங்களையும் வைக்கும் அலாமாரியில் அலமாரியின் தட்டுக்களின் அடியில் போடும் பழைய ந்யூஸ் பேப்பரின் அடியில் பத்திரப்படுத்தினாள்.
இரவு மணி எட்டு.
ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி. தூர்ஷனில் ஒலியும் ஒளியும் ஆரம்பிக்க பத்து நிமிஷம் இருக்கும்போதே, வீட்டில் டிவி இல்லாத வீட்டினர் அறிந்தவர் தெரிந்தவர் பலபேர் வந்து கூடத்தில் குழும கூடம் நிரம்பிப் போனது.
சென்ற வெள்ளி வரை அனைவரோடும் அமர்ந்து சிரிப்பும் கைதட்டலுமாய் ஒலியும் ஒளியும் பார்த்தவளுக்கு இன்று இப்போது கூடத்திலிருந்து வரும் ‘சளசள’ சப்தம் எரிச்சலைத் தந்தது.
“வசந்தி! ஒலியும் ஒளியும் ஆரம்பிக்கப் போவுது நீ பாக்க வல்ல?” அம்மா சரசு அறையின் கதவைக் கொஞ்சமாய்த் திறந்து கழுத்தை நீட்டி வசந்தியைக் கேட்டாள்.
“இல்ல! நாம் படிக்கணும். திங்கக்கெழம டெஸ்ட்!”
“வசந்தி வல்ல? யாரோ கேட்க.
“இல்ல, அவுளுக்கு திங்கக்கெழம பள்ளிக் கூடத்துல டெஸ்ட்டாம். பெரிய க்ளாஸ் படிக்கிறாள்ல!” அம்மா சொல்வது வசந்தியின் காதில் விழுந்தது. அம்மாவின் குரலில் பெருமை வழிந்தது.
“ஆமாமா! பெரிய க்ளாஸ்ல்ல படிக்கதா வேணும். அதும் வசந்தி படிக்கிற புள்ள! படிப்புதா அதுக்கு முக்கியம்!” அம்மாவை ஆமோதித்தார்கள் வந்திருந்த வந்தவர்களில் சிலர்.
தன்னைச் சுற்றிக் கிடக்கும் புத்தகங்களையும் நோட்டுக்களையும் எடுத்துக்கூட வைக்காமல்
வெறும் தரையில் அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டாள் வசந்தி.
அப்படிப் படுத்துக் கொண்டவள் ஐந்து நிமிடம் ஆவதற்குள் அசந்து தூங்கிப் போனாள்.
ஒலியும் ஒளியும் முடிந்து அனைவரும் போயாயிற்று.
“என்னது வசந்தி அப்பாவ இன்னும் காணும்? லேட்டாவுது!” தனக்குத்தானே கேட்டுக் கொண்டே வாசலுக்குப் போய் தெருவில் கண்களை ஓட்டிய சரசுவின் பார்வையில் தெருக்கோடியில் கணவன் மாசிலாமணி வருவது தெரிந்தது.
“வராரு! வரட்டும்” என்றபடி உள்ளே வந்தவள் “வசந்தி! அப்பா வந்தாச்சி. மணி ஒம்போதாகப் போவுது சாப்புட
வா!” என்றபடி வசந்தியின் அறைக்கதவைத் திறந்தவள் சுற்றிலும் புத்தகங்களும் நோட்டுக்களும் கிடக்க தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் வசந்தியைப்பார்த்து தூக்கிவாரிப் போட்டது..
“அட சாமி! வசந்தி சாப்புடாமல்ல தூங்கிட்டா!.படிச்சிப் படிச்சிக் களைச்சுப் போச்சுப் புள்ள!” மகளைப் பார்த்து பாவப்பட்டாலும் பெருமையாய் இருந்தது வசந்தியை எண்ணி.
ரேழியில் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு கூடத்திற்குள் கால் வைத்ததுமே மாசிலாமணியின் கண்கள் மகளை இங்குமங்கும் தேடின.
“புள்ள எங்க சரசு?” மனைவியைக் கேட்டான்.
“அவ ரூம்ல போய் எட்டிப் பாருங்க! தெரியும் ஒங்க பொண்ணு என்ன பண்ணுறான்னு”
லேசாய்க் கதவைத் திறந்தவன் புத்தகங்களுக்கும் நோட்டுக்களுக்கும் நடுவில் தரையில் படுத்துத் தூங்கும் மகளைப் பார்த்துவிட்டு சரசுவிடம் “என்னாது புள்ள இப்பிடித் தூங்குறா! சாப்டுச்சா?”
“இல்ல!”
“இல்லியா? நீ ஏ அவள சாப்டாம தூங்கவிட்ட?”
“இப்ப தாங்க பத்து நிமிஷமாச்சு. ஒலியும் ஒளியும் பாத்துட்டு எல்லாரும் வீட்டுக்குப் போனாங்க. சரி எல்லாருந்தா போயாச்சே வசந்திய சாப்புட வான்னு கூப்புடலாம்னு ரூமுக்குப் போனா, இப்பிடி தரேல படுத்துத் தூங்குறா!”
“எழுப்பி சாப்பாடு குடு!”
“ஐயோ! எழுப்பினா வள்ளுனு விழுவாங்க!”
“அப்ப எனக்கும் சாப்பாடு வேண்டாம்!”
“என்னங்க இது?”
“பின்ன! படிக்கிற பொண்ணு. நெதமும் அம்மாந்தூரம் நடந்து ஸ்கூலுக்கு போய் படிச்சிட்டு திரும்பவும் நடந்து வீட்டுக்கு வந்து எத்ததத்தனாம் பெரிய புஸ்தகத்தல்லாம் படிக்கிது எம்பொண்ணு! சும்மாவா?
ராப்பட்டினி கெடந்தா என்னாகும் ஒடம்பு? படிக்கத் தெம்பு வேண்டாம். ப்ளஸ் டூ நல்லபடியா நெறைய மார்க்கு வாங்கி பாஸ் பண்ணிட்டான்னு வையி! அது எம்மாம் படிக்க ஆசப்பட்டாலும் படிக்க வெப்பேன் எம்மவள.
பாரு! பாரு! எம்மவ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி பெரிய உத்தியோகத்துக்குப் போயி!”.நா தழுதழுத்தது மாசிலாமணிக்கு.
தங்கள் மகளின் வருங்காலம் பற்றி பெரும் கனவோடும் எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் மாசிலாமணிக்கும் சரசுவுக்கும் காலம் எதைத் தரக் காத்திருக்கிறது?
(சொல் தொடரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!