ஒரு மதிய வேளையில் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வங்கிக்குள் வயதான பெரியவர் ஒருவர் நுழைந்தார். அப்போதுதான் உணவு இடைவேளை முடிந்து ஊழியர்கள் இருக்கைக்கு வந்திருந்தனர். வாடிக்கையாளர்களும் யாருமில்லை.
வங்கிக்குள் நுழைந்த அந்தப் பெரியவர், வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் ஒவ்வொருவரையும் பார்த்தார். யாரும் அவரைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
அவர் வங்கி மேலாளரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்தப் பெரியவர் தன்னைப் பற்றி சொன்னதும் வங்கி மேலாளர் தன் இருக்கையிலிருந்து எழுந்து விட்டார்.
காரணம், அந்தப் பெரியவர் அந்த வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர்.
அவர் ஓய்வு பெற்றுப் பல வருடங்கள் ஆனதாலும், அந்தக் கிளை முழுவதும் புதிதாய்ப் பணியில் சேர்ந்தவர்களாக இருந்ததாலும் அவரை யாருக்கும் தெரியவில்லை.
அவர் தன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டதும் மேலாளர் மற்ற ஊழியர்களை அழைத்து அவருடைய வேலையினை முடித்துக் கொடுத்தார்.
தனது வேலை முடிந்ததும் சற்று நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ஊழியர் ஆர்வத்துடன் “ஐயா, உங்களின் பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார்.
“சதுரங்க (செஸ்) விளையாட்டு முடிந்ததும், ராஜா மற்றும் வீரர்களை ஒரே பெட்டியில் போட்டு மூடி விடுவார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்றார் அந்த முன்னாள் நிர்வாக இயக்குநர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!