ஒற்றுமையே பலம்!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில், அனைவருக்கும் தாழ்வு!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
இப்படி ஒற்றுமை குறித்த எத்தனையோ சிந்தனை முத்துக்களை, நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.
இருந்தாலும் இன்று நாம் வாழும் குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில் மற்றும் சமூகத்துடன் இயைந்து ஒன்றுபட்டு ஒற்றுமையாகதான் இருக்கின்றோமா?
சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர்களது குடும்பம் மிகப் பெரிய குடும்பம். கடந்த நான்கு தலைமுறைகளாக ஒன்றாக கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள்.
“இது எப்படி சாத்தியம்?” என்று வினவினேன்.
அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனை அப்படியே சொல்கிறேன்.
“எங்க குடும்பத்துல ஒவ்வொருவரும் ஒரு மாதிரி. ஆனால் எல்லோரும் நல்ல மாதிரி” என்றார்.
ஒருவேளை உணவு உண்ணும் போதே நமக்கு பல சுவைகளின் சேர்க்கை, அதாவது இனிப்பு, புளிப்பு காரம் மற்றும் உவர்ப்பு என்ற பல சுவைகள் ஒன்றாகிய புதுச்சுவை தேவைப்படுகிறது.
ஒரு திரைப்படம் அனைவரும் ரசித்துப் பார்க்கும் படி அமைய வேண்டுமென்றால், ஒன்பது கலைகளும் ஒன்றாகி நவரசத்துடன் நம்மைப் பரவசப்படுத்த வேண்டி இருக்கிறது.
இந்த இயற்கை இருக்கிறதே! அது ஒன்று போல் மற்றொன்றை அமைப்பது இல்லை.
எனக்கு இப்போது எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் கூறிய ஒரிய நாட்டு மக்களிடம் பேசப்படுகின்ற கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது.
வானவில் அழகு
ஒருகாலத்துல நிறங்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டனவாம்.
எந்த நிறம் சிறந்தது? என்பதுதான் சண்டைக்குக் காரணம்.
பச்சை நிறம் “நான்தான் வளர்ச்சியின் அடையாளம். மரம், செடி, கொடி, புல், என எல்லாமே பசுமை நிறத்தில் இருப்பதால்தான் சிறப்பாக ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரித்து உலகத்துகெல்லாம் கொடுக்க முடிகிறது. ஆகவே நான்தான் சிறந்தவன்” என்றது.
நீல நிறமோ “ஏய், இங்கபாரு நீ பூமியை மட்டும் வைத்துக் கொண்டு பேசுகின்றாய். ஆகாயத்தையும் கடலையும் உற்றுப் பார். ‘நீல நிறம்; வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்’ என்று கவிஞர்கள் கூட என் புகழைப் பாடி இருக்கின்றார்கள். ஆகவே நான்தான் பெரியவன்” என்றது.
உடனே மஞ்சள் நிறம் “என்ன உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியமா? வெளிச்சம் இருந்தால்தான் நிறத்தையே பார்க்க முடியும். உலகத்துக்கே வெளிச்சம் கொடுக்குற சூரியனும் சந்திரனும் என்ன நிறம்? மஞ்சள் நிறந்தானே! அதுமட்டுமில்லாமல் நான்தான் மங்களத்தின் அடையாளம். எனவே நான்தான் மிகப்பெரியவன்” என்றதாம்.
அங்கே வந்த சிவப்பு நிறம் “நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உலகத்திலேயே மிகச்சிறந்தது சிவப்பு நிறம்தான். எல்லோர் உடம்பிலும் ஓடுகின்ற ரத்தம் சிவப்புத்தானே? நானே தைரியத்தின் அடையாளம். எனவே நான்தான் சிறந்தவன்” என்றது.
இப்படியே ஒவ்வொரு நிறமும் சண்டையிட்டுக் கொண்டன.
அப்போது வானத்தில் திடீரென்று பலத்த சத்தத்துடன் இடியோடு மழை பெய்யத் துவங்கியது. நிறங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறின.
மழை மெல்ல ஓயக்கூடிய நேரத்தில் பயந்த நிறங்கள் மெதுவாக அருகருகே வந்து ஒன்றையொன்று நெருங்கிக் கொண்டன. உடனே வானத்தில் ஏழு நிறத்தில் அழகான ஒரு வானவில் உண்டானது.
அதைக் கண்ட நிறங்கள் ஆச்சர்யம் அடைந்தன. அப்போது வானத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
“ஒவ்வொரு வண்ணமும் அதனதன் வழியில் தனித்துவமானதுதான். அனைத்தையும் விட அழகானது, அனைத்து நிறமும் இப்படி ஒன்றாக இருக்கும் போது உருவாகும் வானவில்தான்.”
அப்போதுதான் நிறங்களுக்கு தங்களைப் பற்றி நிஜம் புரிந்தது என்கிறது கதை. வேற்றுமையில் ஒற்றுமையே அழகு.
நம்ம பாரதத்தை எடுத்துக் கொள்வோம். காஷ்மீர் தலை என்றால் கன்னியாகுமாரி கால். இதில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள்.
அன்று இருப்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சீரிய முயற்சியின் மூலம் பல சமஸ்தானங்களாக பிரிந்திருந்த நாம் இந்த வானவில் போல ஒன்றானோம்.
உலகத்துக்கே நம் அழகைப் பறைசாற்றி வருகின்றோம். இந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக பாரதிதாசனும் மிக அழகாக,
“காஷ்மீரத்தில் ஒருவன் இருமினால்
கன்னியாகுமரியில் இருந்தொருவன்
மருந்து கொண்டோடினான்” எனப் பாடினார்
நான் இங்கே சொல்ல விரும்புவது, இடியென்னும் இடுக்கன் வரும் போது மட்டும் நாம் நம் வீட்டிலும் சமூகத்திலும் நாட்டிலும் ஒற்றுமையை நிலை நாட்டுகிறோம்.
இதையே நாம் அனைத்து தருணங்களிலும், பாரதி சொல்வது போல “கூடி விளையாடு பாப்பா” எனக் கடைப்பிடித்தால், இந்த வாழ்க்கை விளையாட்டு இன்னும் சுவாரசியமாக இருக்குமல்லவா?
ஒற்றுமையே பலம்!
ஒற்றுமையே ஜெயம்!
ஒற்றுமையே அழகு!
அதுவும் நம் பாரதத்தின்
வேற்றுமையில் ஒற்றுமையே
தன்னிகரில்லாத அழகு!
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!