குழந்தைகளே! ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருந்ததால் வேடனிடமிருந்து தப்பித்த மான் கதையைக் கேளுங்கள்.
ஒரு அழகிய காட்டில் நடுவில் குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தைச் சுற்றிலும் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து வந்தன.
அவற்றில் மங்கை என்ற மானும், கருப்பன் என்ற காகமும், எழிலரசன் என்ற எலியும், ஆனந்தி என்ற ஆமையும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர்.
நண்பர்கள் நான்கு பேரும் தினமும் குளத்தின் அருகே கூடி தாங்கள் இரை தேடச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர்.
அப்படி ஒருநாள் நண்பர்கள் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்தனர். ஆனால் மான் மங்கையை மட்டும் நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை.
அப்போது கருப்பன் காகம் தன் மற்ற நண்பர்களான எலி எழிலரசனிடமும், ஆமை ஆனந்தியிடமும், “நண்பர்களே நாம் காட்டின் மற்ற இடங்களுக்கு சென்று மான் மங்கையைத் தேடிக் கண்டுபிடித்து வருவோம்” என்று கூறியது.
அதன்படி காகம் கருப்பன், எலி எழிலரசன், ஆமை ஆனந்தி ஆகிய மூவரும் காட்டின் மேற்குப் பகுதிக்குச் சென்றனர்.
அப்போது “யாராவது காப்பாற்றுங்கள்:” என்று மான் மங்கை கத்துவது கேட்டது. நண்பர்கள் மூவரும் அந்த இடத்திற்கு வேகமாகச் சென்றனர்.
அங்கே மான் மங்கை வேடனின் வலையினுள் மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
காகம் கருப்பன் மான் மங்கையிடம், “மங்கை நீ எப்படி வலையினுள் மாட்டிக் கொண்டாய்?” என்று கேட்டது.
அதற்கு மான் மங்கை “இரையைத் தேடிச் சென்றபோது கவனக்குறைவாக வலையில் மாட்டிக் கொண்டேன். என்னை எப்படியாவது வேடன் வரும் முன் காப்பாற்றுங்கள்” என்று கூறியது.
“நீ சற்று பொறு. நமது நண்பன் எலி எழிலரசன் வலையைக் கடித்து உன்னைக் காப்பாற்றுவான்” என்று கூறியது.
காகம் கருப்பன் கூறியபடி எலி எழிலரசன் வேகமாக வலையைக் கடித்து மானை விடுவித்தது.
நான்கு நண்பர்களும் அவ்விடத்தை விட்டு கிளம்பத் தயாரான போது வேடன் சற்று தொலைவில் வருவதை காகம் கருப்பன் கவனித்தது.
“நண்பர்களே வேடன் வருகிறான். எல்லோரும் இவ்விடத்தை விட்டு வேகமாகச் செல்ல வேண்டும். இல்லை என்றால் வேடனிடம் நாம் அகப்பட்டுக் கொண்டு விடுவோம். எனவே எல்லோரும் வேகமாக வேறு இடங்களுக்குச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு பறந்து சென்று மரத்தில் ஒளிந்து கொண்டது.
வேடன் வருவதைக் கண்ட மான் மங்கை அருகில் இருந்த புதரில் சென்று மறைந்தது. எலி எழிலரசன் அருகில் இருந்த பொந்தில் சென்று ஒளிந்து கொண்டது.
ஆமை ஆனந்தி மட்டும் மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. ஆனால் வேடன் அதற்குள் அவ்விடத்தை அடைந்து விட்டான்.
ஆமை ஆனந்தியை எடுத்து சாக்கில் போட்டுக் கொண்டு நடக்கத் துவங்கினான். அதனைக் கண்ட மற்ற நண்பர்கள் மூவரும் திகைத்தனர்.
தங்களின் மறைவிடங்களை விட்டு வெளியே வந்த அவைகள் தங்களுக்குள் திட்டம் ஒன்றைத் தீட்டினர்.
நண்பர்களின் திட்டப்படி மான் மங்கை நொண்டி நொண்டி வேடனின் முன்னால் வந்தது. அதனைக் கவனித்த வேடன் ஆமையை வைத்திருந்த சாக்கை கீழே வைத்துவிட்டு மானைப் பிடிக்க ஓடினான்.
மான் மங்கையும் வேடனுக்கு போக்கு காட்டி நடுகாட்டிற்குள் ஓடியது. அவ்வேளையில் எலி எழிலரசன் சாக்கைக் கடித்து ஆமை ஆனந்தியைக் காப்பாற்றியது.
காகம் கருப்பன், எலி எழிலரசன், ஆமை ஆனந்தி மூவரும் தப்பிப் பிழைத்து தாங்கள் வழக்கமாகக் கூடும் குளக்கரைக்கு வந்தனர்.
மான் மங்கை வேடனை ஏமாற்றிவிட்டு குளக்கரைக்கு வந்தது. தன்னுடைய நண்பர்களிடம் வேடனுக்கு போக்கு காட்டி தப்பித்த கதையைச் சொல்லி மகிழ்ந்தது.
அதற்கு ஆமை ஆனந்தி “நண்பர்களே ஒற்றுமையே பலம். ஆதலால் நம்மைப் போன்று ஒற்றுமையாகச் செயல்பட்டால் பலசாலியையும் வென்று விடலாம். எனவே நாம் எப்பொழுதும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என்று கூறியது.
குழந்தைகளே மேலே உள்ள கதையில் ஒற்றுமையாக செயல்பட்டதால் நண்பர்கள் நான்கு பேரும் அடைந்த பலன்களைப் பார்த்தீர்கள்தானே. ஆதலால் ஒற்றுமையுடன் செயல் பட்டு வாழ்வில் முன்னேறுவீர்.