ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை

ஒலிம்பிக் திருவிழா ரியோவில் ஓய்யாரமாய் நடந்தது;
ஒரு குழந்தை அதில் காணாமல் போனது.
அதன் பெயர் இந்தியா.

பலப்பல வழிகளில் சென்று
பதட்டத்துடனே தேடினர்
நூற்றுக்கும் மேலே வீரர்கள்;
சற்றும் காணவில்லை அக்குழந்தை.

எத்தனை கோடிப்பேர் நாட்டில்?
ஏன் இடமில்லை பதக்கப் பட்டியலில்?
போட்டிகள் பார்க்க மனமில்லை; தொலைக்காட்சிப்
பெட்டி திறக்க எண்ணமில்லை.

அமெரிக்கா இங்கிலாந்து சீனா அள்ளின பதக்கங்கள்;
அதை வேடிக்கை பார்த்தன நம் கண்மணிகள்.
நூறு கோடி மனத்தில் ஆறாத் துயர்;
இரு நூறு கோடி விழியில் கண்ணீர்.

சஞ்சலம் கொண்டு மனது கதறிற்று;
சாக்சி வடிவில் வந்தது ஒளிக்கீற்று!
காணாமல் போன இந்தியாவைக் கண்டுபிடித்து
மானம் காத்தார் மல்லுக்கட்டிய மங்கை!

சிந்து வந்தார் சிலநேரம் கழித்து
பந்தை விரட்டினார் சீறிப் பாய்ந்து
பதக்க‌ம் ஒன்று வெள்ளியில் மலர்ந்தது.
பல்லைக் காட்டி இந்தியக் குழந்தை சிரித்தது!

– வ.முனீஸ்வரன்

 தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.