ஒளி மாசுபாடு

ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான செயற்கை ஒளிகளால் இரவின் இயற்கை ஒளியை மங்கச் செய்து மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களுக்கு தொல்லை தருவதாகும்.

ஒளி மாசுபாடு ஏற்பட மனித நடவடிக்கை முக்கிய காரணமாகும். இம்மாசானது ஒளிரும் மாசு என்றழைக்கப்படுகிறது.

ஒளி மாசுபாடு விலங்குகள் மற்றும் தாவரங்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அவற்றின் அழிவிற்கு மறைமுகமாக வழிவகுக்கின்றது.

இம்மாசுபாடு மனிதர்களின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தி உடல்நலக் குறைவை உண்டாக்குகின்றது. மேலும் இம்மாசுபாட்டால் இரவில் நட்சத்திரங்களையும், மற்ற கோள்களையும் மனிதர்களால் பார்க்க முடிவதில்லை.

 

ஒளிமாசுபாட்டின் வகைகள்

ஒளிமாசுபாடானது பல்வேறு மூலங்கள் மூலம் ஏற்படுகின்றது.

அதிகப்படியான ஒளி

ஒளி ஆற்றலை தவறாகப் பயன்படுத்துவதால் இந்நிகழ்வு ஏற்படுகிறது. விளம்பரப் பலகைகளின் விளக்குகள், ஆடம்பர விளக்குகள், தேவைக்கு அதிகமான விளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது அதிகமான ஒளி வீணடிக்கப்படுகிறது.

ஒளியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட நிலக்கரி, பெட்ரோல் போன்றவை காற்று மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அதிகப்படியான ஒளியால் பயன்பாட்டுச் செலவு அதிகரிப்பதோடு உயிர்களின் உறக்கமும் பாதிக்கப்படுகின்றது.

 

கண்களைக் கூசச் செய்யும் ஒளி

அதிகப்படியான ஒளியானது இரு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வகை ஒளியானது சுற்றியுள்ள பரப்புகளால் பிரதிபலிக்கப்பட்டு சிதறடிக்கப்படுகிறது. இதனால் பொருட்கள் மற்றும் இடங்களை பிரித்து அறியமுடியாத பார்வைப் பிரச்சினை ஏற்படுகின்றது.

 

சீரான ஒளியின்மை

இது மனிதனால் மட்டுமே ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகும். இது மோசமான வடிவமைப்பினால் ஏற்படுகிறது. வணிக விளக்குள் அல்லது தெரு விளக்குகளின் தொகுப்பானது ஒளிக்கலவைகளாக மிளிருகிறது. இது இரவு நேரங்களில் கண்பார்வைக்கு குழப்பத்தை தருகிறது.

 

பளபளப்பான வானம்

நகர்புறங்களில் உள்ள வீடுகள், வர்த்தக இடங்கள், தெரு ஆகியவற்றில் மிளிரும் அதிகப்படியான விளக்குகளில் இருந்துவரும் ஒளியானது வானத்தினை அடைந்து வானத்தை பளபளபாக்கி மீண்டும் பூமியை வந்தடைகிறது.

இது உயிரினங்களின் வளர்ச்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. இரவு செல்லும் விமானங்களையும் பாதிக்கிறது.

 

எல்லை மீறும் ஒளி

தேவையில்லாத ஒளியானது அடுத்தவர்களுக்கு தொல்லை தருவதாக அமைதலே எல்லை மீறும் ஒளி என்கிறோம். விளம்பரப் பலகைகளிலிருந்து வரும் ஒளியானது குடியிருப்பு பகுதிகளுக்கு தொல்லை வருவதை இந்நிகழ்வுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

 

ஒளிமாசுபாட்டின் காரணங்கள்

முறையாக திட்டமிடாமை

விளம்பரப் பலகைகள் மற்றும் தெரு விளக்குகள் ஆகியவற்றை திட்டமிடும்போது ஒளியின் பிரதிபலிப்பு, சீரான ஒளியின்மை, எல்லை மீறும் ஒளி ஆகியவற்றை கணக்கிடாமல் திட்டமிடுதல் ஒளிமாசுபாட்டிற்கு ஒரு காரணம் ஆகும்.

 

பொறுப்பில்லாத ஒளிப்பயன்பாடு

ஓர் இடத்தை விட்டு நீங்கும்போது விளக்குகளை அணைக்காமல் செல்வது, தெரு விளக்குகளை பகலிலும் எரியவிடுவது, விளம்பரப் பலகைகளில் அதிகமான விளக்குகளை எரிய விடுவது போன்றவை ஒளிமாசுபாட்டிற்கு முக்கிய காரணம் ஆகும்.

 

அதிக மக்கள் தொகை

மக்கள் தொகை அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகள், வர்த்தக இடங்கள் ஆகிய இடங்களில் ஒளிரும் விளக்குகள் ஒளிமாசுபாட்டிற்கு காரணம் ஆகும்.

 

ஒளிமாசுபாட்டின் விளைவுகள்

ஒளி மாசுபாடானது சுற்றுசூழல், மனிதர்கள், விலங்குகள் ஆகியோர்களிடம் நேர்முக மற்றும் மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

மனிதர்கள்

ஒளிமாசுபாட்டின் காரணமாக மனிதர்களில் தூக்கம் வராமை, ஆழ்ந்த தூக்கம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனால் மனித உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றம் சரிவர நிகழ்வதில்லை. இதனால் மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

 

விலங்குகள்

ஒளியானது சில விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களை கவர்ந்திழுக்கவோ,  தடுக்கவோ செய்கின்றன. இம்மாசுபாடு இரவில் மற்றும் பகலில் இயங்கும் விலங்கினங்களுக்கு பகலிரவு நேரங்களை பிரித்தறியாத வண்ணம் தடுமாற்றத்தை உண்டாக்குகின்றது.

இதனால் அவைகளின் வாழ்க்கை முறைகளில் மாறுதல்கள் ஏற்படுகின்றது. இம்மாற்றம் சமயங்களில் உயிரிழப்பில் சென்று முடிகின்றது. ஆந்தை, கடலாமைகள் ஒளிமாசுபாட்டால் பெரிதும் பாதிப்படைகின்றன.

 

சுற்றுச்சூழல்

புவியின் சுற்றுச்சூழலானது இயற்கை ஒளிச்சுழற்சியைச் சார்ந்து இருக்கின்றது. இரவு நேர வானப் பளபளப்பின் காரணமாக செயற்கை ஒளியானது பிரதிபலிக்கப்பட்டு மீண்டும் புவியை வந்தடைகிறது.

இந்நிகழ்வு இயற்கை புறஊதாக்கதிர்கள் புவியை வந்தடைவதைத் தடை செய்கின்றது. இதனால் நாம் உண்ணும் உணவு, காற்று, நீர் ஆகியவற்றில் மாற்றத்தை உண்டாக்கி உடலுக்கு ஊறு விளைவிக்கிறது.

 

ஒளி மாசுபாட்டிற்கான தீர்வுகள்

திட்டமிடுதல் மற்றும் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவையே ஒளி மாசுபாட்டிற்கான தீர்வுகளாகும்.
திட்டமிடுதல் என்பது ஒளி மாசுபாட்டின் வகைகளைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப கட்டிடங்கள் மற்றும் விளக்குகளை அமைக்க வேண்டும்.

வீடுகள், தெருக்கள், வர்த்தக நிறுவனங்களில் ஒளிமாசுபாட்டினை உண்டாக்காத அதே சமயத்தில் திறமையான வெளியீட்டினை உடைய விளக்குகளைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

ஒளி மாசுபாடு ஏற்பட காரணங்கள், அதன் விளைவுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்று ஒளி மாசுபாட்டினை ஏற்படாமல் தடுப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

– வ.முனீஸ்வரன்

 

Comments are closed.