ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் ஆகும்.
நாட்டு மக்கள் நீங்காத செல்வம் பெற்று வளமாக வாழ வாழ்த்துக் கூறும் பாடல் இது.
நீங்காத செல்வத்தை நிறைவாகப் பெற இப்பாடல் மங்கல நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.
திருப்பாவை பாடல் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய்
விளக்கம்
குள்ள வடிவத்துடன் வாமனனாக மாபலியின் முன்னால் தோன்றி, மூன்றுஅடி நிலத்தைத் தானமாகப்பெற்று பின்னர் திரிவிக்ரமனாக வடிவெடுத்து உலகத்தினை அளந்த உத்தமன் இறைவனான திருமால்.
அவரின் புகழினைப் பாடி, நாம் பாவை நோன்பினை மேற்கொண்டால் நாடெல்லாம் மாதம் மூன்று முறை மழை பெய்து தண்ணீர் பற்றாக்குறையோ, வெள்ளமோ ஏற்படாது.
மழைவளத்தால் மண்வளம் செழித்து நெற்பயிர்கள் ஓங்கி வளரும். அந்நெற்பயிரின் ஊடே தேங்கும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்.
தண்ணீர் செழிப்பினால் மலர்ந்துள்ள குவளை மலரில் அழகிய வண்டுகள் உண்ட மயக்கத்தினால் உறங்கி மகிழும்.
பசுக்கள் வள்ளல் போன்று நிரம்ப பாலைத் தரும்.
நீர்வளத்தால் நிலவளம் பெருகி, நிலவளத்தால் பயிர் செழித்து செல்வம் உட்பட அனைத்து வளங்களும் பெருகும்.
செல்வச் செழிப்பு நாட்டில் நீங்காது என்றும் நிலைத்திருக்கும். நாட்டில் மக்கள் வளமாக வாழ்வார்கள்.
ஆண்டாள் நோன்பின் பொதுப்பயனைக் கூறி நாடெங்கும் மக்கள் வளமாக வாழ வாழ்த்துக் கூறும் பாசுரம். மங்கல நாட்களில் இப்பாசுரத்தைப் பாடி வாழ்த்தலாம்.
இறைவனிடம் சென்று எனக்கு இதைத்தா, அதைத்தா என்று நாம் விடுக்கும் வேண்டுகோள்களையும், ஆண்டாள் இறைவனிடம் வைக்கும் கோரிக்கைகளையும் பாருங்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் வண்ணம் அருள்வான் இறைவன் என்பதே அவர் கருத்து. அவ்வழியில் நாமும் இயற்கையைப் போற்றி வாழ வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!