ஓசோன் நமது பூமியை உயிர்கள் வாழுமிடமாக மாற்றிய காரணிகளில் ஒன்று.
மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டஓசோன் (O3), காரமான மணமுடைய வெளிர் நீலநிற வாயு ஆகும்.
ஈரணு ஆக்ஸிஜன் மூலக்கூறுவைக் (O2) காட்டிலும், ஓசோனானது மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டது. அதாவது, அதிக ஆற்றலுடைய புறஊதா கதிரினாலும், மின்னலினாலும் ஓசோன், ஈரணு ஆக்ஸிஜனாக சிதைவு அடைந்து விடும்.
இயற்கை உருவாக்கிய இவ்வோசோன் வாயுவை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உலகிலுள்ள எல்லா பொருட்களுக்கும், நன்மை தீமை உள்ளிட்ட இருகுணங்கள் உண்டு. இது ஓசோனுக்கும் பொருந்தும். வாருங்கள், முதலில் ஓசோனின் நன்மையினைக் காணலாம்.
பூமி வாழ்விடம் ஆனதற்கு காரணம்
சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக விளங்குகிறது. இதற்கான பல காரணங்களில் ஓசோனும் ஒன்று.
ஆம், வளிமண்டல அடுக்குகளில் இரண்டாவது அடுக்கான ஸ்டிராட்டோஸ்பியரில் (பூமியின் பரப்பிலிருந்து பத்து கிலோமீட்டர் உயரத்தில் தொடங்கி ஐம்பது கிலோமீட்டர் வரையிலான வளிமண்டல பகுதி) ஓசோன் படலம் அமைந்துள்ளது.
இப்படலமே, சூரியனிலிருந்து வெளிவரும் அதீத ஆற்றலுடைய புறஊதா கதிரை (UV-C மற்றும் UV-B) உறிஞ்சிக் கொண்டு தீங்கற்ற கதிர்களை பூமிக்குள் விடுகின்றது.
ஒருவேளை, ஓசோனின் படலம் இல்லை என்றால், ஆற்றல் மிக்க புறஊதாகதிர்கள் பூமியை தாக்கும். அப்படி தாக்கினால் என்னென்ன நடக்கும்?
உற்பத்தியாளர்களான தாவரங்கள் பெரும் ஆபத்தினை சந்திக்கும். குறிப்பாக UV-B கதிர்கள் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை வினையை தடுத்து, அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கும்.
இதனால் தாவர உணவு பொருளின் மகசூல் பெருமளவு குறைந்து விடும். தவிர, புவிபரப்பிலும், நீர்நிலைகளிலும் வாழும் சில தாவரங்கள், முற்றிலும் அழிந்து விடும் அபாயமும் உண்டு.
மேலும் தோல் புற்றுநோய், சரும கோளாறு மற்றும் கண்விழி குறைபாட்டு நோய்களும் மனிதர்களுக்கு வரலாம். விலங்குகளும், கண் புற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
இப்பேராபத்துகள் நிகழாவண்ணம் ஓசோனின் படலமானது ஒரு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு பூமியைக் காக்கிறது. இதன் மூலம் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை பூமி பெற்றிருக்கிறது.
சரி, ஓசோன் படலம் புறஊதா கதிர்களை எப்படி உறிஞ்சுகிறது? சற்று விரிவாகப் பார்போம்.
முன்னதாக பார்த்தது போல், ஒசோன் படலம் வளிமண்டல ஸ்டிராட்டோஸ்பியர் அடுக்கில் உள்ளது. உண்மையில், அது முழுவதும் ஓசோன் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டதல்ல!
மாறாக, குறைந்த அளவு ஓசோனும், அதிக அளவு ஈரணு ஆக்ஸிஜனாலும் ஆனது. மேலும், அதீத ஆற்றலுடைய புறஊதாகதிரை உறிஞ்சுவது ஈரணு ஆக்ஸிஜனே! ஓசோனல்ல!
இருப்பினும், குறைந்த அளவு ஓசோனை பெற்றிருக்கும் இப்படலத்தை ஓசோன் படலம் என்றும், புறஊதாக் கதிரின் வடிகட்டி ஓசோன்! என்றும் அழைப்பதற்கு காரணம் என்ன? இக்கேள்விக்கான பதிலை, ஓசோன் எப்படி வளிமண்டலத்தில் உருவாகின்றது என்பதை அறிவதன் மூலம் பெறலாம்.
முதலில் அதீத ஆற்றலுடைய புறஊதா கதிர்களை உறிஞ்சிக் கொள்ளும் ஆக்ஸிஜன் மூலக்கூறு பிளவுற்று ஆக்ஸிஜன் அணுக்களைத் தருகின்றது. இவ்வாக்ஸிஜன் அணுக்கள், மற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் சேர்ந்து ஓசோன் மூலக்கூறினை உருவாக்குகிறது.
எனவே, ஆக்ஸிஜனிலிருந்து ஓசோனாக உருவாகும் வினையால் அதீத ஆற்றலுடைய புற ஊதாகதிர்கள் இப்படலத்திலேயே உறிஞ்சப்பட்டு பூமியை தாக்கா வண்ணம் காக்கப்படுகிறது.
பின்னர், சற்றே குறைந்த ஆற்றலுடைய புற ஊதாகதிர்களை உறிஞ்சும் ஓசோனானது சிதைவடைந்து ஆக்ஸிஜன் அணுவையும், ஈரணு ஆக்ஸிஜனையும்தருகிறது. இதன்மூலம், சற்றே குறைந்த ஆற்றலுடைய புற ஊதாகதிர்களும்இப்படலத்திலேயே உறிஞ்சப்படுகிறது.
ஆக, ஓசோன்வாயு உருவாதலின் மூலம் அதீத ஆற்றலுடைய புறஊதா கதிர்களும், ஓசோன் சிதைவதன் மூலம் குறைந்த ஆற்றலுடைய புறஊதா கதிர்களும் இப்படலத்தால் உறிஞ்சப்படுகிறது.
ஓசோனானது இல்லை என்றால், மேற்கண்ட வினை தொடர்ந்து நடைபெறாது. ஓசோன் இருப்பதாலேயே, இவ்வடுக்கு புறஊதா கதிர்களை உறிஞ்சும் தன்மையை பெற்றிருக்கிறது. ஆகவேதான், இவ்வடுக்கிற்கு‘ஒசோன்அடுக்கு‘என்றும், ‘புறஊதா கதிர்களின் வடிகட்டி ‘ஒசோன் என்றும் அழைக்கப்படுகிறது.
அடுத்து, ஓசோனின் தீமையினை காணலாம்.
ஓசோன் மாசுபாடு
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கான டுரோப்போஸ்பியரில் (புவிப்பரப்பிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் உயரம் வரையிலான காற்றுமண்டலம்) ஓசோனின் அளவு கூடினால் அதற்கு ஓசோன் மாசுபாடு என்று பெயர்.
காரணம், இவ்வடுக்கில் இருக்கும் மாசுக்களான ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளிலிருந்து உருவாகும் ஓசோனும் மாசுபடுத்தியாக செயல்பட்டு உயிரினங்களுக்கு விரும்பத்தகாத விளைவுகளை உண்டு பண்ணுவதே!
ஆம், ஓசோனின் மாசுபாட்டால் சிலவகை தாவரங்களின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தவிர, பசுமையக வாயுவாக விளங்கும் ஓசோனானது அகச்சிவப்பு கதிர்களை பூமியிலேயே நிலைநிறுத்தி உலக வெப்பமயமாக்கலுக்கும் காரணமாகிறது.
மேலும் ‘பனிப்புகை‘ உருவாவதற்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இம்மாசுபாட்டிற்கு காரணம் மனித செயல்பாடுகள்தான் என்பதையும் மனதிற்கொள்ளுதல் அவசியம்.
இயற்கையாகவே, சிறிதளவு ஓசோனானது டுரோப்போஸ்பியர் அடுக்கில் இருப்பினும், அதனால் பெரிய அளவில் பாதிப்பில்லை. ஆனால், வளிமண்டல மாசுக்களான சில வகை கனிம மற்றும் கரிம வாயுக்களால் ஓசோனானது டுரோப்போஸ்பியரில் உற்பத்தியாகிறது. இதனாலேயே சில தீங்குகள் ஏற்படுகிறது.
இதிலிருந்து அறிவது என்னவெனில், எதுவும் அதற்குண்டான இடத்தில் இருப்பது அவசியம். ஆம், ஓசோன் ஸ்டிராட்டோஸ்பியர் அடுக்கில் இருந்தால் நமக்கு நன்மை. அதுவே, டுரோப்போஸ்பியர் அடுக்கில் இருந்தால் நமக்கு தீமை.
இயற்கையின் இதுபோன்ற பல கச்சிதமான நுட்பங்களால் உலகில் உயிரினம் தோன்றி, பல்கி பெருகியிருக்கின்றன. மனித இனமும் மாபெரும் வளர்ச்சியினைக் கண்டுள்ளது. அதே சமயத்தில் நம்முடைய வளர்ச்சியால், இயற்கையும் நாமும் பாதிக்கப்படாமல், நிலையான வளர்ச்சியினை அடைதல் வேண்டும்.
முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461