ஆதி காலத்தில் மனிதனாக பிறந்து தெய்வமாக மாறிய மனிதர்களே சிறு தெய்வங்களாக இன்று வரை மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நொண்டி கருப்பசாமியாகும்.
எங்கிருந்தோ வந்தவர் தெய்வமாக மாறி ஊர் பொதுமக்களுக்கு காவல் காத்து வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.
ஓடைப்பட்டி கிராமம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள கள்ளிக்குடி பக்கத்தில் அமைந்துள்ளது ஓடைப்பட்டி கிராமம்.
இந்த கிராமத்தில் நாயக்கர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய தோட்டத்தில் விளைந்த நெல், காய்கறிகள், பருப்பு போன்றவைகளை மூட்டைகளாக கட்டிக்கொண்டு மதுரையில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.
வழிமறித்த நொண்டி மனிதர்
மாட்டு வண்டியில் நாயக்கர் சென்று கொண்டிருக்கும்போது அவருடைய மாட்டு வண்டியை ஒரு நொண்டி மனிதன் வழி மறைத்தார்.
“எனக்கு யாரும் இல்லை ஐயா! நான் ஒரு அனாதை! என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுடனே இருந்து வீட்டு வேலைகளை செய்து வருகிறேன். எனக்கு நீங்கள் மூன்று வேளை சாப்பாடு போட்டால் போதும் ஐயா!” என்று கேட்டார்.
உடனே நாயக்கரும் அவரை அரவணைத்துக் கொள்கிறார். இருவரும் சேர்ந்து மாட்டு வண்டியில் மதுரையில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்ற பொருட்களை விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
பிறகு நாயக்கர் அவரை “வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை பார்த்துக் கொண்டு உங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்து கொண்டு இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” என்று மாட்டு கொட்டகையில் வசிப்பதற்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தார்.
அந்த நொண்டி மனிதரும் நாயக்கர் வீட்டில் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு அந்த மாட்டுக் கொட்டகையிலேயே வசித்து வந்தார்.
மண்ணெண்ணெய் விளக்கை நாக்கால் தூண்டி எரிய விட்டார்
ஒருநாள் நாயக்கர் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்று விட்டார். அப்பொழுது அந்த வீட்டில் நாயக்கரின் நிறைமாத கர்ப்பிணி மகளும் வீட்டு வேலை செய்யும் நொண்டி மனிதர் மட்டுமே இருந்தனர் .
மாலை நேரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டில் உள்ள நாயக்கரின் மகள் இடுப்பு வலியால் துடித்து அழுதாள்.
அழுகைச் சத்தத்தை கேட்ட நொண்டி மனிதர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் செல்வது தவறு என்று எண்ணி வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்.
அந்த வீட்டினுள் உள்ள மண்ணெண்ணெய் விளக்கு திரி சரியாக தூண்டப்படாமல் இருந்ததால் அணையும் நிலையில் இருந்தது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நொண்டி மனிதர், தன்னுடைய வாசலிலே நின்று கொண்டு தன்னுடைய நாக்கை 11 அடி தூரத்திற்கு நீட்டி அந்த மண்ணெண்ணெய் விளக்கில் உள்ள திரியை தூண்டி விட்டார். திரி நன்றாக கொழுந்துவிட்டு எரிந்தது.
வெளியூருக்குச் சென்ற நாயக்கர் வீடு திரும்பியபோது இந்த நிகழ்வைப் பார்த்து பயந்து போனார். பிறகு தன்னுடைய மகளை மருத்துவமனையில் நல்லபடியாக சேர்த்தார். மகளுக்கு இனிதே பிரசவம் நடந்து முடிந்தது.
நொண்டி கருப்பன்
நாயக்கர் நொண்டி மனிதரை, “நீங்கள் யார்? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? நீங்கள் சாதாரண மனிதராக தெரியவில்லையே!” என்று கேட்டார்.
அதற்கு அந்த நொண்டி மனிதர் “நான்தான் ‘நொண்டி கருப்பன்’. இந்த ஊரில் கோயில் வாங்கி குடியிருப்பதற்காக வந்துள்ளேன்.
இந்த ஊரில் உள்ள வாலகுருநாதர் – அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் காவல் தெய்வமாக இருந்து கொண்டு இந்த ஊர் மக்களை காப்பாற்றுவதற்காகவே இந்த ஊர் எல்லைக்கு வந்துள்ளேன்.
இந்த ஊர் மக்கள் அனைவரும் எனக்கு கோயில் எழுப்பி என்னை வணங்கி வந்தால் அவர்களைக் காத்து நிற்பேன்”என்று பலத்த சத்தத்துடன் சிரித்துக் கொண்டே கூறினார்.
பிறகு வாலகுருநாதர்- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இருக்கும் திசையை நோக்கிச் சென்று காற்றுடன் கலந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
பொங்கல் திருவிழா
ஓடைப்பட்டி கிராமத்தில் இருக்கும் மக்கள் வருடம் தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
நொண்டி கருப்பனுக்கு அடைக்கலம் கொடுத்த நாயக்கர் வீட்டிலிருந்து கருப்பசாமி சிலையின் ஊர்வலம் தொடங்கி ஊர் சுற்றி வந்து கோவிலினுள் இறக்கி வைத்து கருப்பசாமியை வருடந்தோறும் வணங்குகின்றனர்.
பொங்கல் திருவிழாவில் நொண்டி கருப்பனுக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் போன்ற சடங்குகளைச் செய்கின்றனர்.

வேண்டும் வரம் தரும் நொண்டி கருப்பன்
நொண்டி கருப்பன் கோவிலில் குழந்தை இல்லாத பெண்கள் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் குடிக்கு அடிமையானவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் குடியை மறந்து விடுவார்கள் என்றும் அந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது.
நோய்வாய்ப்பட்டவர்கள், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான குடும்ப பிரச்சனைகள் உள்ள மக்கள் நொண்டிக் கருப்பன் கோவிலுக்கு வந்து தங்களுடைய குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் ,அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. இதனால் இந்த ஊருக்கு பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்த கோவிலில் கோரிக்கை வைக்கும் மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவடைந்த பிறகு கிடாய் வெட்டுதல், அலகு குத்துதல், அக்கினி சட்டி ஏந்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை சிறப்பாக நிறைவேற்றி வழிபாடு செய்கின்றனர்.

பெ.சிவக்குமார்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!