ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.
ஓணம் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக் கொண்டாட்டம் கேரளாவிலும், தென் தமிழகத்திலும் மற்றும் மலையாள மக்கள் உள்ள எல்லா இடங்களிலும் மிகவிமர்சையாக நடைபெறுகிறது.
இப்பண்டிகை மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது ஆவணி மாதத்தில் வளர்பிறை அஸ்தம் நட்சத்திர நாள் தொடங்கி திருவோண நட்சத்திர நாளோடு முடிவடைகிறது. இதில் திருவோண நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழாவே சிறப்பு வாய்ந்தது.
இவ்விழா கேரளாவின் அறுவடைத்திருநாள் எனவும், கேரளத்து தீபாவளி எனவும், கேரளத்து புத்தாண்டுக் கொண்டாட்டம் எனவும் பல வேறுபெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.
இவ்விழா பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து உள்ளது என்பதனை மதுரைக்காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூலிலும், திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் பாடியுள்ளதன் மூலம் அறியலாம்.
இவ்விழா கேரள மாநிலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்ததை செப்புத்தகட்டு செய்தி மூலம் அறியமுடிகிறது.
விழாவின் பத்து நாட்களிலும் மக்கள் பூக்களைக் கொண்டு கோலங்கள் வரைந்து இவ்விழாவின் நாயகனான மகா பலியை வரவேற்கின்றனர்.
கலை கலாச்சார நிகழ்ச்சிகள், படகுப்போட்டிகள், மாறுவேடப்போட்டிகள், யானை அணிவகுப்புகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
இப்பண்டிகையின் போது கசப்பு சுவையினைத் தவிர ஏனைய சுவைகளில் 64 வகையான உணவுப் பொருட்கள் தயார் செய்து ஓண விருந்தினை மக்கள் உண்கின்றனர்.
இப்பண்டிகைக்கான காரணம்
முன்னொரு சமயத்தில் வேதாரண்யம் என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தில் வசித்த எலி ஒன்று நள்ளிரவில் விளக்கில் உள்ள நெய்யை விரும்பி விளக்கை நெருங்கிய போது விளக்கின் சுடரில் முகத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டது.
நெருப்பு சுட்டவுடன் திரும்பிய வேகத்தில் விளக்கின் திரி தூண்டப்பட்டு விளக்கு நன்கு எரிந்தது. அதனால் எலி மறுபிறவியில் பக்த பிரகலாதனின் பேரனாக, மகாபலி சர்க்கரவர்த்தியாக அவதரித்தது.
மகாபலியும் குடிமக்களைப் பாதுகாத்து நல்வழியில் அரசாட்சி செய்து வந்தான். அப்போது அவனுக்கு மூவுலகத்தையும் ஆட்சி செய்யும் எண்ணம் ஏற்பட்டது.
அதனால் அவன் தேவலோகத்தை கைபற்றி நல்ல முறையில் ஆட்சி செய்தான். பதவியை இழந்த இந்திராதிதேவர்கள் தேவலோகம் விட்டு மறைந்து வாழ்ந்து வந்தனர்.
அப்போது தேவர்களின் தாயான அதிதி தேவி தம் மைந்தர்களுக்காக மகாவிஷ்ணுவை அவர்களின் துயர்போக்குமாறு வழிபாடு நடத்தினாள்.
மகாவிஷ்ணுவும் அதிதியின் வேண்டுகோளை நிறைவேற்றவும், மகாபலியின் பெருமையை உலகுக்கு உணர்த்தவும் திருவுள்ளம் கொண்டு வாமனராக அதிதியின் வயிற்றில் தோன்றினார்.
அப்போது மூவுலக ஆட்சியும் தன்வசம் இருக்க சுக்ராச்சாரியரின் ஆலோசனையின் பேரில் யாகம் ஒன்றை மகாபலி தொடங்கினார். யாகசாலையில் தானத்தை பலிச்சர்க்கரவர்த்தி தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த வாமனர் தனக்கு மூன்றடி நிலத்தை தானமாக வழங்குமாறு மன்னனிடம் கேட்டார்.
அங்கிருந்த சுக்ராச்சாரியார் மன்னனிடம் வந்திருப்பது மகாவிஷ்ணு, தானம் வழங்கினால் மன்னனுக்கு இன்னல்கள் நேரும். எனவே தானம் வழங்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
அப்போது மன்னன் மகாவிஷ்ணுவே தன்னிடம் தானம் பெற வந்திருப்பதால் தனக்கு நேரும் இன்னல்கள் பற்றி கவலையில்லை. தானம் வழங்க கமண்டலத்தில் உள்ள நீரினை சாய்த்தார்.
அப்போது சுக்ராச்சாரியார் வண்டின் உருக்கொண்டு நீர்வரும் பாதையை அடைந்தார். அதனைக்கண்ட வாமனர் தர்ப்பையால் வண்டினை அகற்றினார். இதனால் சுக்ராசாரியார் தன் கண்பார்வையை இழந்தார்.
பலியும் தானம் வழங்க ஒத்துக்கொண்டார். அப்போது வாமனர் திரிவிக்ரமனாக உருவெடுத்து விண்ணையும் மண்ணையும் இரண்டு அடிகளாக அளந்தார்.
மூன்றாவது அடிக்கு நிலம் கேட்டபோது பலிச்சர்க்கரவர்த்தி தன் சிரசினை காட்டி மூன்றாவது அடியாக அளக்கச் சொன்னார். அப்போது வாமனரும் பலியின் தலையில் கால்வைத்து அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பினார்.
அப்போது மன்னன் வாமனரிடம் ஆவணி திருவோணத்தன்று தன் மக்களை கண்டு செல்ல அனுமதி கேட்டார். அவ்வாறே ஆகட்டும் என்று வாமனன் வரம் வழங்கினார்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் ஓணத்திருநாளன்று தம் மக்களை காண பலிச்சர்க்கரவர்த்தி வருவதாகவும், தம் மக்களுக்கு ஆசி வழங்குவதாகவும், தம் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டு மீண்டும் பாதாள லோகம் செல்வதாகவும் கருதப்படுகிறது.
எனவே தங்கள் மன்னனனை வரவேற்க அத்தப்பூவினைக் கொண்டு கோலங்கள் வரைவதும், தெருவெங்கும் தோரணங்கள் கட்டுதும், அறுசுவை உணவினைப் படைத்து வழிபாடு நடத்துவதும் இப்பண்டிகையின் சராம்சமாக உள்ளது.
பண்டிகை கொண்டாடும் விதம்
இப்பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது மக்கள் பத்து நாட்களிலும் அதிகாலையில் எழுந்து நீராடி வழிபாடு மேற்கொள்கின்றனர். இக்கொண்டாட்டத்தில் கசவு என்ற சுத்தமான வெண்ணிற ஆடையை அணிவர்.
தங்கள் வீட்டுகளின் முன்பு பத்து நாட்களும் பூக்களால் ஆன கோலங்கள் வரைந்து ஆடிப்பாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.
இப்பண்டிகையின் இரு சிறப்பு அம்சங்கள் அத்தப்பூ கோலமும் ஓணவிருந்தும் ஆகும்.
அத்தப்பூகோலம்
ஆவணி மாதத்தில் மலரும் மலர்களைக் கொண்டு இக்கோலம் வரையப்படுகிறது. இதில் அத்தப்பூ முக்கிய இடம் வகிக்கிறது.
இப்பண்டிகையின் முதல்நாள் அன்று ஒரு வகையான பூவினைக் கொண்டும், இரண்டாம் நாள் இரண்டு வகையான பூவினைக் கொண்டும் என்று பத்தாம் நாள் பத்து வகையான பூக்களைக் கொண்டு கோலம் வரையப்படுகிறது. தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ ஆகியவை கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.
ஓணவிருந்து
இப்பண்டிகையின் போது கசப்பு சுவையினைத் தவிர்த்து மற்ற சுவைகளில் 64 வகையான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.
அடை, அவியல், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, மிளகாய் வற்றல், எலிசேரி, பப்படம், சீடை, ஊறுகாய், பாயசம் என உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு உற்றார் உறவினர் நண்பர்களோடு விருந்து உண்ணப்படுகிறது.
நடனம்
பெண்கள் கைகொட்டு களி என்னும் நடனத்தை வெண்ணிற ஆடைகளை அணிந்து பாடல்கள் பாடிஆடி பத்துநாட்களும் மகிழ்கின்றனர்.
இது தங்கள் மன்னன் மகாபலியை வரவேற்பதற்காகவும், தாங்கள் மகிழ்சியுடன் வாழ்வதை அவருக்கு உணர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.
விளையாட்டுகள்
கேரளாவின் பராம்பரிய விளையாட்டுகள், படகுப் போட்டிகள், மாறுவேடப்போட்டிகள், களறி, கயிறு இழுத்தல், நடனம் போன்றவை நடத்தப்படுகின்றன.
மேலும் யானைகளை அலங்கரித்து ஊர்வலம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அவைகளுக்கு சிறப்பு உணவும் வழங்கப்படுகிறது. புதுமணத்தம்பதிகள் திருமணமான முதல் ஓணத்தைத் தலைஓணம் என்று கொண்டாடுகின்றனர்.
கேரளாவில் சாதி, மத வேறுபாடின்றி இப்பண்டிகை எல்லோராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். நாமும் மகாபலியை வரவேற்று, அவரின் வாழ்த்துக்களுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!