ஓமப்பொடி சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய அருமையான சிற்றுண்டி ஆகும். சிறுகுழந்தைகள் நொறுக்குத் தீனி உண்ண ஆரம்பிக்கும் தருணத்தில் ஓமப்பொடியை முதல் நொறுக்குத் தீனியாகக் கொடுக்கலாம்.
பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய பலகாரங்களிலும் ஓமப்பொடி ஒன்று. இனி எளிதான முறையில் ஓமப்பொடி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – ½ கிலோ கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
ஓமம் – 3 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ½ ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு
ஓமப்பொடி செய்முறை
முதலில் ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
பின் ஓமம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சலித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு மணி நேரம் கழித்து ஊறிய ஓமத்தை வடிகட்டித் தனியே பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஓமம் ஊறிய தண்ணீரில் கல் உப்பினைப் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
ஊறிய ஓமத்தை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு ஒரு சேரக் கலக்கவும்.

பின் அதனுடன் கல் உப்பு கரைத்த ஓமத் தண்ணீர், அரைத்த ஓமவிழுது சேர்த்து பிசையவும். தேவையெனில் மேலும் சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பின் மாவினை ஓம அச்சு உள்ள குழலில் அடைக்கவும்.
பின் வாணலியில் பொரிப்பதற்கான எண்ணையை ஊற்றி காய வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அச்சில் உள்ள மாவினை முறுக்காகப் பிழிந்து விடவும்.

வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடவும். வெந்ததும் முறுக்கினை எடுத்து விடவும்.
ஓமப்பொடியை எண்ணெயில் பிழிந்ததும் உடனே வெந்துவிடும். எனவே உடனடியாக அதைத் திருப்பிப்போட வேண்டும். இல்லையென்றால் ஓமப்பொடி கருகிவிடும்.

சுவையான ஓமப்பொடி தயார்.

ஆறியதும் டப்பாவில் அடைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு காய்ச்சிய சமையல் எண்ணெய் அல்லது உருகிய வெண்ணெய் சேர்த்து மாவினைத் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்து ஓமப்பொடியைத் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!