ஓமம் – மருத்துவ பயன்கள்

ஓமம் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும். வாயுவை அகற்றும்; அழுகலகற்றும்; வெப்பம் உண்டாக்கும்; உடலை பலமாக்கும்; உமிழ் நீரைப் பெருக்கும்

ஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஓமம் குழந்தை மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான நோய்களுக்கு மிகவும் பயன்படுகின்றது.

இந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எனப்படுகின்றன. இவையே மருத்துவத்தில் பயன்படுபவை.

ஓமத்திற்கு ஒரு வித சிறப்பு வாய்ந்த நறுமணம் உண்டு. அசமோதம், திப்பியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஓமத்திற்கு உள்ளது. பொதுவாக ஓமம் எனப்படுவது ஓமச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.

உணவின் சுவையைக் கூட்டவும் ஓமம் பயன்படுகின்றது. நாட்டு மருந்து கடைகளிலும் மளிகைக் கடைகளிலும் ஓமம் கிடைக்கும்.

ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து, பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி மூக்கால் நுகர சளி ஒழுகுதல், மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.

ஓமம், சுக்கு, கடுக்காய்த் தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வாயு உபாதை குணமாகும்.

ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.

ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும்.

ஓமம்,மிளகு,வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.

1 லிட்டர் நீருக்கு 150 கிராம் ஓமம் என்கிற அளவில் சேர்த்து, வாலை வடித்தல் முறையில் கொதிக்க வைத்து உருவாக்கப்படுவது ஓமத்தீநீர் ஆகும். இந்த செய்முறையின் போது, ஓமத்தீநீரின் மீது படிந்து மிதக்கும் எண்ணெய்க்கு ஓமத்தைலம் என்கிற பெயர் உண்டு.

நாட்டு மருந்துக் கடைகளிலும் பிற இடங்களிலும் ஓமத்தீர் விற்பனைக்கு கிடைக்கும். இதை வாங்கி, 30 மி.லி. அளவு குடித்துவர, வயிற்றுப்பொருமல், செரியாமை, சீதக்கழிச்சல் ஆகியவை குணமாகும். குழந்தைகளுக்கு, ஓமத் தைலம் 1 முதல் 3 துளிகள் வரை மேற்கூறிய பிரச்சனைக்கு உள்ளுக்குள் கொடுக்கலாம்.

குரோசாணி ஓமம் -, இமயமலையில் வளர்கின்ற செடி வகை. மணமிக்கது. பூக்கள் இளமஞ்சள் நிறமானவை. திப்பியம், கார்சவை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. விதைகள், கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை.

இவை, உறக்க முண்டாக்கும்; நடுக்கத்தைக் குறைக்கும்; சுவாச காசத்தைக் குணமாக்கும்; நுரையீரல் அழற்சியைப் போக்கும். சூதகவாயு, சூதகவலி போன்றவற்றுக்கும் உள்ளுக்குள் கொடுக்கலாம். சிறுநீர்த்தாரையைப் பலப்படுத்தும், பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

அசமதா ஓமம் – விதைகளே மருத்துவத்தில் பயன்படுபவை. சாதாரண ஓமத்தைவிட அதிகமான காரச்சுவை கொண்டது. செரியாமல் மலம் கழிவது, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வறட்டு இருமல், இரைப்பிருமல், இவைகளைக் குணமாக்கும். சிறுநீரைப் பிரிக்கும்; சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்; பசியைத் தூண்டும்; கல்லீரல், மண்ணீரலை உறுதியாக்கும்.

Comments are closed.