ஓரிதழ்த்தாமரை ஒரு காயகல்ப மூலிகையாகும். முழுத்தாவரம் உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும். சீதபேதியை நிறுத்தவும், மேகநோய்களுக்கான மருத்துவத்திலும் ஓரிதழ்த்தாமரை பரவலாகப் பயன்படுகின்றது. இளைத்த உடலைப் பலப்படுத்துவதற்கான மாத்திரைகள், டானிக்குகளில் ஓரிதழ்த்தாமரை சேர்க்கப்படுகின்றது.
ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகளிலும் பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. ஒரே இதழுடன் உள்ள, சிவப்பு ரோஜா இதழ் நிறமான பூக்களைக் கொண்டது. பெரும்பாலும் ½ அடிக்கும் குறைவான உயரமே வளரும்.
இந்திய மருத்துவத்தில், சூர்யகாந்தி, ரத்தினபுருஷ் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஓரிதழ்த்தாமரை தாவரத்திற்கு உண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானாகவே வளர்கின்றது. ஓரிதழ்த்தாமரை இலைகளை வாயிலிட்டு மெல்ல, அவை கொழகொழப்பான பசைபோல மாறும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
முழுத்தாவரத்தையும் பசுமையானதாகப் பறித்து, பசையாக்கி, எலுமிச்சம்பழ அளவு தினமும், 1 டம்ளர் காய்ச்சாத பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி, குடித்துவர வேண்டும். 48 நாட்கள் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய நரம்புத் தளர்ச்சி, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக ஓரிதழ்த்தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகியவற்றைச் சமமாக, மொத்தத்தில் ஒருபிடி அளவு எடுத்து, அரைத்துப் பசையாக்கி, 1 டம்ளர் தயிருடன் சேர்த்துக் கலக்கி, காலையில் மட்டும் குடித்துவர வேண்டும். 10 நாட்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்யலாம். இந்தக் காலத்தில், காரம், புளிப்பு அதிகம் இல்லாத உணவாக உட்கொள்ள வேண்டும்.
புண்கள், காயங்கள் குணமாக ஓரிதழ்த்தாமரை முழுத் தாவரத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோசனை ஆகியவற்றைச் சிறிதளவு கலந்து, பசையாக்கி, நெய்யுடன் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
‘தாதுவையுண்டாக்குந் தனிமேகத்தைத் தொலைக்கும்…. ஓரிதழ்த் தாமரையையுண்” இளவயதில் கட்டுக்கடங்காத காம நினைவுகளால் உடல் மெலிந்துபோன இளைஞர்களின் ஆரோக்கியத்தை மீட்கும் தகுதி ஓரிதழ்த்தாமரைக்கு உள்ளதென நமது மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஓரிதழ்த்தாமரை தாவரத்தில் செய்யப்பட்ட முதல்நிலை ஆய்வுகளிலிருந்து, இது ஆண்களுக்கு விந்துச்சுரப்பைத் தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி, தாம்பத்திய உறவிலும் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.