ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பதினைந்தாவது பாடல் ஆகும்.

உலகிற்கு எல்லாம் தலைவனாக திகழும் சிவபெருமானின் மீது பாண்டிய அமைச்சரான மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலைப் பாடினார்.

இன்றைக்கும் மார்கழி இறைவழிபாட்டில், கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல் பாடப்படுகிறது.

பாவை நோன்பிருக்கும் கன்னியருள் ஒருத்தி, இறைவனின் திருவருளுக்கு ஆட்பட்ட தனது தோழியின் சொல்லும், செயலும் இருந்த தன்மைகளை, மற்ற பெண்களுக்கு அறிவிப்பது போல் திருவெம்பாவையின் பதினைந்தாவது பாடல் அமைந்துள்ளது.

“இறைவனுடைய திருப்பெயரைக் கேட்டவுடனேயே உள்ளம் உருகி, கண்களில் நீர் பெருக்கெடுக்க, தன்னிலை மறந்து நிற்கும் இளம்பெண் ஒருத்தியின் பேரன்பினைப் பாராட்டி, அவளுக்கு அருள் செய்த‌ வித்தகனின் திருவடிகளைப் போற்றிப் பாடி நீராடுவோம்” என்று பாவை நோன்பிருக்கும் பெண் கூறுகின்றாள்.

இறைவனின் திருவருளைப் பெற, தான் என்கின்ற அகங்காரம் நீங்கி முழுமையாக சரணாகதி ஆக வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.

இனி திருவெம்பாவை பதினைந்தாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பாவை நோன்பிருக்கும் பெண்கள் குளத்தில் நீராட வருகின்றனர்.

அப்பொழுது அப்பெண்களில் ஒருத்தி, தன்னுடைய தோழி இறைவனின் மீது கொண்டுள்ள பேரன்பின் முறையினை எடுத்துரைக்கிறாள்.

நாமும் அப்பேரன்பிற்கு காரணமான இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி நீராடுவோம் என்று அழைக்கிறாள்.

“எனது தோழி ஒவ்வொரு சமயத்திலும் ‘என்னுடைய தலைவனே’ என்று சொல்லிச் சொல்லியே, தமது தலைவனான இறைவனின் புகழினை ஒருமுறையோடு நிறுத்தாது வாய் ஓயாது பேசுவாள்.

இறைவனின் சிறப்புகளை ஓயாது பேசியதால் மனமகிழ்ச்சி உண்டாகி அவளது கண்கள் அருவி போல் நீரைச் சுரக்கின்றன.

மற்ற கடவுளர்களை வணங்காத அவள், சிவபெருமானை வணங்கி நிலத்தில் வீழ்ந்து தன்னிலை மறந்து கிடக்கிறாள்.

பேரரசனாகிய இறைவனுக்குப் பித்தாகும் தன்மை இப்படித்தான் போலும். இவ்வண்ணம் ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? ஞானமே வடிவான இறைவரே அவர்.

அவருடைய திருவடிகளை வாயாரப் பாடி அழகே வடிவமான மலர்கள் நிறைந்துள்ள நீரில் பாய்ந்து நீராடுவோமாக.” என்கிறாள்.

ஓருயிர் எப்பொழுது ‘தான்’ என்கின்ற அகந்தையை நீக்கி, எல்லாம் வல்ல இறைவனே கதி என்று எண்ணுகிறதோ, அப்பொழுதுதான் இறைவனை உணர்தல் முடியும் என்று இப்பாடல் விளக்குகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.