ஓலா – சிறுகதை

பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம்.

சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும், இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது .

அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லையென்றால் அலுவலகமே ஸ்தம்பித்து விடும் என்கிறார்கள்.

மனைவியை மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றால், கொரோனாவால் பஸ் போக்குவரத்தும் இல்லை.

“ஓலா அவுட் ஸ்டேஷன் டாக்ஸி புக் செய்து தருகிறேன். நீ மட்டும் போய் வா.” என்று சொன்னதனால் ஏற்பட்ட சண்டை, சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் நடந்ததை விட மோசமாக இருந்தது.

“அதிகாலை 3 மணிக்கு யாருன்னே தெரியாத ஓலா டிரைவரை நம்பி என்னை அனுப்பி வைக்க நினைக்கிறீங்களே. நாட்டு நடப்பு எதாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் டாப் கிளாஸ். தலைமை நீதிபதியே இவ கிட்ட நிறைய கத்துக்கனும்.

அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது. கல்யாண வீட்டில் போய் நகைகளை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

இங்கிருந்தே சாமி அலங்காரம் செய்து கொண்டுதான் தேரை கிளப்ப வேண்டும். அதனால் பாதுகாப்பு அவசியம். ஆக, இரண்டு பேரும் கல்யாணத்திற்கு போவது என்று முடிவானது.

சொன்னபடி ஓலா அவுட் ஸ்டேஷன் வண்டியை புக் செய்து அதிகாலை 3:30 மணிக்கு அளவில் சென்னையிலிருந்து கிளம்பினோம்.

டிரைவர் பெயர் அய்யனார். 60-65 வயது இருக்கலாம். இடுங்கிய கண்கள், மெலிந்த தேகம், ரொம்ப பவ்யமாக நடந்து கொண்டார்.

நான் மனைவியை பார்த்து, ‘இந்த மாதிரி பாவப்பட்ட டிரைவர்களை நீ சந்தேகிக்கிறாய்’ என்று கண்ணாலேயே சைகை செய்தேன்.

என் மனைவி எப்போதுமே வேற லெவல். என் மைண்ட் வாய்ஸை புரிந்து கொண்டு,“கம்முன்னு, சாஞ்சு உக்காருங்க” என்று நல்ல சத்தமாக பதில் சொன்னாள்.

இவள் பேசியதை கேட்ட ட்ரைவர் கொஞ்சம் ஜெர்க்காகி, நிமிர்ந்து உட்கார்ந்து வண்டியை ஓட்டலானார்.

நான் நிலைமையை சீராக்க அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“அய்யாவுக்கு சொந்த ஊர் எது?” இது எல்லா ட்ரைவரிடமும் நான் கேட்கும் டெம்ப்ளட் கேள்விதான்.

“வில்லிவாக்கத்தில் இருக்கேன் சார்” என்று மேலும் பேச விருப்பமில்லாதவராய் பேச்சை முடித்து கொண்டார்.

மனைவி முந்தானையை முகத்தில் போர்த்திக்கொண்டு பின் சீட்டில் சாய்ந்து அதிகாலை உறக்கத்தின் சொச்சத்தையையும், சுகத்தையும் அனுபவிக்கலானாள்.

எனக்கு உறக்கம் வரவில்லை, வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தேன்.

வண்டி அவுட்டர் ரிங் ரோடு, குன்றத்தூர் தாண்டி சென்று கொண்டிருந்தது. இன்னும் இந்த ரோடு போட்டு முடிக்கவில்லை. வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருட்டு வேறு.

யாரோ இருவர் நடு ரோட்டில் வந்து எங்கள் வண்டியை கை காட்டி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். ட்ரைவர் வேகத்தை குறைக்கலானார். கை காட்டி வண்டியை நிறுத்திய இருவரும் முகத்தை மூடியிருந்தார்கள்.

முரட்டு உருவமாக தெரிந்தது. வண்டி நின்றவுடன் அருகில் வந்து கார் கதவில் தட்டி எங்களை கீழே இறங்க சொன்னார்கள். இருவர் கையிலும் கம்பி, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது. மனைவி விழித்து கொண்டு மிரள ஆரம்பித்தாள்.

நான் இறங்க முயன்றபோது ட்ரைவர் “இறங்கவே இறங்காதிங்க சார், எது நடந்தாலும் இறங்காதிங்க, நான் போய் என்னான்னு பார்த்துட்டு வர்றேன்.” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு அவர் மட்டும் இறங்கினார்.

அந்த வழிப்பறி திருடர்கள், “இருப்பதை எல்லாம் கழட்டி கொடுத்துவிட்டு போய் விடுங்கள். இல்லையெனில் மூவரையும் இங்கேயே முடித்துவிடுவோம்” என்று ஆக்ரோஷமாக அந்த வயதான டிரைவரை மிரட்டி கொண்டிருந்தார்கள்.

‘எந்த ஆயுதமும் இல்லாமல் இப்படி நிராயுத பாணியாக மாட்டிக் கொண்டோமே’ என்று, நானும் மனைவியும் பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தோம்.

அவசர எண்ணுக்கு அழைக்க முயன்றேன். போலீஸ் வருவதற்குள் இவர்கள் நம் கதையை முடித்து விடுவார்கள். வயதான டிரைவரையும், என் மனைவியையும் வைத்து இவர்களை சமாளிப்பது கஷ்டம் .

ஒரு நொடிதான். நம்ம டிரைவர் அதிரடியைக் காட்டினார். ஒரு வழிப்பறி ஆளின் காலுக்கு நடுவில் தனது காலை நுழைத்து, அவனை கீழே தள்ளி, கத்தியை பிடுங்கி, அவன் கழுத்தில் வைத்து அடுத்தவனை கம்பியை கொடுக்க சொல்லி சைகை செய்தார்.

அவன் தயங்க பிடிபட்டவன் தொடையில் கத்தியால் கோடு போட்டார். உடனே அந்த கட்டை போன்ற கம்பியை கொடுத்து விட்டான். கம்பியை தூக்கி காட்டில் எறிந்தார்.

இதற்கிடையில் தூரத்தில் ஒரு வண்டி வெளிச்சம் வரவே, இருவரும் காட்டுப்பகுதியில் இறங்கி ஓடினார்கள்.

டிரைவர் கத்தியையும் தூக்கி எதிர் பக்க காட்டில் எறிந்தார். முகத்தில் எந்த சலனமும் இல்லை. வண்டிய ஸ்டார்ட் செய்து ஓட்டலானார்.

அந்த வயதான மெலிந்த ஓலா ட்ரைவர் செய்ததை எங்களால் நம்பவே முடியவில்லை. ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருந்தது.

“சார்! பயந்திட்டிங்களா? அவனுக டம்மி திருடனுங்க சார். தொழிலுக்கு புதுசு. ஓடிட்டாங்க” என்று ரொம்ப சாதாரணமாக பேசியது எங்களை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“அண்ணா உங்களுக்கு ஏதும் அடிபட்டுச்சா?” என்று மனைவி கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுல்லம்மா” என்றார்.

“ரொம்ப நன்றிண்ணா” என்றாள்.

“எதுக்குமா நன்றி. இது என் டியூட்டி. என்னை நம்பி வண்டி ஏறிட்டிங்க. உங்கள பத்திரமாக சேர்க்கிறது என் கடமை” என்றார்.

என்னால் அந்த ஆச்சர்யத்திலிருந்து வெளியேற முடியவில்லை.

கொஞ்ச தொலைவில் போலீஸ் பட்ரோல் வண்டி வந்துக் கொண்டிருந்தது.

நான் “கம்பளைண்ட் கொடுக்கலாமா?” என்று கேட்டேன்.

ட்ரைவர் மறுத்து விட்டார். “வேண்டாம் சார். நீங்க கல்யாணத்திற்கு போக முடியாது, நம்மள நாள் முழுக்க உட்கார வச்சுடுவானுக.” என்றார்.

அதுவும் உண்மைதான்.

கல்யாண வீட்டை வந்தடைந்தோம். திருமணம் இனிதே நடந்தேறியது.

எங்கள் மிரண்ட முகங்களை பார்த்து, எல்லோரும் விசாரித்தனர். “பயண களைப்பு” என்று சமாளித்தோம். யாரிடமும் இந்த சம்பவத்தை சொல்லவில்லை.

எனக்கு டிரைவரின் அதிரடி மண்டையில் குடைந்து கொண்டேயிருந்தது. ‘அவர் சாதாரண ஆள் இல்லை, ஒரு கை தேர்ந்த வித்தைக்காரன் என்பது மட்டும் நிச்சயம்.’

மனைவி உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் வண்டியை நோக்கி போனேன்.

டிரைவர் என்னை பார்த்துவிட்டு “கிளம்பலாமா சார்?” என்றார்.

“இருப்பா, அம்மா வரட்டும். போகலாம்” என வண்டிக்குள் உட்கார்ந்தேன்.

“அய்யனார் நீங்க இதுக்கு முன்னாடி என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க?” என்று கேட்டேன்.

“நீங்கள் வெறும் டிரைவர் மட்டும் இல்லை. உண்மையை சொல்லுங்கள். நான் 25 வருடம் போலீசில் வேலை பார்த்து ரிடைர்டு ஆனவன். என்னிடம் பொய் சொல்லாதீர்கள்.” என்று தீர்க்கமாக கேட்டேன்.

நிறைய மழுப்பலுக்கு பின், தன் முன் பாதி வாழ்க்கையை சொன்னார்.

அயோத்தி குப்பத்தில் ஒரு பெரிய ரவுடி டீமில் வேலை பார்த்ததாகவும், கொலை கொள்ளை, குடி, பொம்பளைங்க என்று புகுந்து விளையாடியதாகவும், ஒரு கட்டத்தில் கஞ்சாவிற்கு அடிமையாகி காசி வரை போய் அங்கேயே அகோரிகளுடன் தங்கி, அதுவும் அலுத்து போகவே, சில வருடங்களில் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கே வந்து விட்டதாகவும் சொன்னார்.

இதற்கிடையில் அந்த ரவுடி தலைவனை போலீஸ் கொன்றுவிட, இவருக்கும் அந்த தொழிலில் நாட்டமில்லாமல் போக, கடைசி வரை திருமணம் குடும்பம் என்று எதுவும் அமையாமல், தூரத்து மகள் உறவு சொந்தகார பெண் வீட்டில் அடைக்கலமாகி, இந்த சாரதி வேலையை தொடர்வதாகவும் என்று பாட்ஷா பட பிளாஷ் பேக் ரேஞ்சுக்கு அவர் தன் முன்கதை சுருக்கத்தை சொல்லி முடித்தார்.

எனக்குள் அயர்ச்சி தொற்றிக் கொண்டது. ‘எத்தனை எத்தனை மனிதர்கள்? அவர்கள் வாழ்க்கை விசித்திரங்கள்! இறைவா” என்று பெருமூச்சுச்செறிந்தேன்.

திரும்ப சென்னை வரும் போது யாரும் எதுவும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.

“ஓலா ஆப்பில் காட்டிய தொகைக்கு அதிகமாக ஒரு காசும் வேண்டாம்” என்று ட்ரைவர் மறுத்துவிட்டார்.

என் மனைவி கொடுத்த பலகார பைகளை மட்டும், ரொம்ப வற்புறுத்திய பின் தயங்கியபடியே வாங்கி கொண்டு விடை பெற்றார்.

ஓலா ஆப்பில் இருந்து ட்ரைவர் பீட் பேக் கேட்டார்கள். ஐந்து நட்சத்திரம் – எக்ஸ்சலெண்ட் என்ற மதிப்பீட்டுக்கு மேல் அதில் எந்த ஆப்ஷனும் இல்லை.

காக்கும் கடவுள் அய்யனாருக்கு ஸ்டார் ரேட்டிங் பொருந்துமா? சாதாரண மனிதர்கள் எப்படிக் கடவுளை மதிப்பிட முடியும்?

முனைவர் க. வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

5 Replies to “ஓலா – சிறுகதை”

 1. கதைக்களம் எப்படி உங்கள் கைவசம் ஆகிறது?

  எல்லா இடங்களிலும் கருக்கள் கிடக்கின்றன. அதைக காணும் கண்கள் தான் நமக்கு இல்லை. அந்தப் படைப்புகளுக்கான கண்களை நீங்கள் மிக அருமையாகவே பெற்றிருக்கிறீர்கள்.

  ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு கதை உங்களிடம் உருவாகிறது. அதை அழகாகச் சொல்லும் வகையில் மாறி இருக்கிறீர்கள். தரமான இலக்கிய நயம் உள்ள உண்மைகளும் உருவாக்கங்களும் மிகுந்து இருக்கிற கதையாக இக்கதை அமைந்திருக்கிறது.

  உணர்வு மேலிடல், உளப்பகுப்பாய்வு போன்றவை சிறுகதையின் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று. உள்ள உணர்வுகள் மிகச்சரியாக அளவோடு அங்கே பதியம் இடப்பட வேண்டும். அதை இக்கதை செய்திருக்கிறது.

 2. 1.நான் படித்து முடித்த பின் இந்த கதை என்னுள் ஒரு புது டிரைவர் தோற்றத்தை உருவாக்கியது.

  2.குடும்பத்தை அண்டை நாட்டுடன் சாடியதில் கதை ஆசிரியரின் நிதானம் மிகவும் அருமை.

  3.பயணத்தின் போது ஏற்படும் சிக்கல்களை மற்ற குடும்பத்தில் கூறாமல் சந்தோசமான நிலையில் இருக்க செய்தது, நான் இந்த கதை மூலம் கற்றுக்கொண்ட சிறந்த பாடம்.

 3. அருமையா இருக்கு…

  சீரான போக்கு…

  ஒப்பீடுகள் உங்கள் அனுபவத்தை காட்டுகிறது…

  படித்த பின்பு நிறைய நேரம் அதுவே மண்டையில் ஓடுகிறது…

 4. Very interesting to read every paragraph.

  First of all congrats sir for your literary writing skill. It is really motivating me to reading habits of novel, story or another literature.

  Sir You handled in a experienced way With this OLA Driver story.

  Thanks and Congratulations

  With regards
  Dr B Kalaiyarasan

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.