கக்கின பிள்ளை தக்கும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இளம் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்ததை புதருக்கு அருகிலிருந்த சிங்கக்குட்டி சிங்காரம் கேட்டது.
‘ஆகா, பழமொழி பற்றி தெரிந்து வட்டப்பாறையில் கூறும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்து விட்டது. இப்பழமொழி பற்றி பாட்டி கூறுவதைத் தொடர்ந்து கேட்டு அதனைக் கூறி இன்று எல்லோரையும் நாம் அசத்தி விடவேண்டும் என்று மனத்திற்குள் அது நினைத்தது.
பாட்டி கூறும் பழமொழியின் விளக்கம்
பாட்டி கூறும் பழமொழியின் விளக்கத்தினை சிங்கக்குட்டி சிங்காரம் தொடர்ந்து கேட்கலானது.
பாட்டி பெண்களிடம் “இந்தப் பழமொழியின் அருமை சிறு குழந்தைகள் பராமரித்து வரும் தாய்மார்களுக்கு நன்கு புரியும். இப்பழமொழியை விளக்க நகைச்சுவையான கதை ஒன்றைச் சொல்வர்.
ஒரு இளம் தம்பதிக்கு குழந்தை ஒன்று பிறந்திருந்தது. ஒரு நாள் மனைவி “குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள், நான் சமையல் வேலையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்” எனக்கூறி குழந்தையை கணவனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் தகப்பனோ அது ஜட்டியை ஈரமாக்கி விட்டது போலும் என எண்ணி ஜட்டியை மாற்ற முற்பட்டான்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த மனைவி குழந்தையை வாங்கி அதன் முதுகில் இருந்த எறும்பை அகற்றினாளாம். குழந்தையையும் அழுகையை நிறுத்தியதாம்.
சிறிது நேரம் கழித்து குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தது. இப்பொழுது கணவனே குழந்தையை எறும்பு கடிக்கிறதா? எனப் பார்த்தானாம்.
இப்பொழுதும் அங்கு வந்த மனைவி குழந்தைக்கு பாலூட்டி விட்டு கணவனிடம் தர அது அழுகையை நிறுத்தியது.
மீண்டும் சிறிது நேரம் கழித்து குழந்தை அழ ஆரம்பித்தது. கணவன் ‘பசியினால் அழுகிறது என நினைத்தான். மனைவி அங்கு வந்து குழந்தையின் முதுகில் இருந்த ஈரத்துணியை மாற்றிவிட குழந்தை அமைதியானது.
சற்று நேரம் கழித்தபின் அந்தக் குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தது,
கணவனோ குழந்தை படுத்திருந்த துணி ஈரமாகிவிட்டதா என பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தாய், அக்குழந்தையின் ஜட்டியை மாற்றிவிட்டு சென்றாளாம்.
இப்படியாக குழந்தையின் அழுகையின் பொருளைக் கணவனால் அறிந்து கொள்ள இயலாது.
அது குழந்தையின் தாயால் மட்டுமே முடியும் என நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. இது போன்றே மேற்கூறிய பழமொழியின் பொருளையும் தாய்மார்களே அறிய இயலும்.
அதாவது சிறு குழந்தைகள் பசியெடுத்து அழுது அதன் பின் தாய்ப்பால் அருந்தினால் பால் அருந்திய சிறிது நேரம் கழித்து சிறிய அளவு பாலை கக்கும்.
“இவ்வாறு கக்குகிற குழந்தை ஆரேக்கியமானது எனவும் அக்குழந்தையே நிலைத்து வாழும் என்பதையே இப்பழமொழி கூறுகிறது.” என்று பாட்டி கூறினார்.
பழமொழியின் விளக்கத்தை கேட்டறிந்த சிங்கக்குட்டி சிங்காரம் வட்டப்பாறையினை நோக்கி புறப்பட்டது.
பழமொழியின் மற்றொரு விளக்கம்
காக்கை கருங்காலனிடம் அனுமதி பெற்று தான் கேட்ட கக்கின பிள்ளை தக்கும் பழமொழி மற்றும் விளக்கம் பற்றி வட்டப்பாறையில் கூடியிருந்த எல்லோருக்கும் விளக்கிக் கூறியது.
காக்கை கருங்காலன் “என் அருமை குஞ்சுகளே, குட்டிகளே சிங்கக்குட்டி சிங்காரம் தான் கேட்டறிந்த பழமொழி பற்றி நன்கு விளக்கினான். அது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் இப்பழமொழிக்கு இன்னொரு பொருளும் உள்ளது. நான் அறிந்த பழமொழியின் இன்னொரு விளக்கத்தைப் பற்றிக் கூறுகிறேன்.
அதாவது கக்கின பிள்ளை என்பது தான் வாய் மொழியாக கற்ற கல்வியை சிறிது கூட கூட்டியோ குறைத்தோ இல்லாமல் கக்குகிற பிள்ளை என்ற பொருளில் பார்க்க வேண்டும்.
படித்த குழந்தைகள் தான் படித்ததை திரும்பச் சொல்லும் போது அதன் நினைவாற்றல் மேம்பாடு அடைகிறது.
அதனால் தான் படித்தவற்றை கக்குகிற குழந்தைகள் நிலைத்து நின்று பலரிடமும் பாராட்டு பெறும் (தக்கும்).
நாளை இன்னொரு பழமொழி பற்றி தெரிந்து கொள்வோம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942