கங்கை டால்பின்

கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்

இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா?

கங்கை டால்பின் தான்.

டால்பின் பொதுவாக மனிதர்களிடம் நெருங்கிப் பழகும். டால்பின் அடிக்கும் குட்டிக்கரணம் எல்லோருக்கும் பிடிக்கும். டால்பின் பொதுவாக கடலில்தான் இருக்கும்.

ஆனால் இங்கே குறிப்பிடப்படும் கங்கை டால்பின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் காணப்படுகிறது. இது சுத்தமான நன்னீரில் வாழும் பாலூட்டி ஆகும்.

கங்கை நதி தேவதையின் வாகனமாக இதனை புராணங்கள் கூறுகின்றன. இது தமிழில் கங்கை ஆற்று ஓங்கில் என்று அழைக்கப்படுகிறது.

 

கங்கை டால்பினின் மீது கங்காதேவி
கங்கை டால்பினின் மீது கங்காதேவி

 

இதனுடைய அறிவியல் பெயர் பிளாடானிஸ்டா கேன்ஜிட்டிக்கா என்பதாகும். இவை சூசு மற்றும் சூன்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

உலகில் நதிகளில் வாழும் மூன்று முக்கிய இனங்களில் இதுவும் ஒன்று. இது குருட்டு டால்பின் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இவ்வகை டால்பின்கள் எண்ணிக்கை 1800-க்கும் குறைவாகவே உள்ளது.

அழிவின் விளிம்பில் உள்ளதால், இதனை சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் [International Union for Conservation of Nature (IUCN)], பாதுகாக்கப்பட்ட நீர்வாழ் உயிரினமாக அறிவித்துள்ளது.

கங்கை டால்பினின் வாழிடம் மற்றும் குணநலன்கள்

இது இந்தியா, வங்காளதேசத்தில் உள்ள கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா, கர்ணபுலி-சாங்கு ஆகிய நதிகள் மற்றும் அவற்றின் கிளை நதிகளிலும், நேப்பாளத்தில் உள்ள சப்தா கோஷி, கர்னாலி நதிகளிலும் காணப்படுகின்றது.

கங்கை டால்பின் தனித்தோ, சிறுகூட்டமாகவோ காணப்படுகின்றன. தாயும், குட்டியும் இணைந்தோ காணப்படும்.

குட்டிகள் சாக்லேட் பழுப்பு நிறத்தில் இருக்கும். வளர்ந்த இவ்வகை டால்பின் சாம்பல் பழுப்பு நிறத்தில் ரோமம் இல்லாமல் இருக்கும்.

 

கங்கை டால்பின்
கங்கை டால்பின்

 

இது மெல்லிய நீண்ட கூர்மையான மூக்கினையும், பெரிய தலையையும் கொண்டிருக்கும். தலையின் மேற்புறத்தில் உள்ள துளை மூக்காக செயல்படுகிறது.

இது சுமார் 130 பற்களைக் கொண்டுள்ளது. வாய் மூடியிருக்கும் போதும் இதனுடைய மேல் மற்றும் கீழ்தாடைப் பற்கள் வெளியில் தெரிகின்றன.

இளமையாக இருக்கும்போது, இதனுடைய பற்கள் ஒரு அங்குல நீளத்தில் வளைந்து காணப்படும். வளர்ந்தநிலையில் இதனுடைய பற்கள் சதுரமாகவும், தட்டையாகவும் மாறுகின்றன.

 

கங்கை டால்பின் நீந்தும்போது
கங்கை டால்பின் நீந்தும்போது

 

இவற்றில் முதுகுத்துடுப்பானது ஒருசிறிய முக்கோணவடிவக் கட்டியைக் கொண்டுள்ளது. வால்பகுதி நீண்டு மெலிந்து இருக்கிறது.

இவற்றின் கண்களில் லென்ஸ் கிடையாது. ஆதலால் இவற்றால் தெளிவாக பார்க்க இயலாது. கண்களால் ஒளியை மட்டும் உணர முடியும்.

இவை வேட்டையாடும்போது எதிரொலித்தலைப் பயன்படுத்துகின்றன. மீயொலி அலைகளை உருவாக்கி, எதிரில் இருப்பவற்றில் மோதச் செய்து, இரையை உணர்ந்து வேட்டையாடுகின்றன.

இவை பாலூட்டி இனத்தைச் சார்ந்ததால், நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கும். அதற்காக இவை தண்ணீரின் மேற்பரப்பிற்கு 30-120 விநாடிகளுக்கு ஒருமுறை வருகின்றன.

இவை தண்ணீரின் மேற்பரப்பில் மூச்சுவிடும்போது, ‘சூ..சூ..’ என்று ஒலி எழுப்புதால், இவை சூசு என்றழைக்கப்படுகின்றன.

இதில் பெண்மீன்கள், ஆண்மீன்களைவிட அளவில் பெரியவை. பெண்மீன்கள் 2.6மீ நீளத்திலும், ஆண்மீன்கள் 2.1மீ நீளத்திலும் இருக்கின்றன.

இவ்வகை மீன்கள் 10 வயதில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனுடைய கர்ப்ப காலம் 9-10 மாதங்கள். இவை 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருகுட்டியை ஈனுகின்றன. பொதுவாக ஜனவரி முதல் மே வரை உள்ள காலங்களில் குட்டி ஈனுகின்றன.

பருவமழை காலங்களில், இவை பெரிய நதிகளைவிட்டு கிளை நதிகளுக்குச் சென்று விடுகின்றன. எப்போதாவது இவை தண்ணீரில் துள்ளிக் குதிக்கின்றன.

 

கங்கை நதி டால்பின் துள்ளிக் குதித்தல்
கங்கை நதி டால்பின் துள்ளிக் குதித்தல்

 

இவை பக்கவாட்டில் நீந்துவதால், பக்க நீச்சல் டால்பின் என்று அழைக்கப்படுகின்றன.

இவை பல்வேறு வகையான மீன்கள், இறால்கள், நண்டுகள் ஆகியவற்றை உண்ணுகின்றன. சிலநேரங்களில் ஆமைகள், சிறுபறவைகளையும் உண்ணுகின்றன.

மேற்பரப்பில் உள்ள மீன்களையும், தண்ணீருக்கு அடியில் மண்ணில் இருக்கும் மீன்களையும் (நீண்ட மூக்கினால் தோண்டி) வேட்டையாடுகின்றன.

இவை பொதுவாக மீன்கள் அதிகமுள்ள, நீரின் வேகம் அதிகம் இல்லாத‌, டெல்டாக்கள் அல்லது நதிகள் இணையும் இடங்களை ஒட்டிய, ஆழமான இடங்களிலேயே வாழ்கின்றன.

கங்கை டால்பின் அழிவிற்கு காரணம் என்ன?

இவைகளின் வசிப்பிடமானது, மனிதனின் மீன் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆதலால் மனிதனுக்கும் இவற்றிற்கும் இடையே, மீன்களுக்கான போட்டி அதிகரித்து, உணவு இழப்பு ஏற்பட்டு இவை அழிகின்றன.

வேளாண்மைக்காகவும், மின்உற்பத்திக்காகவும் மனிதன் கட்டியுள்ள அணைகள், பாலங்கள் தடுப்புவெளிகள் இவற்றின் நகர்தலைத் தடைசெய்கின்றன. இதனால் இவற்றின் இனப்பெருக்கத்திறன் பாதிப்படைகிறது.

படகுப் போக்குவரத்து இவற்றின் அழிவிற்கு ஒரு முக்கியமான காரணம். மீயொலி அலைகளைப் பயன்படுத்தி உணவினைப் பிடிக்கும் இவை, படகுகளின் போக்குவரத்தால் குழப்பமடைகின்றன. அதனால் தனக்கான உண்வைப் பிடிக்க சிரமப்படுகின்றன.

பலநேரங்களில் மனிதன் மீனுக்காக விரித்த வலைகளில், தவறுதலாக இவை மாட்டிக் கொண்டு இறக்கின்றன.

மாமிசம் மற்றும் எண்ணெய்க்காக, இவ்விலங்குகள் திருட்டுத்தனமாக அதிகமாக வேட்டையாடப்படுகின்றன.

வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் நதிகளில் கலப்பதாலும், தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் நேராடியாக ஆற்றில் கலப்பதாலும் உண்டாகும் நீர்மாசுபாடு, இவ்விலங்கினத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

காடுகளை அழித்தல், மண் எடுத்தல் போன்ற நிகழ்வுகளும் இதனைப் பாதிக்கின்றன.

கங்கை டால்பின் ஏன் முக்கியமானவை?

நன்னீர் வாழிட உணவுச் சங்கிலியில் இவை முதலிடம் வகிக்கின்றன. ஆதலால்தான் இவை ஆற்றுப் புலிகள் என்று சிறப்பாக அழைக்கப்படுகின்றன. இவை சுற்றுசூழல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றின் அழிவு இவற்றின் இரைகளின் பெருக்கத்தை அதிகரித்து, ஆற்றின் பல்லுயிரித் தன்மையை பாதிக்கும். போதுமான எண்ணிக்கையிலான இவை, நதி அமைப்பில் அதிக பல்லுயிரியலை (Bio Diversity) உறுதி செய்து சுற்றுசூழல் சமநிலையை பாதுகாக்கிறது.

ஆற்றில் வாழும் டால்பின்களில் இவை மிகவும் பழமையானவை. இவை ஆற்றில் காணப்படுவது நதியின் ஆரோக்கியம் என்று உயிரிலாளர்கள் கருதுகின்றனர்.

குறைந்து வரும் இவற்றைப் பாதுகாக்க இதனை இந்திய அரசு தேசிய நீர் விலங்காக 2009-ல் அறிவித்துள்ளது.

மேலும் பீகாரில் பாகல்பூர் நகரில், விக்ரம் ஷீலா கங்கை டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டு, கங்கை டால்பின்களோடு, நன்னீர் ஆமைகள் உள்ளிட்ட 135 நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கங்கையின் பொக்கிஷமான கங்கை டால்பினை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டு, அவற்றை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி, வளமான சுற்றுசூழலை எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்.

வ.முனீஸ்வரன்