கசகசா நன்மையா? தீமையா?

கசகசா நன்மையா? தீமையா? என்ற கேள்விக்கான பதிலை இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சமீபத்தில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்களை வெளிநாட்டுக்கு வாங்கிச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் அவர்.

“என்னதான் நம்ம நாட்டுல இருந்து மசாலாப் பொருட்களை வாங்கிட்டுப் போய் வெளிநாட்டுல கோழிக் குழம்பு வைத்தாலும்  நம்ம ஊரு சுவை வரமாங்டேங்குது.” என்று குறைப்பட்டுக் கொண்டார்.

ஏன் என்று விசாரிக்கையில் அவர்கள் வீட்டில் கோழி கிரேவி தயார் செய்கையில் கசகசாவை சேர்த்து சமைப்பார்களாம். அரபு நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கசகசாவை பயன்படுத்த தடை விதித்துள்ளார்கள்.

அரபு நாட்டில் வசிக்கும் அவரால் கசகசாவை எடுத்துச் செல்ல இயலவில்லை. ஆதலால் தான் கோழி கிரேவி சரியில்லை என்றார் என்பதை அறிந்து கொண்டேன்.

கசகசாவின் பயன்பாட்டிற்கு ஏன் அங்கு தடை விதித்துள்ளனர். இது என்ன தீமை தரும் பொருளா? என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவே இக்கட்டுரை.

கசகசா பற்றிய அறிமுகம்

கசகசாவின் அறிவியல் பெயர் பாப்பாவர் சோம்னிஃபெரம். இது ஆங்கிலத்தில் ஓபியம் பாப்பி விதைகள் என்று அழைக்கப்படுகிறது. ஓபியம் பாப்பி தாவரத்தின் உலர்ந்த நெற்றிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசாவாகும்.

ஓபியம் பாப்பி தாவரமானது 1.5மீ உயரம் வளரும் சிறிய குற்றுச்செடி வகையைச் சார்ந்தது. இது செழிப்பான மணற்பரப்பில் நன்கு வளர்ந்தாலும் மிதமான அமில மற்றும் காரதன்மை கொண்ட நிலங்களிலும் வளரும் இயல்புடையது.

வெள்ளை, சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களில் அழகான பூக்களைப் பூக்கிறது.

 

பூக்கள் மற்றும் போஸ்த்தக்காய்கள்
பூக்கள் மற்றும் போஸ்த்தக்காய்கள்

 

இப்பூக்களிலிருந்து பச்சைநிற 4-6 செமீ உயரமும், 3-4 செமீ விட்டமும் கொண்ட கோளவடிவிலான காய்கள் தோன்றுகின்றன. இவை போஸ்தக்காய் என்றழைக்கப்படுகிறன.

போஸ்த்தக்காய் இளமையாக இருக்கும் போது (விதைகள் உருவாகும் தருணத்தில்) அதனுடைய வெளிப்புறத் தோலினைக் கீறும் போது வெள்ளைநிற பால் போன்ற திரவம் வெளியேறுகிறது.

இத்திரவமே ஓபியம், ஹெராயின், மார்பின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுத்தப் படுகின்றது. இத்திரவம் மருந்துப் பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப் படுகிறது.

பச்சைநிற போஸ்த்தக்காய் முற்றி பழுப்பு நிறத்திற்கு மாறியதும் உள்ளிருக்கும் விதைகளே கசகசாவாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு பாப்பி தாவரத்திலிருந்து 10,000 – 60,000 வரையிலான கசகசாவிதைகள் பெறப்படுகின்றன.

ஆனால் கசகசாவில் அதிகமான போதை மற்றும் மயக்கம் தரும் பண்புகள் ஏதும் இல்லை. மாறாக கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, பி தொகுப்பு விட்டமின்கள், நார்சத்து மிகுந்து நன்மை பயக்கும் பொருளாக உள்ளது.

கசகசாவின் வகைகள்

நம் நாட்டில் கசகசாவானது வெள்ளை நிறத்தில் இருக்கிறது. ஆனால் இளம் பழுப்பு முதல் அடர்பழுப்பு வரை, நீலம், கருப்பு நிறங்களிலும் கசகசா விதைகள் உள்ளன.

நீலநிற விதைகள் ஐரோப்பியன் விதைகள் என்று அழைக்கப் படுகின்றன. மேற்கத்திய நாடுகளின் ரொட்டிகள் மற்றும் மிட்டாய் இனிப்புகளில் இவ்விதைகள் பயன்படுத்தப் படுகின்றன.

வெள்ளைநிற விதைகள் இந்திய அல்லது ஆசியா கசகசா என்றழைக்கப்படுகிறது. இது எல்லா வகையான உணவுப்பொருட்களிலும் பயன்படுத்தப் படுகிறது.

ஓப்பியம் விதைகள் ஓரியண்டல் விதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இது வணிக நோக்கத்தில் ஓப்பியத்திற்காக வளர்க்கப்படுகிறது.

கசகசாவிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. உணவுப்பொருளாகவும், சோப்புகள், வார்னிச், பெயிண்ட் தயாரிப்பிலும் இந்த எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது.

கசகசாவின் வரலாறு

இதனுடைய தாயகம் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஆசியா மைனர் என்றும் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் இதனைப் பயன்படுத்தியதை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய குறிப்புகள் மூலம் அறியலாம்.

பண்டைய எகிப்தியர்கள் கசகசாவின் அறுவடை பற்றி அறிந்திருந்தனர். அரேபியர்களின் வணிகத்தின் மூலம் ஈரான், இந்தியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா ஆகிய இடங்களுக்கு இது பரவியது.

மினோவான்கள் விதைகள், பால், ஓப்பியம் ஆகிவற்றிற்காக இதனைப் பயிர் செய்துள்ளனர். சுமேரியர்கள் மயக்கத்துடன் கூடிய பரவசத்தை பாப்பி பூக்கள் அளித்ததால் அப்பூக்களை மகிழ்ச்சி பூ என்று அழைத்தனர்.

செக் குடியரசு, ஜெர்மனி, துருக்கி, பிரான்ஸ், இந்தியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளில் இது வணிக நோக்கத்திற்காக அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

சில இடங்களில் கசகசாவிற்கு பயிர் செய்யப்பட்ட பாப்பி தாவரத்திலிருந்து திருட்டுத்தனமாக ஓபியம் எடுக்கப்படுகிறது. எனவேதான் மத்திய கிழக்கு நாடுகள், அரபு நாடுகள் கசகசாவிற்கு தடை விதித்துள்ளன.

கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கசகசாவில் அதிகளவு விட்டமின் பி1(தயாமின்), பி5(பான்டாதெனிக் அமிலம்) ஆகியவையும் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), சி, இ போன்றவையும் உள்ளன.

இதில் மிகஅதிகளவு கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவையும், அதிகளவு துத்தநாகம், மெக்னீசியம், செலீனியம் போன்றவையும், பொட்டாசியமும் காணப்படுகிறது.

இது அதிகளவு பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்களையும், நார்ச்சத்தினையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட்டும், புரதமும் காணப்படுகிறது.

கசகசாவின் மருத்துவப்பண்புகள்

இவ்விதைகளில் ஆன்டிஆக்ஸிஜென்டுகள், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்ட தாவர வேதிப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இதய நலத்திற்கு

இவ்விதையானது நிறைவுறா கொழுப்பு அமிலங்களான ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்களைக் கொண்டுள்ளது. இவ்வமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது. எனவே இதனை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்து இதய ஆரோக்கியத்தைப் பேணலாம்.

செரிமானத்தை மேம்படுத்த

இவ்விதையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உணவுப் பாதையில் உள்ள கழிவுகளை ஒன்று திரட்டி வெளியேற்ற முக்கிய காரணியாக உள்ளது.

இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளுக்கு இவ்விதை தீர்வளிக்கிறது. 100 கிராம் அளவுள்ள கசகசாவிதையானது ஒருநாளின் நார்ச்சத்து தேவையில் 51 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. எனவே இதனை உண்டு செரிமானத்தை மேம்படுத்தலாம்.

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க

இவ்விதையில் உள்ள துத்தநாகச்சத்தானது உடலில் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்த துத்தநாகச்சத்து உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவித்து நோய் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. எனவே இவ்விதையை அடிக்கடி அளவோடு உணவில் சேர்த்து நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கலாம்.

ஆரோக்கியமான தூக்கத்திற்கு

கசகசாவை உணவில் பயன்படுத்தும்போது இதில் உள்ள ஆல்கலாய்டுகள் உடலில் உள்ள கார்டியோசோல்களின் அளவினைக் குறைக்கிறது. இதனால் அழுத்தமானது குறைந்து ஆழந்த ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கிறது. எனவே ஆழ்ந்த தூக்கத்தை விரும்புபவர்கள் கசகசாவை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு

இவ்விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் லினோலெனிக் அமிலம் ஆகியவை சருமத்தைப் பொலிவுறுச் செய்கின்றன.

இவ்விதையை தண்ணீர் அல்லது பால் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவ சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து பளபளக்கச் செய்யும்.

கசகசாவின் விழுதுடன் சிலதுளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அரிப்பு, நமைச்சல், தோலழற்சி, தீக்காயங்கள் மீது தடவி நிவாரணம் பெறலாம்.

தயிர் சேர்த்து அரைத்த இவ்விதையின் விழுதினை முகத்தில் தடவ பருக்கள், வடுக்கள் இன்றி முகம் பளபளக்கும்.

கேச பராமரிப்பிற்கு

இவ்விதைகளில் உள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் ஆரோக்கியமான பளபளக்கும் கூந்தலுக்கு காரணமாகின்றன.

தண்ணீர் அல்லது பால் சேர்த்து அரைத்த கசகசா விழுதினை கூந்தலில் தடவ முடி தெறித்தல் நீங்கி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியைப் பெறலாம்.

தயிருடன் இவ்விதைகளை அரைத்து விழுதாக்கி மிளகுத்தூள் கலந்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகு பிரச்சினை நீங்கி விடும்.

கண் பார்வை மேம்பட

இவ்விதைகளில் உள்ள துத்தநாகச்சத்தானது வயதோதிகத்தால் உண்டாகும் மாஸ்குலார் குறைபாடு உள்ளிட்ட கண்நோய்கள் வராமல் பாதுகாத்து கண் பார்வை மேம்படுத்துகிறது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கண் பார்வையை மேம்படுத்தலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

இவ்விதைகளில் உள்ள தாமிர‌ மற்றும் கால்சிய தாதுக்கள் எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களைப் பலப்படுத்த உதவுகிறது.

மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் கால்சியத்துடன் இணைந்து எலும்புத்திசுக்களை உருவாக்க உதவுகிறது.

மேலும் இதில் உள்ள மாங்கனீஸ் கொலாஜன் உற்பத்திற்கு உதவுவதோடு எலும்புகளுக்கு தீவிர சேதம் உண்டாகாமலும் பாதுகாக்கிறது.

ஆரோக்கியமான மூளைக்கு

இவ்விதைகளில் மூளையின் செயல்திறனுக்குத் தேவையான கால்சியம், செம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிகளவு உள்ளன.

இத்தாதுக்கள் நரம்பு டிரான்மிட்டர்களை சரிசெய்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

பெண்களின் ஆரோக்கிய கருவுறுதலுக்கு

கருவுறாத பெண்களின் ஃபெலோபின் குழாய்களை பாப்பி விதை எண்ணெயைக் கொண்டு சுத்தப்படுத்துவதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஃபெலோபியன் குழாய்களில் அடைப்பு உண்டாகும்போது கருமுருட்டை கருப்பையை அடைவது தடைப்பட்டு கருவுறுதல் நிகழ்வதில்லை.

இவ்விதை எண்ணெய் ஃபெலோப்பியன் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கவதோடு விலையுயர்ந்த ஐவிஎப் முறைக்கு மாற்றகவும் திகழ்கிறது.

கசகசாவை வாங்கி பாதுகாக்கும் முறை

இதனை வாங்கும்போது ஒரே மாதிரியான அளவில் சிறிய எடை குறைவானவற்றை வாங்க வேண்டும்.

இதில் பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆக்ஸினேற்றம் அடைந்து கெட்ட வாசனையைத் தோற்றுவிக்கும்.

எனவே இதனை உலர்ந்த காற்று புகாத டப்பாக்களில் அடைத்து ஈரமில்லாத இடங்களில் வைத்து 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

கசகசாவானது பொதுவாக விழுதாக்கப்பட்டு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. கடல் உணவுகள், ரொட்டிகள் ஆகியவற்றின் மீது முழுதாக தூவப்படுகிறது.

இதிலிருந்து பாயாசம் தயார் செய்யப்படுகிறது. இனிப்புகள், கேக்குகள், பிஸ்கெட் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

கசகசாவானது ஓப்பியம் செடிகளிலிருந்து பெறப்படுவதால் அளவுக்கு அதிகமாக உண்ணும்போது மீண்டும் உண்ணும் உணர்வை ஏற்படுத்தும். இதனால் தீய விளைவுகள் உண்டாகும்.

3 கிலோ உடல் எடைக்கு ஒருநாளைக்கு ஒரு தேக்கரண்டி கசகசா விதைகள் போதுமானது.

கசகசாவை பயன்படுத்தும்போது தண்ணீரில் நன்கு கழுவி பின்னர் பயன்படுத்தினால் இதனுடைய முழுமையான பயன்களைப் பெறலாம். ஆதலால் கசகசாவை அளவோடு அடிக்கடி பயன்படுத்தி உடல்நலனை மேம்படுத்தலாம்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “கசகசா நன்மையா? தீமையா?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.