கடப்பா அல்லது கடப்பா சாம்பார் அருமையான குழம்பு ஆகும். சிறுபருப்பு சேர்த்து செய்யப்படுவதால் இதனுடைய சுவை மிகவும் அபாரமாக இருக்கும்.
இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட டிபன் வகைகளுக்கு இது மிகவும் பொருத்தம். சாம்பார், சட்னி, குருமா ஆகியவற்றிற்குப் பதிலாக இதனை செய்து அசத்தலாம்.
தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் இது மிகவும் பிரபலம்.
இதனை செய்வது மிகவும் எளிது. இதனை நீங்களும் செய்து அசத்துங்கள். இனி சுவையான கடப்பா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

சிறுபருப்பு (அ) பாசிப்பருப்பு – 100 கிராம்
சீரகம் 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி 3/4 ஸ்பூன்
உருளைக் கிழங்கு – 1 எண்ணம் (பெரியது)
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (சற்று பெரியது)
தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
மல்லி இலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை
முந்திரிப் பருப்பு – 5 எண்ணம் (முழுமையானது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
இஞ்சி – முக்கால் சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
பெருஞ்சீரகம் 1/2 ஸ்பூன்
தேங்காய் 1/4 மூடி (4 ஸ்பூன் துருவல்)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1 எண்ணம்
கிராம்பு – 3 எண்ணம்
பட்டை – சுண்டு விரல் அளவு
ஏலக்காய் – 1 எண்ணம்
கறிவேப்பிலை – 2 கீற்று
செய்முறை
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி நெல்லிக்காய் அளவு பெரிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி பொடித் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி கீறிக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெள்ளைப்பூண்டு, இஞ்சி, தேங்காய், முந்திரிப்பருப்பு, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

குக்கரில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி மற்றும் சீரகம் சேர்த்து, பாசப்பருப்பினைப் போல் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, 3 விசில் வரும்வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கினை லேசாக கரண்டியால் நசுக்கி விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்ல ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும்வரை வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு கலவையைக் கொட்டி கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


ஒரு கொதி வந்ததும், அரைத்த தேங்காய் விழுதினைச் சேர்த்து கிளறி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.


தேங்காய் விழுதின் பச்சை வாசனை போய் தேவையான பதம் வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அடுப்பினை அணைத்து விடவும்.

சுவையான கடப்பா தயார்.
குறிப்பு
பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் கடப்பாவை கெட்டியாக்கும். மேலும் சூடு ஆறியதும் பாசிப்பருப்பு கெட்டியாகும். ஆதலால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான பதத்தில் கடப்பாவை இறக்கிக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பிற்கு பதில் பொரிகடலையைச் சேர்த்து கடப்பா தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் முந்திரிப்பருப்புடன் கசகசாவையும் சேர்த்து கடப்பா தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் நல்ல எண்ணெய்க்குப் பதிலாக விளக்கெண்ணெய் பயன்படுத்தி கடப்பா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!