தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் கடலின் அலை ஓசையோடு இறைவனின் கருணை பொங்கும் இடங்களாக விளங்குகின்றன.

மாமல்லபுரக் கடற்கரை கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நாகபட்டின‌ம் காயாரோகனேஸ்வரர் கோவில், கோடியக்கரை அமிர்தக்கடேஸ்வரர் கோவில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில், கன்னியாகுமரி குமரிஅம்மன் கோவில் ஆகியவையே தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் ஆகும்.

 

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்
கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.

இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இவ்விடத்தில் மொத்தம் ஏழு கோவில்கள் இருந்தாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கோவிலின் பெரும்பாலான சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை ஆகும்.

இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர்.

இக்கோவிலில் உள்ள தாரா லிங்கம், சோமஸ்கந்த சிற்பம் வரலாற்றுப் பொக்கிசம் ஆகும். உலகப் பாராம்பரிய சின்னங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

பழந்தமிழரின் ஆன்மீகமும், கலையும் இணைந்த இடம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது.

 

அஷ்டலட்சுமி கோவில், சென்னை

அஷ்டலட்சுமி கோவில், சென்னை
அஷ்டலட்சுமி கோவில், சென்னை

இத்தலம் சென்னை பெசன்ட் நகரில் வங்க கடலின் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன.

முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள் புரிகின்றனர்.

இரண்டாவது தளத்தில் திருமால் திருமகளுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின்பே ஏனைய தெய்வங்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள்புரிகின்றனர்.

நான்காவது தளத்தில் தனலட்சுமி அருள்பாலிக்கிறார். இக்கோவில் 1976-ல் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கோபுரத்தின் நிழலானது தரையில் விழுவதில்லை.

அஷ்ட‌லட்சுமிகளை வழிபட நம் வாழ்விற்குத் தேவையான ஆரோக்கியம், குழந்தைச்செல்வம், சௌபாக்கியம், தனம், உணவு, வெற்றி, தைரியம், ஞானம் ஆகியவை கிடைக்கும். இக்கோவிலில் ஆயிரக்கணக்கனான பக்கதர்கள் தினமும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.

 

மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்

மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்

இத்தலம் சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

இத்தலம் வான்மீகி முனிவர் வழிபட்ட இடம் ஆதலால் திருவான்மியூர் என்றழைக்கப்படுகிறது.

தன்னுடைய பாவம் நீங்க காமதேனு இத்தல இறைவனின் மீது பால் சொரிந்து வழிபட, இறைவனின் திருமேனி பாலின் நிறமாகக் காட்சியளித்தால் இவர் பால்வண்ணநாதர் என்றழைக்கப்படுகிறார்.

அகத்தியருக்கு திருமணக்காட்சி அளித்து அகத்தியருக்கு நோய்களுக்கான மருந்தினை உபதேசம் செய்து அகத்தியரின் வயிற்றுவலியைக் குணமாக்கியதால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர் என்றழைக்கப்படுகிறார்.

அபயதீட்சர் என்ற பக்கதரின் வேண்டுகோளை ஏற்று இத்தல மூலவர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். அம்மை தெற்கு நோக்கியும் ஏனைய தெய்வங்கள் கிழக்கு நோக்கியும் அருள்புரிகின்றனர்.

இத்தலத்தில் கோ பூஜையும், பால் அபிசேகமும் சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. இத்தல இறைவனை வழிபட பாவங்கள், நோய்கள் தீரும். வன்னியை வழிபட முக்தி கிடைக்கும்.

இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும்.

 

காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்

காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்
காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்

பழங்காலத்தில் இத்தலம் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். (காயம் – உடல், ஆரோகணம் – கட்டி தழுவுதல்).

அம்மை தன்னுடைய நீலநிற விழிகளால் அருளை வழங்குவதால் நீலதாயாட்சி என்றும், கருந்தடங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார்.

நீலதாட்சியின் சன்னதியில் உள்ள நந்தியெம்பெருமான் கழுத்தைத் திருப்பி வலக்கண்ணால் அம்மையும், இடக்கண்ணால் அப்பனையும் பார்ப்பதால் இரட்டைப்பார்வை நந்தி என்று அழைக்கப்படுகிறார்.

இவரை வழிபட கண்நோய் நீங்கும். இறந்தவர்களுக்கு இத்தல இறைவனின் ஆடை மற்றும் மாலைகள் தானம் வழங்குவது இங்குள்ள சிறப்பாகும்.

இத்தலத்தில் நவகிரகங்கள் மேற்கு நோக்கி ஒரே வரிசையில் காணப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 82-வது தலமாகும்.  சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்று.

இத்தலத்தில் சுந்தர விடங்கர் மூலவருக்கு தெற்கில் முத்து விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் அருள்புரிகிறார். இவருக்கு எதிரில் மகாமண்டபத்தில் உலோக நந்தியும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காணப்படுகின்றனர்.

இவரின் சந்நிதியே விடங்கர்களின் சந்நிதிகளில் பெரியது. சுந்தர விடங்கர் அழகிய விடங்கர் என்றும், கரோக சிந்தாமணி என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் நடனம் வீசி அல்லது பாராவார தரங்க நடனம் ஆகும்.

பாராவாரம் என்பது கடலையும், தரங்கம் என்பது அலைகளையும் குறிக்கும். சுந்தர விடங்கர் கடல் அலைகள் தரைமீது சுழன்று வீழ்ந்து தணிந்து அடிப்பது போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் நடனம் புரிகின்றார். இவரை வழிபட பிள்ளைப்பேறு, செய்த பாவத்திற்கு மன்னிப்பு, முக்தி ஆகியவை கிடைக்கும்.

 

அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை

அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை
அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை

இவ்விடம் நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அமிர்தக்கடேஸ்வரர், திருக்கோடி குழகர் என்ற திருப்பெயர்களிலும், அம்மை அஞ்சனாட்சி, மைதடங்கண்ணி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் செல்லும்போது கீழே சிதறிய அமுதத்தினால் உருவானவர் ஆதாலால் இத்தல இறைவன் அமிர்தகடேஸ்வரர் ஆனார்.

இத்தலத்தில் இந்திரன், சுவேத முனிவரின் மகன் பிரமன், நாரதர், குழக முனிவர், சித்தர்கள் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தில் விநாயகர் அமிர்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு குமரக்கடவுள் ஒரு முகம், ஆறு கரங்களுடன் அமுதக்கலசம் ஏந்தி அருளுகிறார். இவ்விடத்தில் உள்ள கடலானது ஆதிசேது என்றழைக்கப்படுகிறது.

தட்சிணாய மற்றும் உத்திராணய காலங்களிலும், ஆடி மற்றும் தை அமாவாசைகளிலும் இத்தலத்தில் உள்ள கடலில் நீராடி மக்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். இவரை வழிபட பாவங்கள் தீரும். மேன்மை உண்டாகும்.

 

திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்

திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்
திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்

வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என்றாயிற்று.

இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இத்தலத்தில வீணை இல்லாத கலைமகள் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காணப்படுகிறாள்.

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பாடப்பெற்ற தலம். கோளறு பதிகம் பாடப்பெற்ற தலம். 63 நாயன்மார்களுள் ஒருவரான பரஞ்சோதி இவ்வூரைச் சார்ந்தவர்.

இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே திசையில் ஒரே வரிசையில் காணப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 125-வது தலமாகும்.  சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்று.

இத்தலத்தில் புவனி விடங்கர் மூலவருக்கு கிழக்கில் உள்மண்டபத்தில் அருள்புரிகிறார். இவருக்கு எதிரில் நின்ற நிலையில் உலோக நந்தியும், விமானத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் காணப்படுகின்றனர்.

இவரின் நடனம் ஹம்ச பாத நடனம் ஆகும். அன்னப்பறவையானது முன்னும் பின்னும் அசைந்து ஆடுவது போல் ஆடும் நடனம் ஹம்ச பாத நடனம் ஆகும். இவரை வழிபட பாவங்கள் நீங்கும். மனஅமைதி, செல்வச் செழிப்பு, கல்வி கேள்வி சிறந்த ஞானம், பிணியற்ற வாழ்வு, திருமண வாழ்வு, பிள்ளைப்பேறு ஆகியன கிட்டும்.

 

இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்

இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்
இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்

இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.

இராமன் இங்கு இராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக சிவனை வழிபட்டதாக இக்கோயில் தல வரலாறு குறிப்பிடுகிறது.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர்களால் பாடல் பெற்ற தலம் இது.

இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை வகையைச் சார்ந்தது. 1000-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.

இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப் புகழ் பெற்றது.

இக்கோயிலின் அக்னி தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு காசியில் உள்ள விஸ்வநாதருக்கு அபிசேகம் செய்தும், பின் காசியிலிருந்து கங்கைத் தீர்த்தத்தை எடுத்து வந்து இராமநாதருக்கும் அபிசேகம் செய்யப்படுகிறது. இந்நிகழ்வு காசி-இராமேஸ்வரத் தல யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத் தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தலம் இந்துகளின் புண்ணியமிக்கத் தலமாகக் கருதப்படுகிறது.

 

சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்

சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்
சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்

இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும்.

இவ்விடத்தில் குமரக்கடவுள் சூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களுடன் போர் புரிந்து அவர்களை வெற்றி பெற்ற இடமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கு கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கடல் அலைகள் வந்து மோதும் இடமாதலின் இவ்விடம் திருச்சீரலைவாய் என்றழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வணங்கியே குமரகுருபரர் பேசும் சக்தியைப் பெற்றதாகவும், ஆதிசங்கரர் வயிற்று வலி நீங்கப் பெற்று சுப்ரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

இத்தல இறைவன் திருச்செந்தில் ஆண்டான் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இங்கு கந்த சஷ்டி , ஆவணித் திருவிழா, மாசித் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

 

சுயம்புலிங்க சுவாமி, உவரி

சுயம்புலிங்க சுவாமி, உவரி
சுயம்புலிங்க சுவாமி, உவரி

இவ்விடம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

இங்கு ஒவ்வொரு மாதம் கடைசி வெள்ளியன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. வைகாசி மாதம் விசாகத்தில் இங்கு நடைபெறும் மரக மீனுக்கு அருள்புரியும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

மார்கழி முழுவதும் இத்தல இறைவன் மீது சூரியன் தனது கதிர்களால் வழிபாடு நடத்துகின்றான். மண்சுமத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பால் அபிசேகம் செய்தல் எனப் பலவாறு மக்கள் தாங்கள் வேண்டியதை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றிகடன் செலுத்துகின்றனர்.

மக்கட்பேறு, தொழில்மேன்மை, கல்விஞானம், மாங்கல்ய பாக்கியம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இத்தல இறைவன் வழங்குவதாக மக்கள் கருதுகின்றனர்.

 

குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி

குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி
குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி

இத்தலம் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.

இத்தலத்தில் இறைவி கன்னியாகத் தோன்றி குமரிப்பருவத்தில் ஈசனை மணப்பதற்காக கையில் ஜபமாலை ஏந்தி தவம் செய்து கொண்டிருக்கிறாள்.

கன்னிப்பெண்ணினால் மட்டுமே தனக்கு அழிவு வேண்டிய பாணாசூரனின் வரத்தின்படி இத்தலத்தில் அம்மை கன்னியாத் தோன்றி குமரிப்பருவத்தில் பாணாசூரனை வதைத்ததாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

இத்தலத்தில் அன்னை  அன்னைக்கு எதிரில் இருக்கும் கிழக்கு வாயில் எப்பொழும் அடைத்தே வைக்கப்பட்டிருக்கும். அதற்கு அன்னை அணிந்திருந்த மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் எனக்கருதி கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான நிகழ்வே காரணமாகும்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், விஜய தசமி என வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டும் கிழக்கு வாயில் திறந்திருக்கும்.

இவ்விடத்தில் கோவிலின் உள்ளே உள்ள கிணற்றில் இருந்து நல்ல தண்ணீர் கிடைக்கிறது. குமரி அம்மனை வழிபட நற்திருமணப்பேறு, வளமான வாழ்வு, நல்மக்கட்பேறு ஆகியவை கிடைக்கும்.

தமிழ்நாட்டின் வங்கக்கடலின் ஓரத்தில் இருக்கும் கடற்கரைக் கோவில்கள் சென்று அங்கு அருட்பாலிக்கும் இறைவனை தரிசித்து வாழ்வில் மேன்மை பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.