கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக் என்னும் இக்கட்டுரையில் நாம் எங்கோ ஓரிடத்தில் அலட்சியமாகப் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவது எவ்விதம் கடற்பறவைகளைப் பாதிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

இயற்கையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத நாம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர‌ பிளாஸ்டிக் பொருட்களைக் கண்மூடித்தனமாக உபயோகிக்கின்றோம்.

நம்மால் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் அல்லது கழிவு நீர் மூலம் கடலை வந்தடைகின்றன்.

பிளாஸ்டிக் கழிவுகள் கடல் சூழ்நிலை மண்டலத்தைக் கடுமையாக மாசுபடுத்துகின்றன.

இதனால் கடலில் உள்ள‌ சிறிய உயிரினமான‌ பிளாங்டன் முதல் பெரிய உயிரினமான திமிங்கம் வரையிலான‌ கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிப்பைச் சந்திக்கின்றன.

பொதுவாக பெட்ரல்ஸ் (petrels) ஆல்பட்ரோசஸ் (albatrosses) போன்ற கடற்பறவைகள், இனப்பெருக்க காலத்தைத் தவிர, தங்களது வாழ்வின் பெரும்பகுதியை கடலிலேயே கழிக்கின்றன.

அக்கால கட்டத்தில், உணவிற்காக, பல ஆயிரம் கிலோமீட்டர் வரை பரந்து விரிந்திருக்கும் சமுத்திரத்தை அவைகள் சுற்றி வருகின்றன.

சரி, இப்பறவைகள் எப்படி, தங்கள் உணவை அடையாளம் கண்டு கொள்கின்றன என்று தெரியுமா?

வாசனையை வைத்துதான்!

 

உதாரணமாக கடற்பாசியிலிருந்து இயற்கையாக வெளிவரும் டை-மெத்தில் சல்ஃபைடு (dimethyl sulfide) எனும் கரிம கந்தக சேர்மத்தின் வாசனையை இப்பறவைகள் நன்கு உணரக் கூடியவை.

இக்கரிம சேர்மம், கடற்பாசியின் உடலில் இருக்கும் டை மெத்தில் சல்ஃபோ நியோ புரொப்யனேட் (dimethylsulfoniopropionate) எனும் சேர்மம் சிதைவுறுவதால் உண்டாகக் கூடியது.

அதாவது, கிரில் (ஒர் சிறு கடல் வாழ் மீன் இனம்) போன்ற உயிரினங்கள், கடற்பாசியை உண்ணும்போதோ அல்லது கடற்பாசி இறக்கும் போதோ, அவற்றின் செல்கள் சிதைக்கப்படுகின்றன.

அப்போது, அதிலிருக்கும் டை மெத்தில் சல்ஃபோ நியோ புரொப்யனேட் சேர்மமானது நுண்ணுயிரியால் வளர்ச்சிதை மாற்றம் அடைந்து டை மெத்தில் சல்ஃபைடை உண்டாக்குகின்றது.

இதன் வாசனையால் கிரில் போன்ற உயிரினங்களை இக்கடற்பறவைகள் எளிதில் கண்டறிந்து அவற்றை உணவாக்கிக் கொள்கின்றன.

 

இந்நிலையில் தான், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், கடற்பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்கின்றனர் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேப்ரியல் நெவிட் தலைமையிலான ஆய்வுக் குழுவினர்.

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் கடற்பாசிகள் படிகின்றனவாம்.

வழக்கம்போல், கடற்பாசியிலிருந்து வெளிவரும் வாசனையால் ஈர்க்கப்படும் கடற்பறவைகள், கடற்பாசிகள் படிந்த‌ பிளாஸ்டிக் கழிவுகளை தவறுதலாக‌ உணவென கருதி உட்கொள்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

பிளாஸ்டிக்கைத் தூக்கிச் செல்லும் பறவை
பிளாஸ்டிக்கைத் தூக்கிச் செல்லும் பறவை

 

இதனால் கடற்பறவைகள் கடுமையான பாதிப்பை அடைவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நம்முடைய பொறுப்பற்றதனத்திற்கு அப்பாவிகளான கடற்பறவைகள் பலியாகின்றன. அவை பாதிக்கப்படுவதால் கடல் சூழ்நிலை மண்டலமே பாதிக்கப்படும். ஒருநாள் அந்தப் பாதிப்பு நம்மையும் பழிவாங்கும்.

இந்தப் பூமி நமது தலைமுறைக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணி வாழாமல் இனி வரும் தலைமுறைக்கும் பூமி இருக்கட்டும் என நினைத்து செயல்பட ஆரம்பிப்போம்.

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
WhatsApp +91 9941633807

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.