கடலைமாவு பிரெட் டோஸ்ட் அருமையான சிற்றுண்டி. முட்டை விரும்பாத சைவப் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதனை காலை, மாலை நேரங்களில் சிற்றுண்டியாக செய்து உண்ணலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இதனை விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.
இனிப்பு பிரெட், கோதுமை பிரெட் என எந்த வகை பிரெட்டையும் பயன்படுத்தி இதனைத் தயார் செய்யலாம்.
இனி சுவையான கடலைமாவு பிரெட் டோஸ்ட் செய்யும்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இனிப்பு பிரெட் துண்டுகள் – 6 எண்ணம்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – சிறிதளவு
ஓமம் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (சிறியது)
தக்காளி – 1 எண்ணம் (சிறியது)
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – டோஸ் செய்ய தேவையான அளவு
கடலைமாவு பிரெட் டோஸ்ட் செய்முறை
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டவும்.
இஞ்சியை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
ஓமத்தை தூசி கல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, ஓமம், பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மாவுக் கலவையுடன் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். கலவையை ஸ்பூனில் எடுக்கும்போது கீழே ஒழுகாதவாறு இருக்க வேண்டும்.
மாவுக் கலவையில் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிதளவு மாவு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு தயார் செய்யவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய விடவும்.
பிரெட் துண்டின் ஒருபுறத்தை மாவுக் கலவையில் தோய்த்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லில் லேசாக எண்ணெய் விட்டு மாவுக்கலவை உள்ள பிரெட் பகுதி மேற்புறம் இருக்குமாறு போடவும்.
அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
30 விநாடிகளில் பிரெட்டினை திருப்பிப் போட்டு அதன் மேற்புறம் மாவுக்கலவையை ஸ்பூனில் எடுத்து தடவவும்.
சுற்றிலும் லேசாக எண்ணெய் விடவும்.
அடுத்தடுத்த 30 விநாடிகளில் பிரெட் துண்டினை திருப்பிப் போட்டு வேக விடவும்.
பிரெட் துண்டின் இருபுறமும் மாவுக்கலவை வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான கடலைமாவு பிரெட் டோஸ்ட் தயார். சூடாக இதனைப் பரிமாறவும்.
விருப்பமுள்ளவர்கள் சூடாக உள்ள கடலை மாவு பிரெட் டோஸ்ட்டை நான்கு துண்டுகளாக்கி, அதன் மேல் மிளகு சீரகப் பொடித் தூவி உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் குடை மிளகாயை சிறிய சதுரத் துண்டுகளாக்கி மாவில் சேர்த்து டோஸ்ட் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு புதினா இலையை பொடியாக நறுக்கிச் சேர்த்து டோஸ்ட் தயார் செய்யலாம்.
அடுப்பினை முழுவதும் வைத்து டோஸ்ட் செய்யக்கூடாது. ஏனெனில் பிரெட்டின் மேற்புறம் கருகுவதோடு கடலை மாவு வேகாமல் பச்சை வாசனை அடிக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!