கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்

குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியே கடல் என்ற அழைக்கப்படுகிறது. தென்சீனக்கடல், கரீபியன்கடல், மத்தியத்தரைக்கடல் ஆகியவை உலகின் முக்கிய கடல்கள் ஆகும்.

பெரும் பரப்பிலான நீரினால் சூழப்பட்டிருக்கும் பகுதியே பெருங்கடல் அல்லது பேராழி என்று அழைக்கப்படுகிறது. பூமியில் நிலவும் நிலையான வாழ்விற்கு பேராழிகளின் பங்களிப்பு மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவை முக்கியமானதாக உள்ளன. பேராழிகள் கனிம வளங்களின் கிடங்காக உள்ளன.

இன்றைய சூழ்நிலையில் கடலைச் சுற்றி பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடற்கரை மறைந்து போவது, தீவு மூழ்குதல், நீர் மாசுபடுதல், மீன்வளம் அழிதல், கடல்நீர் மட்டம் உயருதல், புவியின் வெப்பநிலை உயர்தல், பனிப்படலங்கள் உருகுதல் ஆகியவை மனிதனை அச்சுறுத்துகின்றன.

ஆகவே பேராழியின் அமைப்பினைப் பற்றி புரிந்து கொண்டால்தான் வரும் நூற்றாண்டில் நிகழப் போகும் மாற்றங்களை முன்கூட்டியே தடுக்க முடியும். மிகக் குறுகிய காலத்தில், வரக்கூடிய பேரிடர்களான சூறாவளிகள், வெள்ளம், வறட்சி மற்றும் அவற்றின் பாதிப்புகளை சரியான உற்று நோக்குதல் மூலம் கணித்து, முன் அறிவிப்பு செய்து மக்களை இப்பாதிப்பிலிருந்து விடுபடச் செய்ய‌ முடியும்.

புவியானது நீர்க்கோளம் என்றழைக்கப்படுகிறது. விண்வெளியிலிருந்து பார்க்கும் போது புவியானது நீலநிறமாகக் காட்சியளிக்கிறது. எனவே இது நீலநிறக் கோலி என்றழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தில் புறப்பரப்பில் நீர்மநிலையில் நீரினைக் கொண்டு பேராழிகள் தனித்துவமாக விளங்குகின்றன.

சூரிய குடும்பத்தின் மற்ற கோள்கள் நீரினைப் பெற்றிருப்பதில்லை. எனினும் சமீபகால ஆய்வுகள் வியாழன் கோளில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

புவியில் முதன்முதலில் கடலில் உள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளினால் உருவான பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருள்களினால் உருவாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் கடல் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து உருவாகி இருக்கலாம் என்று கூறுகின்றன.

பெருங்கடல்கள் பூமியின் மொத்தப்பரப்பில் 71% மற்றும் பூமியின் மொத்த நீரில் 97% கொண்டிருக்கின்றன. புவியின் பல்வேறு இயக்கங்களுக்கு பெருங்கடல்கள் காரணமாகின்றன. இவை புவியின் வானிலை மற்றும் வெப்பநிலையினை பாதிக்கின்றன.

சூரிய கதிர்களை உட்கவருதன் மூலம் புவியின் வெப்பநிலையினை மாற்றியமைக்கின்றன. உட்கவரப்பட்ட வெப்ப ஆற்றலை கடல் நீரோட்டங்கள் உலகம் முழுவதும் கடத்துகின்றன. உலகில் உள்ள பெருங்கடல்கள் அனைத்தும் கடல்கள், வளைகுடாக்கள், நீர் சந்திப்புகள் மற்றும் கால்வாய்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

 

பேராழியல்

பேராழியல் என்பது கடல்நீரின் இயற்கை மற்றும் வேதித்தன்மை, ஆழம், வெப்பநிலை, உவர்ப்பியம், கடல் நீரோட்டங்கள் மற்றும் கடலடி பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்கினம் பற்றி படிக்கக்கூடிய ஒரு அறிவியலாகும்.

நெடுங்காலமாகவே கடலில் பயணங்கள் செய்யப்பட்டு தேடல்கள் நடந்துவந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலைப் பற்றிய ஆராய்ச்சியானது 1768க்கும் 1779க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜேம்ஸ் குக் என்பவர் பசிபிக் பெருங்கடலை கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்து தான் ஆரம்பமானது.

 

கடல்நீர் உவப்பது ஏன்?

புவியில் உள்ள பாறை மற்றும் ஆற்று படுகையின் மண்களில் உள்ள உப்பானது மழை நீரினால் கரைக்கப்பட்டு ஆறுகளில் பாய்கிறது. பின் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் உப்பு கலந்த நீராக கலக்கின்றது.

ஆவியாதலின் செயலினால் கடல் நீர் ஆவியாவதுடன் உப்பு ஆவியாகாமல் தங்கி விடுகிறது. எனவே கடல்நீர் உப்புத் தன்மையுடன் காணப்படுகின்றது. கடல் நீரில் சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு, மெக்னீசியம் சல்பேட், கால்சியம் சல்பேட், கால்சியம் கார்பனேட் மற்றும் மக்னீசியம் புரோமைட் ஆகிய உப்புகள் பெருமளவு கலந்துள்ளன.

 

உவர்ப்பியம்

உவர்ப்பியம் என்பது கடல்நீரில் கரைந்துள்ள உப்பின் அளவினை குறிப்பதாகும். அதாவது பெருங்கடலில் கரைந்துள்ள உப்பின் அளவே உவர்ப்பியம் ஆகும். உவர்ப்பியம் என்பது ஒரு லிட்டர் நீரில் எத்தனை கிராம் அளவு உப்பு கலந்துள்ளது என்பதை குறிப்பிடுவதாகும். இதன் குறியீடு  ‰.

உலகில் உள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் 35 கிராம் ஆகும். உவர்ப்பியம் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதிகளிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழ்கடல் பகுதியிலும் உவர்ப்பியம் குறைவாகக் காணப்படுகிறது.

சாக்கடல், செங்கடல் மற்றும் பெர்சியன் வளைகுடா ஆகியவற்றில் உப்பளவு மிக அதிகமாகும். சாக்கடல் உவர்ப்பியத்தின் அளவு 300 கிராம் ஆகும். கடலின் உவர்ப்புத் தன்மையானது கடல் மேற்பரப்பில் நீரின் ஆவியாதல் வீதம், வீழ்படிவாக்கும் திறம், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உட்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை உடைய நீர்களின் கலப்பு ஆகியவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

பால்டிக் கடலின் மேற்பரப்பு குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, நிறைய ஆறுகளின் கலப்பு, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் இக்கடலில் அடிக்கடி வந்து நிரம்புதல் காரணமாக அதன் அடி அடுக்கு அடர்வானதாக மாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் மேல் மட்ட அடுக்கின் உவர்ப்பியம் 10% முதல் 15% வரை உள்ளது. அதன் கழிமுகப் பகுதியில் இன்னும் குறைவாக உள்ளது.

வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும், குறைவான வீழ்படிதல் பண்பையும் கொண்டுள்ளதால் இதன் உவர்ப்பியம் 40 கிராம் ஆகும்.

 

பெருங்கடலின் வெப்பநிலை

பெருங்கடலில் உள்ள உயிரினங்களின் பண்புகளை நிர்ணயிப்பதில் பேராழியின் வெப்பநிலை முக்கிய பங்கு வகிக்கின்றது. கடல்நீரின் வெப்பநிலை மாறுபாடே பேராழியில் நீரோட்டங்கள் உருவாக காரணமாய் அமைகிறது.

பெருங்கடல்கள் சூரிய ஆற்றலை சேமித்து வைக்கும் திறன் கொண்டுள்ளதால் புவியின் வெப்ப சமநிலையினை சீர் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. நிலத்தின் மேற்பரப்பானது மிக விரைவாக வெப்பமடைந்து மிக விரைவாக குளிர்ச்சியடைகின்றது. ஆனால் நீர்பரப்பு மிக மெதுவாக வெப்பமடைந்து மெதுவாகவே குளிர்ச்சி அடைகிறது.

இவ்வாறு நிலம் மற்றம் நீரின் வெப்பநிலை வேறுபாட்டால் புவியின் மேற்பரப்பில் உள்ள பேராழி மற்றும் கண்டங்களில் பல்வேறு வகையான காலநிலை காணப்படுகின்றது. பேராழியின் மேற்பரப்பு வெப்பநிலையினை பல்வேறு காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. அவைகள் அட்ச ரேகைகள், பேராழி நீரோட்டங்கள், நிலவும் காற்றுகள் மற்றும் உள்ளுர் வானிலை ஆகியவைகள் ஆகும்.

 

அலைகள்

பெருங்கடலின் நீரானது எப்போதும் மேலும் கீழுமாக அசைகின்றன. இந்த நீரின் அசைவே அலைகள் என அழைக்கப்படுகின்றன. அலைகள் உருவாக காற்று முக்கிய காரணம் ஆகும். அலைகளானது ஒரு குறிப்பிட்ட திசைகளில் பயணிக்கின்றன. ஆனால் நீரானது அலைகளோடு பயணிப்பதில்லை.

 

பேராழி நீரோட்டங்கள்

பொதுவாக ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினை நாம் பேராழி நீரோட்டங்கள் என்கிறோம். பேராழி நீரோட்டமானது பேராழியில் இயல்பாக ஓடும் நீராகும். இப்பேராழி நீரோட்டங்கள் ஆறுகளைப் போல் ஒரு குறிப்பிட்ட பாதை மற்றும் வேகத்தில் பாய்கின்றன. இவை இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெப்ப நீரோட்டங்கள் மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும்.

வெப்ப நீரோட்டங்கள் தாழ் அட்ச ரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. குளிர் நீரோட்டங்கள் உயர் அட்ச ரேகை பகுதிகளில் உருவாகி பூமத்திய ரோகையை நோக்கி ஓடுகின்றன.

 

ஓதங்கள்

சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையினால் ஒவ்வொரு நாளும் 6 மணி நேர இடைவெளியில் கடல் நீரின் மட்டம் உயர்ந்து தாழ்வது ஓதம் என அழைக்கப்படுகின்றது. கடல் மட்டம் உயர்வதை உயர் ஓதம் என்றும் தாழ்வதை தாழ் ஓதம் என்றும் அழைக்கப்படுகிறது.

மிதவை ஓதமானது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஏற்படுகிறது. இந்த நாட்களில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர் கோட்டில் இருக்கின்றன. இத்தகைய நாட்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஈப்பு விசையால் உயர் ஓதம் மிக உயர்ந்தும், தாழ் ஓதம் மிகத் தாழ்ந்தும் காணப்படும்.

தாழ்வை ஓதமானது நிலவின் முதல் மற்றும் மூன்றாவது வளர்ச்சி நிலையில் ஏற்படுகின்றது. இந்நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன செங்கோணத்தில் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமைந்துள்ளதால் உயர் ஓதம் தாழ்ந்தும் மற்றும் தாழ் ஓதங்கள் மிக உயர்ந்தும் காணப்படும்.

 

பேராழியின் தரை அமைப்பு

நிலமும் கடலும் சந்திக்கின்ற இடத்தில் பேராழியின் தரையானது ஆரம்பிக்கின்றது. கடலோர பகுதியானது நிலையானது அல்ல. ஒவ்வொரு அலைகள் மற்றும் ஓதங்களின்போதும் மாற்றி அமைக்கப்படுகின்றன. பேராழியின் தரை அமைப்பானது கண்டத்திட்டு, கண்டசரிவு மற்றும் கடல் தரை எனப் பிரிக்கப்படுகின்றது.

 

கண்டத்திட்டு

கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதியாகும். இதன் ஆழம் 100 மீட்டர்கள் ஆகும். இக்கண்டத்திட்டு மிகச் சிறந்த மீன் பிடித்தளமாக உள்ளது. இங்கு மீன்களின் உணவான கடல் வாழ் நுண்ணுயிர்கள் அதிக அளவு காணப்படுகின்றது.

உதாரணமாக நியுபவுன்ட்லாந்தில் உள்ள கிரானைட் பேங் மற்றும் பிரிட்டனில் உள்ள டாகர் திட்டுகளாகும். இக்கண்டத்திட்டு பகுதிகளில் பெட்ரோலியம் ஆழ்குழாய் கிணறுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு மும்பை ஹை (இந்தியா)

 

கண்டச்சரிவு

செங்குத்து சரிவாக பேராழியின் தரையை அடைகின்றது. கண்டச்சரிவு, கண்டத் திட்டுப்பகுதிகளை கண்ட விளிம்பு என அழைக்கப்படுகின்றது. இதன் சராசரி ஆழம் 155 மீட்டர்கள் ஆகும். ஒழுங்கற்ற கடற்கரை மற்றும் ஆழமான சரிவுகள் ஆகியன இயற்கை துறைமுகம் அமைய அவசியமாகின்றது.

உதாரணமாக கொச்சின் மற்றும் மும்பை துறைமுகங்கள், கண்டச் சரிவில் குறுகிய பள்ளத்தாக்கு, ஓங்கல் மற்றும் சேறு வழிதல் ஆகியன காணப்படுகின்றன. கடலடி குன்றுகளைச் சுற்றி கீழ் மட்டத்தில் ஆழ்கடல் சமவெளி உள்ளது. இதில் உயிரினங்களில் அழுகிய கரிமப் பொருட்கள் காணப்படுகின்றன. நடுக்கடல் மலைத் தொடர் கண்டத்திட்டு விசையினால் உண்டாகின்றன.

 

கடல் மலைகள்

கடலின் அடிப்பகுதியில் உள்ள எரிமலையின் ஒவ்வொரு சீற்றத்தின் போது வளர்ந்து கடல் மலைகள் உருவாகின்றன. இக்கடல் மலைகள் கடல் நீரின் மேற்பரப்பிற்கு மேல் தெரிவதை தீவு என அழைக்கிறோம்.

கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்றும் வானிலை செயல்களால் அரிக்கப்பட்டு கீழ் பகுதிக்கு சென்றிருந்தால் அவை கயாட் என அழைக்கப்படுகின்றன. பேராழியின் அகழிகள் என்பவை பேராழியின் ஆழமான பகுதியாகும்.

இரு கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது அடர்த்தி அதிகமான தட்டின் அழுத்தத்தால் அடர்த்தி குறைவான தட்டிற்கு கீழ் அடர்த்தி அதிகமான தட்டு செல்வதால் அகழிகள் உருவாகின்றன. இவையே கடலின் மிக ஆழமான பகுதியாகும்.

 

பெருங்கடல்கள்

உலகில் ஐந்து முக்கிய பேராழிகள் உள்ளன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், தெற்குப் பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பெருங்கடல் ஆகியவை ஆகும்.

 

பசிபிக் பெருங்கடல்

பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரிய பெருங்கடல் ஆகும். பசிபிக் என்பதற்கு இலத்தீனில் அமைதி என்பது பொருளாகும். இது முக்கோண வடிவ அமைப்பைப் பெற்றுள்ளது. இது வடக்கே ஆர்டிக் முதல் தெற்கே அன்டார்டிக் வரை பரவியுள்ளது.

மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா இதன் எல்லைகளாகும். இது தான் உலகின் மிகப் பெரிய ஆழமான பெருங்கடல் ஆகும். இதன் சராசரி ஆழம் 5000 மீட்டர்களாகும்.

இப்பேராழியானது 16,92,00,000 கி.மீ பரப்பளவினைக் கொண்டுள்ளது. சுமார் 62.2கோடி கனசதுர கி.மீ நீரைக் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46% புவியின் மொத்த மேற்பரப்பில் 33% இப்பேராழி கொண்டுள்ளது.

தென் பசிபிக்கில் உள்ள சேலஞ்சர் ஆழிக்குழியே (மரியானா ஆழிக்குழி) உலகின் ஆழமான பகுதி ஆகும். இதன் ஆழம் 11,033 மீட்டர்கள் ஆகும்.

இப்பேராழியில் ஏறத்தாழ 20,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலானவை தென் பசிபிக்கில் காணப்படுகின்றன. நியூசிலாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் ஹவாய் நன்கு அறியப்பட்டவை. இப்பகுதியில் பெரும்பாலான தீவுகள் உயரமானவையாக காணப்படுகின்றன.

பசிபிக்கின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல், கோரல் கடல், கிழக்கு சீனக் கடல், ஜப்பான் கடல், டாஸ்மான் கடல், மஞ்சள் கடல் போன்றவை ஆகும்.

 

அட்லாண்டிக் பெருங்கடல்

அட்லாண்டிக் பேராழி நீண்ட “S” வடிவத்தினைக் கொண்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய பேராழியாகும். இது புவியின் மொத்தப் பரப்பில் 16.5% வரை பரவிக் காணப்படுகிறது. இதன் மொத்த பரப்பு 106.4 மில்லியன் சதுர கி.மீ ஆகும்.

இது மேற்கே வட மற்றும் தென்அமெரிக்காவாலும், கிழக்கே ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவாலும் சூழப்பட்டுள்ளது. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். இதன் ஆழம் 8470மீ ஆகும். அட்லாண்டிக்கின் சராசரி ஆழம் 3280மீ ஆகும்.

அட்லாண்டிக் பேராழியில் கிரீன்லாந்து, பிரிட்டிஷ் தீவுகள், நியூ பவுண்டர்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், வெர்டிமுனை மற்றும் கானரீஸ் போன்ற முக்கிய தீவுகள் காணப்படுகின்றன.

அட்லாண்டிக் பேராழியின் வர்த்தக வழியானது உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது.

 

இந்திய பெருங்கடல்

உலகில் உள்ள அனைத்து பேராழிகளின் மொத்த பரப்பில் 20% இந்திய பேராழி கொண்டுள்ளது. வடக்கே இந்தியா, பாகிஸ்தான், கிழக்கே ஆஸ்திரேலியா, சுந்தா தீவுகள் மற்றும் மலேசியா, மேற்கில் அரேபிய அரேபிய தீபகற்பம் மற்றும் ஆப்பிரிக்கா, தெற்கே அன்டார்டிகாவும் இதன் எல்லைகளாக உள்ளன.

இப்பேராழி ஆப்பிரிக்காவின் தென் முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும் கிழக்கு மற்றும் தென் கிழக்கில் பசிபிக் பேராழியுடனும் இணைகிறது. இதன் மொத்த பரப்பு 6,85,56,000 ச.கி.மீ. ஆகும். இப்பேராழியின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீ ஆகும். இப்பேராழியின் சராசரி ஆழம் 4000 மீட்டர் ஆகும்.

இப்பேராழியில் அதிகமாக பெட்ரோலியம் இயற்கையாகவே காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் 40% இந்திய பெருங்கடலிலிருந்து கிடைக்கின்றது. மீன் போன்ற கடல் உணவுப் பொருட்கள் இப்பேராழியில் மிகுந்து காணப்படுகின்றன.

உலகில் பல நாட்டுக் கப்பல்கள் இப்பேராழியை மீன் பிடித்தளமாகப் பயன்படுத்துகின்றன. அந்தமான் நிகோபர், இலங்கை சுமத்ரா, மடகாஸ்கர், ஜாவா ஆகியவை இப்பேராழியில் அமைந்த நன்கு அறிந்த தீவுகளாகும்.

இது ஒரு நாட்டின் பெயரினால் அழைக்கப்படும் பேராழி மற்றும் வரலாற்று காலந்தொட்டே வணிகர்களின் பரிச்சயமான வணிக வழியாக இருந்து வருகின்றது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை ஐரோப்பாவுடன் இணைக்கிறது.

 

அண்டார்டிக் பெருங்கடல்

இது நான்காவது பெரிய குளிரான மற்றும் தென்கோடி முனையில் அண்டார்டிக் கண்டத்தினைச் சுற்றி அமைந்துள்ள பேராழி ஆகும். இது தென் பேராழி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு பனிப்பாறைகள் மிகுந்து காணப்படுகிறது. இங்கு 10º செல்சியஸ் முதல் -2 º செல்சியஸ் வரை தட்பவெப்பநிலை நிலவுகிறது.

மார்ச் மாதத்தில் இங்கு பனிப்பரப்பு 26 லட்சம் ச.கிமீ இருக்கும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் பனிப்பரப்பானது 19.8 லட்சம் சதுர கி.மீ குறைந்து விடுகிறது. குளிர் காலத்தில் இப்பேராழியின் மேல் பகுதியானது பாதிக்கும் மேல் பனிக்கட்டியாக உறைந்திருக்கும். இப்பேராழியின் சராசரி ஆழம் 4500 மீட்டர்களாகும்.

இக்கடல் பகுதியில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும் இயற்கை எரிவாயுவும் காணப்படுகின்றன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் மிகுந்து காணப்படுகின்றன. அலெக்ஸாண்டர் தீவுகள், பாலினி தீவுகள் மற்றும் ரோஸ் தீவுகள் இப்பேராழியில் உள்ள தீவுகளில் குறிப்பிடத் தக்கவையாகும்.

தெற்குப் பெருங்கடல்: இது அன்டார்க்டிக்காவைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பு ஆகும். இது சில வேளைகளில் பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்களின் நீட்சியாகக் கொள்ளப்படுவதும் உண்டு.

 

ஆர்டிக்பெருங்கடல்

இப்பேராழி ஏறக்குறைய அரை வட்ட வடிவில் புவியின் வட துருவத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் சராசரி ஆழம் 4000 மீட்டர்கள் ஆகும். இப்பேராழி முழுவதுமாக நிலப் பரப்புகளால் சூழப்பட்டுள்ளது.

அலாங்கா-ரஷ்யா இடையே உள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து ஐரோப்பா இடையே உள்ள டென்மார்க் நீரிணையம் நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்டிக் பேராழியை வெளி உலகுடன் இணைக்கின்றன.

ஆர்டிக் பேராழியின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. கோடை காலத்தில் பனிக்கட்டிகளை சுற்றி நீர்சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் காலத்தில் கோடைக்காலத்தில் இருந்ததைப் போன்று இரு மடங்கு அதிகப் பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது.

ஆர்டிக் பேராழி அலைகளே இல்லாத பேராழியாகும். இதில் சுற்றிப் பயணம் செய்ய இயலாது. விக்டோரியா தீவுகள், எலிசபெத் தீவுகள், ஐஸ்லாந்து ஸ்பிட்பெர்ஜன் மற்றும் நோவாக சோம்லியா ஆகியவை இங்குள்ள முக்கியத் தீவுகளாகும்.

 

மனித வாழ்வில் பெருங்கடல்களின் ஆதிக்கம்

பெருங்கடல்கள் மனிதனுடைய இயற்கை சூழ்நிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெருங்கடல்கள் மனிதனை பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்துகின்றன. காலநிலை, உண்ணும் உணவு, பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் இராணுவ நிலையினையும் தீர்மானிக்கின்றன. இவை முக்கிய வளமான புரதச் சத்து மிகுந்த மீன் உணவினைக் கொண்டுள்ளன.

பல்வேறு மதிப்பு மிக்க உலோகங்கள் இவைகளில் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றில் தங்கம், வெள்ளி, மாங்கனீசு, பெட்ரோல் மற்றும் முத்து ஆகியவை அடங்கும். கடல் நீரில் மெக்னீசியம், புரோமின் மற்றும் சோடியம் குளோரைடு போன்ற தாது உப்புக்களும் உள்ளன. கட்டுமானப் பணிகளுக்கான மணல், சரளைக்கல் மற்றும் சிப்பி ஓடுகள், வைரங்கள் மற்றும் சரளைக் கல் ஆகியன பேராழிகளின் தலைப் பகுதியில் காணப்படுகின்றன.

கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்கள் உலக பெட்ரோலிய உற்பத்தியில் 17% அளிக்கின்றன. மேலும் பேராழிகள் மாற்று சக்தி வள ஆதாரமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பினையும் கொண்டிருக்கின்றன. கடல் சூரிய வெப்பத்தினை உட்கவருவதால் பேராழிகள் வெப்பப்படுத்தப்பட்டு நீரோட்டங்கள் ஏற்படுகின்றன. இதனை மின்னாற்றலாக மாற்ற இயலும்.

பெருங்கடல்கள் அமைப்பினைப் பற்றி புரிந்து கொள்வோம். இயற்கையின்  மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வோம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.