முன்னொரு காலத்தில் கீழக்கரை என்ற ஊரில் ராமு என்கின்ற அண்ணனும் சோமு என்கின்ற தம்பியும் வசித்து வந்தனர். அண்ணன் ராமு நிலபுலன்கள், கால்நடைகள், நிறைய பணம் உடைய பணக்காரன். ராமு பொறாமை உள்ளிட்ட கெட்டஎண்ணங்கள் உடையவன். எல்லோரிடமும் அடாவடியாக நடக்கும் தன்மை உடையவன்.
தம்பி சோமு அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழை. சோமு நற்குணங்களோடு எல்லோரிடமும் அன்பாகவும் இனிமையாகவும் பழகும் இயல்புடையவன்.
ஒருசமயம் அவர்கள் வசித்த ஊரில் மழைபெய்யாமல் போனது. எனவே விவசாயத்திற்கு நீர் இன்றி பயிர்கள் கருகின. எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே சோமுவிற்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. ஆதலால் குடும்பத்தினருக்கு சோமுவால் உணவளிக்க இயலவில்லை. குடும்பத்தினர் அனைவரும் பட்டினி கிடந்தனர்.
ராமுவோ தனது நிலத்திலிருந்து ஏற்கனவே விளைந்த தானியங்களை வைத்திருந்தான். எனவே அவனது குடும்பத்தினர் அனைவரும் உணவுக்கு ஏதும் பிரச்சினை இல்லாமல் உணவு உண்டனர். இந்நிலையில் சோமுவின் மனைவி சோமுவிடம் “குழந்தைகள் பசியால் அழுகின்றன. அதனால் அண்ணன் ராமுவிடம் சென்று சிறிதளவு தானியங்களை இரவலாக வாங்கி வாருங்கள்” என்று கூறினாள்.
சோமுவும் ராமுவிடம் சென்று,“அண்ணா, எனக்கு பஞ்சம் காரணமாக வேலை இல்லை. குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றன. எனவே சிறிதளவு தானியங்களை இரவலாக தாருங்கள். நான் மீண்டும் வேலைக்குச் சென்றவுடன் இரவலாக வாங்கியத் தானியங்களை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கூறினான.
ஆனால் கல் நெஞ்சம் கொண்ட ராமுவோ தானியங்களை தர மறுத்ததுடன் சோமுவை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டான்.பின் சோமு குழந்தைகளின் பசி தீர்க்க எண்ணி உணவு தேடி அருகில் இருந்த காட்டிற்குச் சென்றான்.
காட்டில் அழகான வண்ணத்துப்பூச்சி ஒன்று சிலந்தியின் வலையில் சிக்கி தப்ப வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. இரக்க குணம் கொண்ட சோமு வண்ணத்துப்பூச்சியை சிலந்தி வலையில் இருந்து விடுவித்தான்.
அப்போது வண்ணத்துப்பூச்சி அழகான குட்டிதேவதையாக மாறியது. அதனைப் பார்த்து வியந்த சோமுவிடம் தேவதை,“நான் வானுலக தேவதை. சாபத்தின் காரணமாக வண்ணத்துப்பூச்சியாக மாறினேன். இரக்க குணம் நிறைந்த மனிதன் தொடும் போது மீண்டும் தேவதையாக மாறுவேன் என்று எனக்கு சாப விமோசனம் வழங்கப்பட்டிருந்தது.
பூக்களில் உள்ள தேனை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாரமல் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டேன். இரக்க குணம் கொண்ட நீ என்னை தொட்டவுடன் சாபம் நீங்கி மீண்டும் தேவதையானேன். என்னை விடுவித்ததற்கு நன்றி.
இந்த ஆட்டுக்கல்லை வாங்கிக் கொள். இதனிடம் யார் என்ன கேட்டாலும் அதனைக் கொடுக்கும் சக்தி உள்ளது. நீ இதனிடம் ஏதேனும் ஒன்றை விரும்பி கேட்க நினைத்தால்,“எல்லாருக்கும் நன்மைசெய்யும் ஆட்டுக்கல்லே எனக்கு இப்போது இதனைத் தா”என்று கூறு. உடனே ஆட்டுக்கல் நீ கேட்டதை கொடுக்கத் தொடங்கும்.
நீ விரும்பிய பொருள் கிடைத்த அளவு போதும் என்றவுடன் “எல்லோருக்கும் நன்மை செய்யும் ஆட்டுக்கல்லே நீ கொடுத்த அளவு போதும். தற்போது நிறுத்து”என்று கூறு. அத்துடன் அது நிறுத்திக் கொள்ளும். இதனைக் கொண்டு எல்லோருக்கும் நன்மையைச் செய். நன்றி நான் வருகிறேன்”என்று கூறி தேவதை மறைந்தது.
எல்லாம் கனவில் நடந்தது போல் இருந்தது சோமுவிற்கு. அவன் சந்தோசத்துடன் வீடு திரும்பினான். வீட்டில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டு நிறைய நாள் ஆகிவிட்டதால் ஆட்டுக்கல்லிடம் உணவு கேட்டக எண்ணி “எல்லாருக்கும் நன்மை செய்யும் ஆட்டுக்கல்லே என் குடும்பத்தினருக்கு இப்போது விருந்தளி” என்று கூறினான்.
உடனே அறுசுவை உணவு வகைகளை ஆட்டுக்கல் தரத் தொடங்கியது. வீட்டில் உள்ள எல்லோரும் வயிறாற உணவு உண்டு மகிழ்ந்தனர். எல்லோரும் உண்டபின் சோமுஆட்டுக்கல்லிடம் “எல்லோருக்கும் நன்மை செய்யும் ஆட்டுக்கல்லே நீ கொடுத்த அளவு போதும். தற்போது நிறுத்து”என்றவுடன் அது உணவு வழங்கியதை நிறுத்தியது.
குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். பின் ஆட்டுக்கல்லைப் பயன்படுத்தி ஊரில் உள்ள பஞ்சத்தைப் போக்கினான். ஊரில் உள்ளோர்கள் எல்லோருக்கும் நன்மைகள் செய்தான். இதனால் சோமுவின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. சோமு பெரும் பணக்காரன் ஆனான்.
இதனைஎல்லாம் கண்ட ராமுவிற்கு சோமுவின் மீதுபொறாமைஏற்பட்டது. எப்படியாவது ஆட்டுக்கல்லை அடைந்து சோமுவைவிட பணக்காரனாகி விடவேண்டும் என்று ராமு நினைத்தான். ஆட்டுக்கல்லை அடைய ஒரு திட்டம் போட்டான்.
அதன்படி சோமுவிடம் சென்று,“சோமு, உனக்கு தானியங்கள் தராததற்கு நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று கூறினான். அதற்கு சோமு,“அதனால் என்னஅண்ணா! நீங்கள் அன்று தானியங்கள் தரமறுத்ததால் தான் எனக்கு எதனையும் தரவல்ல ஆட்டுக்கல் கிடைத்தது. ஆதலால் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்”என்று கூறினான்.
அதனைக் கேட்டவுடன் ராமு தன் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினான். சோமுவிடம் மெதுவாக“தம்பி இன்று ஒருநாள் மட்டும் ஆட்டுக்கல்லை எனக்கு இரவலாகத் தா. நாளை நான் அதனைஉன்னிடம் திருப்பித் தந்துவிடுவேன்.”என்று கூறினான்.
அதனைக் கேட்டசோமு“பரவாயில்லை அண்ணா! இதோ ஆட்டுக்கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இதனிடம் நீங்கள் ஏதேனும் ஒன்றை விரும்பி கேட்க நினைத்தால்,“எல்லாருக்கும் நன்மை செய்யும் ஆட்டுக்கல்லே எனக்கு இப்போது இதனைத் தா”என்று கூறுங்கள். உடனே ஆட்டுக்கல் நீங்கள் கேட்டதை கொடுக்கத் தொடங்கும” என்று சோமு கூறிக் கொண்டிருக்கையில் ராமு ஆட்டுக்கல்லை தந்ததற்கு நன்றி கூறி புறப்பட்டான்.
விரும்பிய பொருள் தருவதை நிறுத்தக் கூடிய வார்த்தைகளை கூறுவதற்கு முன்னே ஆட்டுக்கல்லை எடுத்துச் செல்லும் ராமுவை சோமு வியப்புடன் பார்த்தான். வீட்டிற்கு வந்த ராமு என்ன பொருளைக் கேட்டால் நாம் சோமுவை விடப் பணக்காரன் ஆக முடியும் என்றுயோசித்தான்.
இறுதியில் தற்போது உப்பின் விலைதான் அதிகம். அதனை யாரும் அறியாத வண்ணம் ஆட்டுக்கல்லிடம் இருந்து பெற வேண்டும் என்று எண்ணினான். அதற்காக தன்னிடம் உள்ள படகை எடுத்துக் கொண்டு ஆட்டுக்கல்லுடன் கடலுக்குச் சென்றான்.
நடுக்கடலில் படகை நிறுத்திஆட்டுக்கல்லிடம “எல்லாருக்கும் நன்மைசெய்யும் ஆட்டுக்கல்லே எனக்கு இப்போது உப்பைத் தா”என்று கூறினான். ஆட்டுக்கல் உப்பைத் தரத் தொடங்கியது. அதனைப் பார்த்த ராமு மிக்க மகிழ்ச்சிஅடைந்தான்.
“சோமுவைவிட நான் பணக்காரனாகி விடுவேன்”என்று கத்தினான். உப்பின் அளவு கூடிக் கொண்டேபோனது. உப்பின் அளவு அதிகமானால் படகு மூழ்கிவிடும் என்று நினைத்து ராமு ஆட்டுக்கல் உப்பு தருவதை நிறுத்தஎண்ணினான். ஆட்டுக்கல்லை எப்படி நிறுத்த சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
ஆட்டுக்கல்லிடம் நிறுத்து நிறுத்து என்று கூக்குரலிட்டான். ஆனால் ஆட்டுக்கல் உப்பு தருவதை நிறுத்தவில்லை. உப்பின் அளவு அதிகமாகி படகு கடலில் மூழ்கியது. படகுடன் ஆட்டுக்கல்லும் ராமுவும் மூழ்கினர்.
அதிலிருந்து ஆட்டுக்கல்லானது உப்பு வழங்குவதை நிறுத்தவில்லை. இன்னும் உப்பை வழங்கிக் கொண்டேஉள்ளது. அதனால்தான் கடல் நீர் உப்புகரிக்கிறது.
மறுமொழி இடவும்