பல ஆண்டுகளுக்கு பிறகு, இன்று தான் கடற்கரைக்கு வந்தேன். மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கடலின் அழகை இரசித்துக் கொண்டிருந்தேன்.
கடற்காற்று ஓயாது வீசிக் கொண்டிருந்ததால், மதிய வெயிலின் தாக்கத்தைச் சற்றும் உணரவில்லை.
தூரத்தில் கடலில் தோன்றிய சிறிய அலை கடற்கரையை நெருங்க நெருங்க பெரிதானது. மாற்றாக, ஆர்ப்பரித்து வந்த பெரிய அலை, கடற்கரையை தொடும் பொழுது சிறிதானது.
அடுத்தடுத்து வந்த அலைகளின் ஓயாத விளையாட்டைக் கண்டு வியந்தேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, எழுந்து சற்று முன்னோக்கி நடந்து சென்று கரை ஒட்டில் நின்றேன். அலைகள் வந்து எனது கால்களை நனைத்தன. அப்படியே சில நிமிடங்கள் கடந்தன.
“சந்தோஷமா…?” என்ற குரல் கேட்டது.
“யாரு….?” என்று எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ஆங்காங்கே சிலர் நடந்து சென்று கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
‘வேற யாரையோ கேட்டிருப்பாங்க’ என்று எண்ணிக் கொண்டேன்.
மீண்டும், “யார சார் தேடுறீங்க? நான் தான் நீர்” என்றது அந்தக் குரல்.
உணர்ந்து கொண்டேன். உடனே, “அட… நீ தானா?” என்றேன்.
“ஆமா சார். நான் தான். நீங்க என்ன திடீர்ன்னு கடற்கரைக்கு வந்திருக்கீங்க?”
“சும்மாதான்… ஏதோ தோணுச்சு. அதான் கடல பார்க்க வந்தேன்.”
“என்ன சார். வீட்டுல தான் தினமும் தண்ணீர பார்க்கிறீங்க; பயன்படுத்துறீங்க. கடல்லையும் அதே நீர் தானே இருக்கு.”
கடல் நீர் இயல்புகள்
“வீட்டுல இருக்கிற நீர் வேற. கடல் நீர் வேற.”
“கடல் நீரா? ஓ! கடல்ல இருக்கும் நீருக்கு கடல் நீர் அப்படின்னு பேரா?”
“ஆமாம், சரியா புரிஞ்சுக்கிட்டீயே”
“உம்ம்… ஆனா, கடல் நீருக்கும் மற்ற நீருக்கும் என்ன வித்தியாசம்?”
“வித்தியாசம் இருக்கு. நன்னீர விட, கடல் நீரின் சராசரி அடர்த்தி சற்று அதிகம்.”
“அடர்த்தின்னா….”
“அடர்த்திங்கறது ஒரு பொருளோட பண்பு. இதுவும் உன்ன வச்சுதான் நிர்ணயிக்கப்படுது.”
“எனக்கு புரியும்படி சொல்லுங்க சார்.”
“ஒன்னும் இல்ல. உன்னைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் எல்லாம் நீர்மேற்பரப்புல மிதக்கும். அடர்த்தி அதிகமா இருந்துச்சுன்னா, நீருக்கடியில போயிடும். புரிஞ்சுதா?”
“சரி சார். ஆனா, மற்ற நீரோட ஒப்பிட, கடல் நீரின் அடர்த்தி அதிகமா இருப்பதற்கு காரணம் என்ன?”
கடல்நீரின் உப்புத் தன்மை
“அதற்கு காரணம், கடல் நீரின் ‘உப்புத் தன்மை’ தான். உப்புத் தன்மைங்கிறது, நீரில் இருக்கும் கரைந்த உப்பின் அளவைக் குறிக்கிறது.
சராசரியாக, கடல் நீரின் உப்புத் தன்மை சுமார் 3.5 சதவிகிதம். அதாவது, ஒரு கிலோகிராம் (தோராயமாக ஒரு லிட்டர்) கடல் நீரில் சுமார் 35 கிராம் உப்புக்கள் கரைந்திருக்கும்.”
“ஓ!…ஓ!… அப்படியா….”
“அதேசமயத்துல, கடல் நீரின் உப்புத்தன்மையின் அளவு இடத்திற்கு இடம் வேறுபடும்.”
“விளக்கமா சொல்லுங்க.”
“இம்ம்.. அதாவது ஆற்று நீர் போன்ற நன்னீர் கடலோடு சேரும் பகுதி, உருகும் பனிப்பாறைகளுக்கு அருகில் இருக்கும் கடல் பகுதி அல்லது அதிக அளவு மழைப்பொழிவு நிகழும்போது பகுதிகள்ல, கடல் நீரின் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். மற்ற இடங்கள்ல சற்று அதிகமா இருக்கும்.”
“சரிங்க இப்ப புரியுது.”
“நல்லது. இன்னொரு தகவலும் இருக்கு. அது என்னன்னா, உப்புத் தன்மை அதிகரிக்கும் போது, கடல் நீரின் உறைநிலை குறையும். அதாவது, அதிக உப்புத் தன்மை காரணமா, கடல் நீர் −2 டிகிரி செல்சியசுல (°C) தான் உறையும்.”
“அப்ப நன்னீர் எப்ப உறையும்.”
“பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுல. ஏன் உனக்கு தெரியாதா?”
“எனக்கு உங்க அறிவியல் விளக்கமெல்லாம் தெரியாது சார்.”
“ஆமாம்ல….”
“இம்ம்ம்… சரி, நீங்க சொன்ன, −2 டிகிரி செல்சியசவிட, குறைஞ்ச வெப்பநிலையில கடல்நீர் உறையாம இருக்கா?”
“ஆம்… 2010-ஆம் ஆண்டுல, அண்டார்டிக் பனிப்பாறைக்கு அடியில ஓடிக்கிட்டு இருந்த ஒரு நீரோடைய ஆராய்ச்சி பண்ணாங்க. அப்பொழுது, அங்கிருந்த திரவ நீரின் வெப்பநிலை −2.6 டிகிரி செல்சியசாம்.”
“சரி சார். இவ்வளவு நேரம், உப்புத் தன்மை பற்றி சொன்னீங்க. ஆனா உப்புத் தன்மைக்கு காரணமான உப்புக்களப் பற்றி சொல்லலையே?”
“சொல்றேன். பொதுவா, கடல் நீரின் உப்புத் தன்மைக்கு காரணம், சோடியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற உலோகங்களின் குளோரைடு, மற்றும் சல்பேட்டு உப்புக்கள் தான். இது தவிர, அமினோ அமிலங்கள் உட்பட பிற வேதிச்சேர்மங்களும் குறைந்த செறிவில் இருக்கும்.”
“குறிப்பா அமினோ அமிலங்கள்னு சொன்னீங்க. இதுக்கு ஏதாச்சும் முக்கியத்துவம் இருக்கா.”
“ரொம்ப நுட்பமா கவனிக்கிறீயே. பரவாயில்ல. நல்லது தான். நைட்ரஜன் அணுக்கள் உள்ளடங்கிய அமினோ அமிலங்கள், கடல்வாழ் உயிரினங்கள் தோன்றியதுல முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது.”
“நல்லது. கடலால நன்மைகள் இருக்கா?”
கடலின் நன்மைகள்
“கடலால பல நன்மைகள் இருக்கு. ஏராளமான உயிரினங்கள் கடல்ல வாழ்கின்றன. சிலவகை மீன்கள், நண்டுகள் போன்றவை மனிதர்களுக்கும் உணவாக பயன்படுகின்றன.
முத்து போன்ற விலை உயர்ந்த பொருட்களும் கடல்ல இருந்துதான் கிடைக்கிறது. பண்டைய காலங்களிலிருந்து கடல் நீரிலிருந்து பல தாதுக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதும் சோடியம், மெக்னீசியம், கால்சியம், மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உலோகங்கள் கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
கடலின் நன்மைகள் என்பது ஒர் நீண்ட பட்டியல். அத இப்ப சொல்லி முடிக்க முடியாது. ஆனா ஒன்னு….”
“என்னாச்சு சார்?”
“அதிக உப்புத் தன்மை காரணமாக, கடல் நீர், மனித நுகர்வுக்கு உகந்ததல்ல. இருந்தாலும், கடல்நீரை குடிநீரா மாற்ற முடியும்.
அதோட, வழக்கத்தில் இருக்கும் நீர் சுத்திகரிப்பு முறைகளின் பொருட்செலவினை குறைப்பதற்கான ஆராய்ச்சிகளும் உலகத்துல தொடர்ந்து நடந்துகிட்டு தான் இருக்கின்றன.”
“வாழ்த்துகள் சார். ஆராய்ச்சிகள் வெற்றி பெறணும். அதன் மூலம் மனிதர்கள் பயனடையணும்.”
ஆழ்கடல் நீர்
“மிக்க நன்றிகள். உனக்கு ரொம்ப நல்ல மனசு. ஆம். சொல்ல மறந்திட்டேன். ஆழ்கடல் நீரும் ஒரு நல்ல நீர் ஆதாரமாக இருக்க முடியுமாம்.”
“ஓ..”
“இம்ம்… பொதுவாக கடல்ல 200 மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்படும் நீர, ‘ஆழ்கடல் நீருன்னு’ சொல்றாங்க. இந்த ஆழ்கடல் நீருல ஆரோக்கியம் தரும் தாதுக்கள் நிறைய இருக்குதாம். அதனால பல நன்மை இருக்குன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.”
“சிறப்பு சார். சரி, நேரமாயிடுச்சு. நான் கிளம்புறேன்.”
நானும் ‘சரி’ என்றுக் கூறி, எனது கைக்கடிகாரத்தை பார்த்தேன். மதியம் 1.30 மணியாகியிருந்தது. வயிற்றில் பசி உணர்வு தோன்ற, மணல் மேட்டிற்கு வந்தேன். வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை உண்பதற்காக.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17
மறுமொழி இடவும்