கடல் மாசுபாடு

செத்து மிதக்கும் மீன்க‌ள்

கடல் மாசுபாடு என்பது மாசுபடுத்திகள் கடலில் கலந்து அதன் இயற்பியல், வேதியில், உயிரியல் தன்மையில் பாதிப்பை உண்டாக்கி உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும்.

கடல் என்பது உலகின் 97 சதவீத தண்ணீரைக் கொண்டுள்ளது. பரந்து விரிந்து ஆழமாக உள்ள கடலில் கழிவுகளைக் கொட்டுவதால் தீங்கு ஏதும் ஏற்படாது என்று ஆரம்ப காலத்தில் கருதப்பட்டது.

ஆனால் உண்மையில் கழிவுகள் தொடர்ந்து கடல் பகுதியில் கொட்டப்பட்டு சேகரமாகி இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்துதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கடல் மாசுபடுவதற்கான காரணிகள் 80 சதவீதம் நிலத்திலிருந்து பெறப்படுகின்றன. நிலத்தில் மனிதனால் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்கள் இறுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடலினை அடைகின்றன.

கடலானது ஏராளமான உயிரினங்களுக்கு வீடாக உள்ளது. கடல் மாசுபாட்டின் காரணமாக கடலின் இயற்கை தன்மை அழிக்கப்பட்டு கடலின் உயிர் சூழலானது சீர்கேட்டினை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

எண்ணெய் கசிவுகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு கழிவுப் பொருட்கள், வேளாண்மை வேதிக்கழிவுகள், பிளாஸ்டிக், கப்பல்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒலி ஆகியவை கடலினை பெரிதும் மாசுபடுத்துகின்றன.

ஆண்டுதோறும் எண்ணெய் கசிவின் மூலம் 12 சதவீத பாதிப்பையும், நிலக்கழிவுகளின் மூலம் 36 சதவீத பாதிப்பையும் கடல் எதிர்க்கொள்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இனி கடல் மாசுபடுவதற்கான மூலங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியவை பற்றிப் பார்ப்போம்.

 

கடல் மாசுபடுவதற்கான காரணிகள் / மூலங்கள்

தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள்

 

தொழிற்சாலைகளிலிருந்து நச்சுக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலோ அல்லது பாதி சுத்தகரிக்கப்பட்டோ கடலில் கலக்கப்படுகின்றன.

மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையானது காற்றில் கலந்து மழையாகவும், அமில மழையாகவும் கடலினை அடைகிறது.

தாமிரம் மற்றும் தங்கச்சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் கடல் மாசுபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த கழிவு நச்சுப் பொருட்கள் கடலின் வெப்பநிலையை உயர்த்த முக்கிய காரணமாகின்றன.

இதனால் கடல்வாழ் உயிரினங்கள் நச்சுப் பொருட்களாலும், கடலின் வெப்பநிலை உயர்வாலும் பெரிதும் பாதிப்படைகின்றன. நிறைய கடல் உயிரினங்கள் அழிந்து விடுகின்றன.

 

வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள்

கூவம் ஆறு
கூவம் ஆறு

 

வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் சமையலறை, குளியலறை, கழிப்பபறைக் கழிவுநீர்கள் நேரடியாகவோ, மழை மற்றும் நீரோடைகளின் மூலம் மறைமுகமாகவோ கடலில் கலக்கின்றன.

மேலும் வீட்டில் இருந்த வெளியேற்றப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் போன்றவைகளும் கடலில் சேருகின்றன. இவை அதிகமாக கடலில் சேரும்போது பாதிப்பை உண்டாக்குகின்றன.

 

மழைநீர்

மழை பெய்யும்போது ஏற்படும் அதிகப்படியான நீரானது நிலத்தில் வழிந்தோடி இறுதியில் கடலில் சேர்கிறது.

அப்போது நிலப்பரப்பில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், வேளாண்மை உரங்கள், பூச்சிகொல்லிகள் போன்ற மாசுக்களை கடலில் மழைநீர் கலந்துவிடுகிறது.

இந்த மாசுக்கள் கடலில் கலக்கும்போது அப்பகுதியில் உயிரினங்கள் இல்லாத சூழலை அவை உண்டாக்கி விடுகின்றன.

 

எண்ணெய் கசிவுகள்

மிதக்கும் எண்ணெய்
மிதக்கும் எண்ணெய்

 

எண்ணெய் கசிவு கடல் மாசுபாட்டில் மிகப்பெரிய பேரழிவாகும். கச்சா எண்ணெய் கடலில் கசியும்போது கடல் பரப்பில் பல ஆண்டுகள் நீடித்திருக்கும்.

இந்த எண்ணெய் கசிவு கடல்வாழ் உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் மூச்சுதிணறலையும் உண்டாக்கும்.

கடற்பரப்பில் கசிந்த கச்சா எண்ணெயை அகற்றுவது மிகவும் சிரமமான செயலாகும்.

 

கடல் சுரங்கங்கள்

ஆழமான கடலில் கடல் சுரங்கங்கள் மாசுபாட்டின் பெரும் மூலமாகும். வெள்ளி, தங்கம், தாமிரம், கோபால்ட் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றிற்காக கடலில் சுரங்கங்கள் அமைக்கும்போது மூன்று முதல் ஐநூறு மீட்டர் ஆழம் வரை சல்பைடு படிவு ஏற்படுகிறது.

ஆழமான கடல் சுரங்கங்கள் அப்பகுதியில் நச்சுத்தன்மையை உண்டாக்குவதோடு கடல் அரிப்பு, எண்ணெய் கசிவு ஆகியவற்றையும் ஏற்படுத்தி விடுகிறது.

கடல் சுரங்கங்கள் கடலில் உயிர்சூழ்நிலையை பெரும் அச்சுறுத்தலுக்கு கொண்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

கடலில் ஒலி மாசுபாடு

பரந்து விரிந்த கடல் பரப்பில் ஒலியால் நீண்டதூரம் செல்ல முடியாது. எனினும் சத்தமாக அல்லது தொடர்ச்சியாக எழுப்பப்படும் ஒலிகள் கடல் பகுதியில் மாசுபாட்டினை உண்டாக்குகின்றன.

பூகம்பம் உள்ளிட்ட இயற்கை ஒலிகள் மற்றும் கப்பல்கள், சோனார் கருவிகள், எண்ணெய் பீப்பாய்கள் போன்றவற்றால் ஏற்படும் செயற்கை ஒலிகள் கடல் ஒலி மாசுபாட்டிற்கு காரணங்களாகும்.

கப்பல்
கப்பல்

இந்த ஒலி மாசுபாடு திமிங்கலம், டால்பின் உள்ளிடவைகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

 

கடல் மாசுபாட்டின் விளைவுகள்

ஆக்ஸிஜன் வாயு குறைப்பு

கடலில் சேரும் குப்பைகள் பல ஆண்டுகள் மக்காமல் கடலில் நீரில் நீடித்திருக்கின்றன. இந்த குப்பைகள் மக்குவதற்கு கடல் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை பயன்படுத்துகின்றன.

இதனால் கடல் நீரில் ஹைப்போக்ஸியா என்ற ஆக்ஸிஜன் குறைப்பு நிகழ்வு நடைபெறுகிறது. ஆக்ஸிஜனின் அளவு குறையும்போது திமிங்கலங்கள், ஆமைகள், சுறாக்கள், டால்பின்கள், பெங்குவின் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் வாழ்நாள் குறைவதோடு கடலின் உயிர்சமநிலை பாதிப்படைகிறது.

 

அமிலத்தன்மை அதிகரிப்பு

கடலில் கலக்கும் நச்சுவேதிக் கழிவுகளால் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இந்நிகழ்வு கடல்உயிரிகளுக்கு நச்சினை உண்டாக்குகிறது.

மேலும் இது கடலில் உள்ள மீன்கள், பாலூட்டிகள், கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் ஆகியவற்றிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எண்ணெய் கசிவால் ஏற்டும் விளைவுகள்

எண்ணெய் கசிவு ஏற்படும்போது அது கடலின் மேற்பரப்பு முழுவதும் பரந்து விரிந்துவிடுகிறது. இதனால் சூரியஒளி கடலில் உள்ள தாவரங்களை அடைய முடிவதில்லை. எனவே அத்தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எண்ணெய் கசிவானது கடல்பரப்பில் நீண்டநாள் இருக்கும்போது கடல்வாழ் விலங்குகளில் கண்எரிச்சல், தோல் எரிச்சல், நுரையீரல் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளை உண்டாக்குகின்றது.

மேலும் கடலில் உள்ள மீன்களின் முட்கள் மற்றும் பறவைகளின் இறகுகளில் எண்ணெய் கசிவு ஒட்டிக்கொள்வதால் அவைகளால் நகரமுடியாமலும், பறக்க முடியாமலும், உண்ணமுடியாமலும், குஞ்சுகளுக்கு உணவளிக்க முடியாமலும் இறுதியில் இறந்தும் போகின்றன.

செத்து மிதக்கும் மீன்க‌ள்
செத்து மிதக்கும் மீன்க‌ள்

 

பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு

 

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவை கடலில் மாசுபடுத்தியாகச் சேரும்போது அவை மட்காமல் நீண்ட நாட்கள் கடலிலேயே இருக்கின்றன.

கடல்நீர் மற்றும் சூரியஒளியுடன் இணைந்து பிளாஸ்டிக் வேதிவினையை நிகழ்த்தி கடற்பரப்பின் வேதியியல் தன்மையில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதனால் கடலின் உயிர்சூழலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மீனவர்கள் கடலில் தவறுதலாகவோ அல்லது கழிவாகவோ விடும் பிளாஸ்டிக் வலையில் ஆமைகள், மீன்கள், கடற்பறவைகள் சிக்கி வெளிவர முடியாமல் இறக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கடல்மேற்பரப்பில் ஆக்ரமித்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் தொகுப்பானது சூரிய ஒளியை கடலுக்கு செல்ல விடாது தடை செய்கின்றது. இதனால் கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பெரிதும் பாதிப்படைகின்றன.

 

கடல்வாழ் விலங்குகளின் இனப்பெருக்கம் பாதிப்பு

தொழில்துறை மற்றும் வேளாண்கழிவுகள் கடல்வாழ் விலங்குகளின் இனப்பெருக்கத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பூச்சிகொல்லிகளிலிருந்து வரும் வேதிப்பொருட்கள் விலங்குகளின் கொழுப்பு திசுக்களில் குவிந்து அவற்றின் இனப்பெருக்க முறைமையில் தோல்வியை ஏற்படுத்துகிறது.

 

உணவுச்சங்கிலியில் ஏற்படும் பாதிப்பு

வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் ஆறு மற்றும் கால்வாய்கள் மூலம் கடலினை அடைகின்றன.

இந்த வேதிப்பொருட்கள் நீரில் கரையவோ அல்லது கடலின் ஆழத்தில் அமிழவோ செய்யாது. அவை பெரும்பாலும் நீரில் மிதந்து கொண்டிருக்கும்.

இவற்றை உணவாக கடல்வாழ் சிறுஉயிரிகள் உட்கொள்கின்றன. சிறுஉயிரிகளிலிருந்து வேதிபொருட்கள் அதனை உண்ணும் பெரிய உயிரிக்கு கடத்தப்படுகிறது.

இவ்வறு உணவுச்சங்கிலியில் உள்ள எல்லா உயிரினங்களையும் வேதிப்பொருள் சென்றடைகிறது. இதனால் உணவுச்சங்கலியில் பாதிப்பு ஏற்படுகிறது.

 

மனிதனில் ஏற்படும் பாதிப்பு

கடல் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட உயிரிகளை மனிதன் உண்ணும்போது அவை மனிதனின் திசுக்களில் சேகரமாகி புற்றுநோய், பிறப்பு குறைபாடு மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

மாசுபட்ட கடலில் நீந்தும் மனிதர்கள், நீர்விளையாட்டு வீரர்கள் கண்எரிச்சல், தோல் எரிச்சல், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

 

கடல் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் முறைகள்

வீட்டினை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் பொருட்களைத் தேர்வு செய்யும்போது சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படாததை தேர்வு செய்யவும்.

நம்மால் முடிந்தளவு காற்று மாசுபாடு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக தனிநபர் வாகன பயன்பாட்டை தவிர்த்து பொதுவாகனப் பயன்பாட்டை மேற்கொள்ளலாம்.

மக்கும் குப்பைகள் கடலில் கலக்காதவாறு பிரித்து மட்கச்செய்ய வேண்டும்.

மட்காத குப்பைகளை கவனமாக பிரித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்ற சட்டங்களை இயற்றி அதனை முறையாக செயல்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் குப்பைகளை முறையாக பிரித்து அவைகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை குறைக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

கடற்கரைகளில் ஒதுங்கும் குப்பைகளை முறையாக அகற்றி அவற்றை மட்கச் செய்ய வேண்டும்.

கடல் மாசுபாடு பற்றி விழிப்புணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்தி கடல் மாசுட்டினை தடுக்க அரசும், பொதுமக்களும் முயற்சிக்க வேண்டும்.

கடல் என்னும் இயற்கையின் நன்கொடையை இனியும் பாழ்படுத்தாது நம் வருங்கால சந்ததியருக்கு மாசுபாடு அற்ற கடலினை அளிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

-வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today