நாவல் பழம், கடவுளின் பழம் என்று இந்தியாவில் போற்றப்படுகிறது. இப்பழம் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையினை உடையது. இப்பழத்திற்கு தனிப்பட்ட மணமும், நிறமும் உண்டு.
குற்றால சாரல் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களே இப்பழத்திற்கான சீசன் ஆகும்.
தமிழ் கடவுளான முருகன் ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்டது நாவல் பழத்தைத்தான்.
இராமன் தனது 14 வருட வனவாசத்தின்போது உண்ட கனிவகைகளுள் நாவல் பழமும் ஒன்று. பிள்ளையார் வழிபாட்டிலும் இப்பழம் படைக்கப்படுகிறது.
இன்றைக்கும் பெரும்பாலான கோவில்களின் குளத்தங்கரைகளில் இம்மரத்தினைக் காணலாம். நாவல்மரமானது புத்த மதத்திலும் போற்றப்படுகிறது.
நாவலானது மிர்தாசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் சிசிஜியம் கியூமினி என்பதாகும். இப்பழத்தின் தாயகம் கிழக்கு இந்திய பகுதியாகும்.
தற்போது இம்மரம் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிபைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இம்மரத்தினை நம் நாட்டில் சாலை ஓரங்களிலும், வீட்டுத் தோட்டத்திலும், கோவில் வளாகங்களிலும், நீர்நிலைகளின் அருகிலேயும் காணலாம்.
நாவலின் அமைப்பு மற்றும் வளரியல்பு
நாவலானது வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலத்தைத்தைச் சார்ந்த மரவகையிலிருந்து கிடைக்கிறது. இம்மரமானது 10-20மீ உயரம் வரை வளரும் இயல்புடையது. இம்மரம் நூறாண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
நாவல்மரத்தின் தண்டுப்பகுதி சொரசொரப்பாக அடர்பழுப்பு நிறத்திலும், கிளைகள் வழுவழுப்பாக வெளிர் கருஊதா நிறத்திலும் காணப்படும். இம்மர இலைகள் வழுவழுப்பாக கருஊதா கலந்த பச்சை நிறத்தில் உள்ளன.
வெள்ளை நிறத்தில் 5மிமீ அளவில் பூக்கள் இம்மரத்தில் பூக்கின்றன. இம்மரத்தில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பூக்கள் பூக்கின்றன.
இப்பூக்களிலிருந்து பச்சை நிறத்தில் நீள்வட்ட காய்கள் காய்கின்றன.
பின் காய்கள் கருஊதா நிறத்திற்கு மாறி பழங்களாகின்றன.
நாவல்பழமானது ஒரே ஒரு விதையைக் கொண்டிருக்கும். ஒரு நாவல்பழமானது 75 சதவீதம் சதைப்பகுதியையும், 25 சதவீதம் விதைப்பகுதியையும் கொண்டிருக்கிறது.
நாவல் மரத்தின் பட்டை, இலை, பழம், விதை என அனைத்து பாகங்களும் பயன்படுகின்றன. இம்மரகட்டையானது வீடுகள் கட்டவும், படகுகள் செய்யவும், விவசாயப் பொருட்கள் செய்யவும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
இம்மரக்கட்டை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது குறைந்த புகையுடன் நல்ல எரிசக்தியைத் தருகிறது.
நாவலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நாவலில் விட்டமின் ஏ, சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன.
மேலம் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், கரோடீனாய்டுகள் முதலியவைகள் உள்ளன.
கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதம் ஆகியவையும் இருக்கின்றன. பேட்சவ்லி அமிலம், எலகட் அமிலம், ஒலினோலிக் அமிலம், பாலிபெனோல், ட்ரைனொனாய்டு, ஆண்டோஸியான் ஆகியவற்றையும் இப்பழம் கொண்டுள்ளது.
நாவலின் மருத்துவப் பண்புகள்
நாவல்மரத்தின் இலை, பழம், விதை, பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவ தன்மை உடையவையாக உள்ளன.
செரிமான சம்பந்தமான வியாதிகளுக்கு
அல்சர், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானம் சம்பந்தமான நோய்களுக்கு நாவலானது சிறந்த தீர்வினை அளிக்கிறது.
இப்பழமானது பாக்டீரிய எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளதால் இப்பழத்தினை உண்ணும்போது செரிமானப் பாதையில் நோய்தொற்று தடுக்கப்படுகிறது. இதனால் குடல்வால் நோய், தீவிர வயிற்றுப்போக்கு ஆகியவை தடைசெய்யப்படுகின்றன.
இப்பழத்தில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்தானது இதனை சிறந்த மலமிக்கியாக செயல்படச் செய்து மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது.
இப்பழத்தினை உண்ணும்போது வாயில் உமிழ்நீரானது நன்கு சுரக்கிறது. இதனால் உணவுப்பொருட்கள் வாயில் சிதைக்கப்பட்டு செரிமானம் எளிதாகுகிறது. எனவே இப்பழத்தினை உண்டால் செரிமான சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்த
இப்பழமானது குறைந்த அளவு குளுக்கோஸையும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டினையும் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
இப்பழத்தில் காணப்படும் ஒலினோலிக் அமிலம் சர்க்கரைநோய் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. இப்பொருள் இன்சுலின் சுரப்பினை அதிகரிப்பதோடு அதனை முறையாக உடல் பயன்படுத்தவும் உதவுகிறது.
இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சக்தியாக மாற்றப்படுகிறது. மேலும் இப்பழம் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் லிப்பிடுகளின் செயல்பாட்டினைக் குறைத்து நீரழிவு சிக்கலைச் சரிசெய்கிறது.
இப்பழம் மற்றும் விதை, பட்டைகளை முறையாக தொடர்ந்து உண்ணும்போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் அதிக தாகம், அதிகப்பசி, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் போன்ற சர்க்கரைநோய் அறிகுறிகள் நிறுத்தப்படுகின்றன.
இப்பழத்தினை உண்டு இரண்டாவது வகை நீரழிவு நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
இதயத்தைப் பாதுகாக்க
இப்பழமானது ட்ரைடென்போயிட் என்ற பொருளினைக் கொண்டுள்ளது. இப்பொருள் நம் உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.
ட்ரைடென்போயிட் நம் உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி மற்றும் அதிகரிப்பதை தடை செய்கிறது. எனவே இப்பழமானது இதய நோயால் பாதிப்பட்டவர்களுக்கு இப்பழம் வரபிரசாதமாகும்.
இதனால் உயர்இரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட இதய சம்பந்தமான பிரச்சினைகளை இப்பழத்தினை உண்டு நிவர்த்தி பெறலாம்.
ஹீமோகுளோபின் உற்பத்தியினை அதிகரிக்க
இரும்பச்சத்து இரத்த சிவப்பணுவிற்குக் காரணமான ஹீமோகுளோபின் உற்பத்திற்கு மிகவும் அவசியமாகும்.
இரத்தமே நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் எடுத்து சென்று சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறக் காரணமாகிறது.
நாவல்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்தினை அதிகரித்து ஆரோக்கியமான இரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் ஹீமோகுளோபின் இரத்தத்தை சுத்தகரிக்கிறது. எனவே நாவல்பழத்தினை உண்டு ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
கல்லீரலைப் பாதுகாக்க
கல்லீரல் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மையாக்கும் பணியினைச் செய்கிறது. கல்லீரல் நன்றாக இருந்தால்தான் பித்தப்பை சரிவர செயல்பட்டு லிப்டுகளைச் சிதைத்து ஆற்றல் கிடைக்கும்.
நாவல்பழமானது இரத்தத்தை சுத்தகரிப்பு செய்வதால் கல்லீரலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டால் லிப்டுகள் அதிகமாக சேர்வது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், பெருந்தமனித் தடிப்பு ஆகிய உடல் நலப்பிரச்சினைகள் தடை செய்யப்படுகின்றன.
சருமம் பொலிவு பெற
நாவல்பழமானது விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது. விட்டமின் சி சருமத்திற்கு பொலிவினையும், பளபளப்பினையும் தருகிறது.
இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்வதோடு கொலாஜன் என்ற புரதத்தினையும் சுரக்கச் செய்கிறது. இப்புரதம் சருமம் சுருக்கம் ஏற்படுவதை தடைசெய்கிறது.
இது தோல் மீளுருவாக்கம், தோலின் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. வடுக்கள், காயங்கள் ஏற்பட்ட சருமத்தில் இப்பழவிதை பொடியினைத் தடவிவர நாளடைவில் அவை மறைந்து விடும்.
பற்களின் பாதுகாப்பிற்கு
நாவலில் உள்ள விட்டமின் சி-யானது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது. மேலும் இவ்விட்டமின் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.
இப்பழத்தின் பாக்டீரிய எதிர்ப்பு பண்பின் காரணமாக பற்கள் சிதைவுறுவது தடுக்கப்படுகிறது. மேலும் இப்பழம் வாய்துர்நாற்றத்தையும் தடைசெய்கிறது.
புற்றுநோயினைத் தடைசெய்ய
இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இப்பழத்தில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுசெல்கள் உண்டாவதை தடைசெய்கிறது.
இப்பழத்தில் உள்ள ஆந்தோசையனின், ஃப்ளவனாய்டுகள், காலிக் அமிலம் ஆகியவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்து புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கிறது.
நாவல்பழம் பற்றிய எச்சரிக்கை
இப்பழத்தினை அதிகம் உண்ணும்போது தலைசுற்றல், வாந்தி ஆகியவை ஏற்படும். இப்பழமானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைக்கும்.
இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கம் உள்ளவர்கள் இதனை கவனமாக உண்ணவும்.
இப்பழத்தினை உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், உண்ட ஒரு நேரத்திற்கும் பால் அருந்தக் கூடாது.
காலையில் வெறும் வயிற்றில் இப்பழத்தினை உண்ணக்கூடாது.
நாவலினை வாங்கும் முறை
இப்பழத்தினை வாங்கும்போது புதிதாக, கனமானதாக ஒரே சீரான நிறத்துடன் இருப்பவற்றை வாங்க வேண்டும்.
மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள் நிறைந்த, தோல் சுருங்கியவற்றைத் தவிர்க்கவும்.
இப்பழமானது இனிப்புகள், கேக்குகள், புட்டிங்குகள், சட்னி, சாலட்டுகள், பழச்சாறு, ஜாம்கள், ஐஸ்கிரீமினை அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
– வ.முனீஸ்வரன்
Comments
“கடவுளின் பழம் நாவல் பழம்” மீது ஒரு மறுமொழி