கடவுளின் பரிசு…

சில நாட்கள் பள்ளிக்கூடம் போகாமல்
அண்ணன் நடராஜன் கூட
மாடு மேய்க்க போன போது
அவன் பறித்து தந்த வெள்ளரிப்பிஞ்சின் சுவை…
கடவுளின் பரிசு என்பதால் தான்
மீண்டும் கிடைக்கவில்லையோ?

மூன்றாம் வகுப்பில் சக தோழனாக இருந்த
கண்ணனின் முகம் இன்று வரை அழியாமல்
மனதில் ஒட்டிக்கொண்டு மறையாது இருக்கிறதே…
கடவுளின் பரிசு என்பதால் தான்
மீண்டும் (அவனை சந்திக்க வாய்ப்பு) கிடைக்கவில்லையோ?

அரசு மேல் நிலைப் பள்ளி காலை வேளையில்
பன்னீர் மரங்கள் தந்த வாசனை…
கடவுளின் பரிசு என்பதால் தான்
மீண்டும் கிடைக்கவில்லையோ?

32 மதிப்பெண் தமிழில் (வகுப்பில் முதல் மதிப்பெண்
— காலாண்டு தேர்வு)
இன்னும் 3 மார்க் வாங்க வக்கில்லையா
உனக்கு? என்று தமிழாசிரியரிடம்
( பூலித்தேவன் வரலாற்று நாயகன் ஐயா ந.இராசய்யா )
பெற்ற அடி கடவுளின் பரிசு என்பதால் தான்
மீண்டும் கிடைக்கவில்லையோ?

இப்படி நமக்கு கிடைத்த பரிசுகளை
எண்ணி மகிழும் தருணமும்
கடவுளின் பரிசு தானோ?

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்