கடவுளைக் காண!

பெரிய கல்யாண மண்டபம். விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒலிப்பெருக்கி ஒலித்து கொண்டே இருந்தது.

“யார் கடவுள்?

கடவுளைப் பற்றிய ஒரு புரிதல்.

எங்கே நாம் செல்கிறோம்?

வாழ்நாள் பயன் தான் என்ன?” என்பது போன்ற வாசகம் பொருந்திய விளம்பரங்கள் தெரு ஓரம் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன.

இதை எல்லாம் பார்த்து விட்டு இது ஒரு ஆன்மிக நிகழ்வு என்று கருதி கட்டிடத்திற்குள் நுழைத்தான் அவன்.

சரியாக மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் ஆகி இருந்தது. முன் இருக்கைகள் சில காலியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்தான்.

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து நட்சத்திர பேச்சாளர் பேச ஆரம்பித்தார்.

தனக்கு கொடுக்கப்பட்ட ‘கடவுளைக் காண’ பற்றி பேச அழைத்த விழாக்குழுவினர் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“கடவுள் என்பது ஒரு பொருளா? கருத்தா? எண்ணமா? செயலா? அல்லது கற்பனையா? என்று நமக்கு ஒரு ஐயப்பாடு அவ்வப்போது நமக்கு எழக்கூடும். அல்லது இந்த விழா முடிந்த பிறகு, பல கேள்விகளுக்கு உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்வீர்கள்.

“அதாவது உங்கள் மீது நம்பிக்கை கொண்ட நபர்கள் முதலில் கை உயர்த்தவும். மேலும் நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு பதில் சொல்ல தயாராக இருப்பவர்கள் தைரியமாக கையை உயர்த்தலாம்” என்றார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இவன் மட்டும் கையை உயர்த்தினான்.

எல்லோர் பார்வையும் அவnniடம் சென்றது. அவனை அழைத்தார். தயக்கமின்றி மேடைக்கு சென்றான். அவரை வணங்கினான். பிறகு எல்லோரையும் வணங்கினான்.

அந்த சொற்பொழிவாளர் பிறகு நிதானமாக அவனை அழைத்து மீண்டும் தன் இருக்கைக்கு செல்லுமாறு அனுமதித்தார்.

இதுதான் சூட்சுமம் என்று கூறிய ஆன்மிகவாதி பேச்சை தொடர்ந்தார்.

மிகுந்த கரவோசம். விண்ணை பிளந்தது.

“ஆகவே இறைநிலை, இறைத் தன்மை என்பது ஒவ்வொருவருடைய நம்பிக்கை சார்ந்தது.

உங்களை நீங்களே கேள்விக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விக்கு ஏற்ற பதிலை நீங்களே பெறுவீர்கள். அது தான் அனுபவம்.

கடவுள் என்பது ஒரு பொருள் (நம் உடல் ஐந்து பூதங்களின் தொகுப்பு)

கடவுள் என்பது ஒரு செயல் (ஐந்து பூதங்களின் செயல்பாடு)

கடவுள் என்பது கருத்து (ஐந்து பூதங்களின் ஒரு வடிவமைப்பு)

கடவுள் என்பது எண்ணம் (ஐந்து பூதங்களின் தன்மை அறிந்து செயல்படுதல்)”

நண்பர்களே!

உங்கள் எண்ணங்கள் உங்களை மேம்படுத்தும்.

அவற்றை கோர்த்து மாலையாக அணிய உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள உண்மை தன்மை வெளிப்படும். அது அன்பாக, கருணையாக
மாறும் போது பயம் நீங்கும்; பல கதவுகள் திறக்கும்.

அப்படியாக இந்த உலகில் நமக்கு தரிசனம் தந்து, நம்மிடம் வாழும் கடவுள்கள் தான் காந்தியாக, ஏசுபிரானாக, முகம்மது நபிகளாக, புத்தராக நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று உள்ளார்கள்.

நம் மனமே மார்க்கம்.

அறிவு கொண்டு சிந்தனை செய்.

இதயம் கொண்டு செயல்படு.

வானம் கைக்கு எட்டிய தூரம் தான்!

செல்வராஜ் ராமன்
18/33, நெல்லு கடைத்தெரு
கும்பகோணம் – 612001
கைபேசி: 9095522841

ஆசிரியரைப் பற்றி

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் செல்வராஜ் ராமன் பள்ளி, கல்லூரி படிப்புகளை சென்னையில் முடித்தவர். விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

இவர் சிட்டி யூனியன் வங்கியில் 36 ஆண்டுகள் பணி புரிந்து உதவி மேலாளாரக பணி ஓய்வு பெற்று, தற்சமயம் “EXNORA”, “உலக தமிழர் அறக்கட்டளை ” போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார்.

செல்வராஜ் ராமன் ஐந்திணை இருநூற்றைம்பது நூலாசிரியரும் ஆவார்.