கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற இக்கதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. நேர்மையே சிறப்பு என்பதையும் இக்கதை எடுத்துரைக்கிறது.

அழகன் அன்பான சிறுவன். தந்தையற்ற அவனை அவனுடைய தாய் வளர்த்து வந்தார்.

அழகனிடம் அவனுடைய தாய் ‘எந்நிலையிலும், எச்சூழ்நிலையிலும் நேர்மை தவறக் கூடாது.’ என்று அடிக்கடி கூறினார்.  இளம்பிள்ளையான அவனுடைய மனதில் அது பசுமரத்து ஆணிபோல் பதிந்தது.

அழகன் நிறைய படித்து வாழ்வில் நேர்வழியில் முன்னேறி தன்னுடைய அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை உறுதி மொழியாகக் கொண்டு அதன்படி செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

அழகன் எட்டாவது படிக்கும்போது அவனுடைய அம்மா காலமாகி விட்டார். அதனால் அழகன் தன்னுடைய மாமா வீட்டிற்குச் சென்றான்.

அழகனின் வேலை

அழகனுடைய மாமாவோ ‘அழகா, உன்னை கவனித்துக் கொள்ள போதிய வசதி என்னிடம் கிடையாது. ஆதலால் உன்னை படிக்க வைக்க இயலாது. நீ வேலைக்குச் சென்று உன் தேவையை பூர்த்தி செய்து கொள்.’ என்றார்.

‘மாமா, நானோ சிறுவன். எனக்கு யார் வேலை தருவார்கள்?’

‘எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மளிகைக்கடை வைத்து இருக்கிறார். அவரிடம் உன்னைப் பற்றிக் கூறினேன்.

அவருடைய கடைக்கும் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறதாம். ஆதலால் உன்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

நீ நாளை முதல் அவருடைய மளிகைக் கடைக்கு வேலைக்குச் செல்.’

அழகனுக்கு மாமாவின் பேச்சு மிகவும் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்று எண்ணி மறுநாள் மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.

கடைமுதலாளி அழகனுக்கு கடையின் விரங்களை எடுத்துக்கூறி அவனுடைய வேலைகளையும் சொன்னார். அழகனும் மகிழ்ச்சியுடன் முதலாளி சொன்ன வேலைகளைச் செய்து வந்தான்.

ஒருநாள் முதலாளி திடீரென வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.  அழகனிடம் கடைப்பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்றார்.

அழகனும் நேர்மையாக நடந்து கொண்டு முதலாளி திரும்பி வந்ததும் கடையை கண்ணியமாக அவரிடம் ஒப்படைத்தான்.

அழகனின் நேர்மை மற்றும் வேலை செய்யும்விதம் முதலாளியை மிகவும் கவர்ந்தது.

அழகனின் மாமாவிடம் அழகனின் நேர்மைக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், தான் இப்படி ஒருஆளைத்தான் தேடிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். அதனைக் கேட்ட மாமாவும் மிகவும் மகிழ்ந்தார்.

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

அழகனிடம் முதலாளி கூறியவற்றைச் சொல்லி ‘அழகா, உன்னுடைய முதலாளி மிகவும் உன்னை நம்புகிறார்.

ஆதலால் நீ கடையில் தனியாக இருக்கும் சமயத்தில் யாரும் பார்க்காதபோது எண்ணெய், பருப்பு உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்களை நாளை முதல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு வா.

அவ்வாறு செய்தால் முதலாளி உன்னை கண்டுப்பிடிக்க மாட்டார்.’ என்று கூறினார்.

அழகன் ‘மாமா பொருட்களை எடுக்கும்போது யாருக்கும் என்னை கவனிக்க மாட்டார்கள். ஆனால் கடவுள் கவனித்துக் கொண்டிருப்பார்.

அம்மா என்னிடம் எந்நிலையிலும், எச்சூழ்நிலையிலும் நேர்மை தவறக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

ஆதலால் நான் பொருட்களை கடையில் இருந்து எடுத்துவிட்டு வரமாட்டேன்.’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.

அழகனின் பதிலைக் கேட்டதும் மாமா ‘அழகா, என்னை மன்னித்துவிடு. கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விட்டேன்.

நானும் இனிமேல் நேர்மையாக இருப்பேன்’ என்று கூறி அழகனை அணைத்துக் கொண்டார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.