கடவுள் மனிதனைப் படைத்தபோது

கடவுள் மனிதனைப் படைத்த போது!

கடவுள் முதன் முதலாக கழுதையைப் படைத்து, “நீ பூமியில் கழுதை என்ற பெயரில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பாய். பொதி சுமந்து கொண்டும் புற்களை உணவாகக் கொண்டும் எவ்வித அறிவும் சாதுரியமுமின்றி சுமார் 50 வருடங்கள் இருப்பாய்” என்று கூறினார்.

கழுதையோ “ஐயா, 50 வருடங்கள் ரொம்ப அதிகம். 20 வருடங்கள் போதுமே” என்றது.

கடவுள் ‘ஓ.கே’ சொல்லிவிட்டார்.

பிறகு நாயைப் படைத்து, “நீ பூமியில் மனிதனின் மிகச்சிறந்த நண்பன். மனிதனுக்கு எண்ணற்ற வகையில் உதவிகளைச் செய்து அவனது நன்றிக்குப் பாத்திரமாக இருப்பாய். அவன் போடும் துண்டுப் பண்டங்களை உட்கொண்டு 30 வருடங்கள் வாழ்வாய்” என்றார்.

நாய் உடனே “சார்! 30 வருடங்கள் வேண்டாமே. 15 வருடங்கள் வாழ்ந்தால் போதும்” என்று கூற, கடவுளும் “சரி” எனச் சொல்லிவிட்டார்.

பின் குரங்கைப் படைத்து, “நீ மரங்களில் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டு, உனது வேடிக்கை விளையாட்டுகளால் மனிதர்களை மகிழ்விப்பாய். உனக்கு வாழ்நாள் 20 வருடங்கள்” என்றார்.

குரங்கும் “20 வருடங்கள் வேண்டாம். 10 வருடங்கள் போதும்” என்றது.

“அப்படியே ஆகட்டும்” என்றார் கடவுள்.

கடைசியாக மனிதனைப் படைத்தார்.

அவனிடம் “நீ பகுத்தறிவுடன் பூமியில் இருப்பாய். உன் அறிவை உபயோகித்து மற்ற அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாய் திகழ்வாய். உனக்கு 20 வருடங்கள்!” என்றார் கடவுள்.

மனிதன் உடனே பதறியவாறு “சார்! சார்! 20 வருடங்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. கழுதை மறுத்த 30 வருடங்களையும், நாய்க்குத் தேவையில்லாத 15 வருடங்களையும், குரங்கு மறுத்த 10 வருடங்களையும் சேர்த்து எனக்குத் தாருங்கள் ப்ளீஸ்!” எனக் கெஞ்சவே, கடவுளும் ஒரு தடவைக்கு இரு தடவையாக மனிதனிடம் கேட்டு விட்டு, உறுதி செய்து கொண்டு, “உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்றார்.

அன்று முதல் மனிதன் தன் வாழ்நாளில் முதலில் 20 வருடங்கள் வாழ்ந்து விட்டுத் திருமணம் செய்து கொண்டு 30 வருடங்கள் கழுதையாக குடும்ப பாரங்களைச் சுமந்து வருகிறான்.

குழந்தைகள் பிறந்து, வளர்ந்து ஆளான பின் அடுத்த 15 வருடங்கள் நாயாக வீட்டைக் காவல் புரிந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டு வாழ்நாளை ஓட்டுகிறான்.

கடைசி 10 வருடங்களில் குரங்கு போல் குழந்தைகளின் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குத் தாவிக்கொண்டு, பேரக்குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு வாழ்நாட்களைக் கழிக்கிறான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998