கடவுள் வருவானா?

கடவுள் மீண்டும் பிறப்பானா? – நம்

கண்ணீர் வாழ்வைத் தடுப்பானா?

 

உடமைகள் இழந்து தவிப்பதையும்

உரிமைகள் இழந்து கிடப்பதையும்

கடனுக் கென்றே உழைப்பதையும்

கடும்பசி தன்னில் உழல்வதையும் தடுப்பதற்கே        (கடவுள் மீண்டும்)

 

அடக்கிட வென்றே பல்துறையில்

அன்னிய சக்திகள் நுழைவதையும்

திடமின்றி இங்கே நம்தொழில்கள்

தினமும் அழிவதை தடுப்பதற்கும்        (கடவுள் மீண்டும்)

 

உள்ளுர் சோடா… குளிர்பானங்கள்

உடைந்தே நொறுங்கிப் போயினவே

வெள்ளம் போலவே வெளியூர் கோலா

வீதியில் தினமும் வருவதை தடுப்பதற்கே        (கடவுள் மீண்டும்)

 

எல்லா வளமும் இங்கிருந்தும்

ஏனோ அன்னியர் வளர்கின்றார்

பல்லாயிரம் தொழில்கள் அழிந்திங்கு

பலரும் பசியில் கிடப்பதை தடுப்பதற்கே        (கடவுள் மீண்டும்)

 

சின்ன திரையை வீட்டில் வைத்து

சிக்கென நம்மை போட்டு அடைத்து

எண்ணம் சிந்தனை எல்லாம் அழித்து

எதுவும் செய்ய இயலா தாக்கி

 

என்னரும் இளைஞர் எலும்பை ஒடித்து

ஏதோ செய்யுது அன்னிய சக்தி

இன்னல்கள் உடன் நீங்கிட வென்று

இனியவை இங்கே ஆக்கிட வென்று        (கடவுள் மீண்டும்)

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

%d bloggers like this: