கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை

எங்கள் சொந்த ஊரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

வெகுவிமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் ‘பூ மிதி’ திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மூன்றாம் நாள் திருவிழாவில் காலை மூன்று மணி முதலே பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு துவங்கும்.

மிக நீளமான வரிசையில் நின்று ஒவ்வொருவராக கொண்டத்து அம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் நடந்தும், ஓடியும் தங்களது நேர்த்திக்கடனைத் தீர்ப்பார்கள்.

அந்த நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் குண்டம் மிதி நாள் அன்று மாலையில்தான் திருவிழாவிற்குச் செல்வோம்.

அன்றும் அதேபோலத்தான் எங்கள் ஊர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் திருவிழாவிற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

கோவில் வண்ண வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கைகளுடன் விழா கமிட்டி திருவிழாவை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தனர்.

ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்க‌ள் விற்பனை கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடைகள், மேஜிக் ஷோ, பாதாள சைக்கிள் ரேஸ், ராட்டினம், ஜெயிண்ட் வீல், குழந்தைகள் ஏறி விளையாடும் ராட்சச பலூன் பொம்மை, மற்றும் ஏராளமான விளையாட்டுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன‌.

அதையெல்லாம் பார்ப்பதற்கு முன்னால் நாங்கள் முதலில் நமக்கு தேவைப்படும் பொருட்கள் ஏதாவது இருந்தால் வாங்கலாம் என்று கடைகள் அமைந்துள்ள பகுதிக்குள் சென்றோம்.

அங்கே எனது ஒன்றரை வயது மகனுக்கு ஏற்றவாறு, கையில் கட்டுவது போன்ற வண்ண வண்ண விளக்குகள் எரியும் வண்ணம் கைக்கடிகாரம் போல் இருந்த ஒன்று எனது மகனின் கண்களை கவர்ந்தது. ஆதலால் அதில் ஒன்றை வாங்கி எனது மகனுக்கு கட்டிவிட்டேன்.

அப்போது என்னுடைய கைகடிகாரம் மிகவும் பழையது போல ஆகி இருந்ததால் ‘நல்லதாக ஒரு கடிகாரம் வாங்கலாம்’ என்று தீர்மானித்தேன்.

அந்தப் பகுதியில் கொஞ்சம் பெரிய கடையாக இருந்த ஒரு கைக்கடிகாரக் கடையில் கைக்கடிகாரம் மிக குறைந்த விலையில் நல்ல நல்ல வடிவங்களில் இருப்பதைப் பார்த்தேன்.

எனக்கான ஒன்றைத் தேர்ந்தெடுக்க அங்கே உள்ளவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது மூன்றாம் வகுப்பில் படிக்கும் எனது மகள் தனக்கும் ஒரு கடிகாரம் வேண்டுமென்று அடம் பிடித்து கேட்டாள்.

“இந்த வயதில் உனக்கு கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தால் அதை உன்னால் பத்திரமாக வைத்துக்கொள்ள இயலாது, எனவே நான் பிறகு வாங்கிக் கொடுக்கிறேன்” என்று கூறினேன்.

எவ்வளவோ கூறியும் கேட்காமல் திரும்பத் திரும்ப ஓரிரு நிமிட இடைவெளியில் அவள் கைக்கடிகாரம் வாங்கித் தருமாறு கேட்டாள்.

சிறிது கோபத்துடன் “உனக்கு வேண்டுமானால் இதே கடையில் பெண்கள் கடிகாரம் உள்ள பகுதிக்குத் தாத்தாவுடன் சென்று உனக்கான கடிகாரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்” என்று கூறி அனுப்பி வைத்தேன்.

அங்கு சென்ற‌ ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் என்னை அழைத்தாள். இப்போதும் சிறிது கோபத்துடன் “என்ன வேண்டும்?” என்று கேட்டேன்.

அதற்கு எனது மகளோ “அப்பா எனக்கான ஒன்றைத் தேர்ந்தெடுக்க எனக்கு இன்னும் தெரியவில்லை. எனவே நீங்கள் தான் எனக்கு நல்ல ஒன்றை தேர்வு செய்து வாங்கித் தர வேண்டும்” என்று என்றாள்.

அந்த ஒரு நிமிடம் எனது பொறுப்பையும், கடமையையும் எனக்கு உணர்த்தியதுடன் என் மகள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அறிய முடிந்தது. எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.

உடனே நான் எனக்கான கடிகாரத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு என் மகளுக்கான ஒரு கடிகாரத்தை தேர்ந்தெடுக்கச் சென்று, விலையைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளதிலே மிகவும் நல்ல ஒரு கடிகாரத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தேன்.

பின்னர் ஒவ்வொரு கடையாக சென்று வேடிக்கை பார்த்துவிட்டு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிவிட்டு, சில விளையாட்டுகளை விளையாடி விட்டு அங்கேயே இரவு சிற்றுண்டியையும் முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.

திருவிழா முடிந்து வீடு திரும்பும் வரையில் எனது மகள் கூறிய சொற்கள் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்ததில் எனக்கென்று ஒரு கடிகாரம் வாங்க வேண்டும் என்ற சிந்தனையே வரவில்லை.

எனவே கடிகாரம் வாங்கவில்லை.

ம. சுரேஷ் குமார்,
2/645 – பொன்விழா நகர்,
கணக்கம் பாளையம் (அஞ்சல்),
திருப்பூர் (மாவட்டம்), ‍
பின்கோடு ‍641666.
அலைபேசி எண் 9894808779 ( whats app & telegram)

2 Replies to “கடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை”

 1. தந்தை என்ற ஸ்தானம் மிகப்பெரியது உன்னதமானது. “அப்பா” என்ற மழலையின் குரல் நம்முடைய சுயநலத்தை சுக்குநூறாய் உடைத்திடும் மென்மையான ஆயுதம். அதை இங்கே அழகாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழர்.

  – ஜெயஸ்ரீ

 2. நன்று…

  ஒரு சிறுகதை என்பதற்க்கு இலக்கணம் ஓரளவு பின்பற்ற பட்டிருக்கிறது.
  ..
  மேலும் பார்த்த விசயங்களின் தத்ருப விளக்கம் இன்னும் தேவை…

  ஒரு விசயம் சொல்வதும் சிறுகதைக்கும் பெரிய வித்தியாசமுள்ளதாக உணர்கிறேன்….

  சின்னச்சிக்கலுக்கு விடைகாண்பதுபோல் ஒரு உச்சகட்டமோ, ஒரு குறும்செய்தியோ சொல்லும் வண்ணம் இருந்தால் சிறப்பு….

  அந்த வகையில்
  சின்னசெய்தியொன்று இணைத்துள்ளீர்….
  நன்று. .

  இது போல் மீண்டும் முயற்ச்சி செய்யவும்….

  வாழ்த்துக்களுடன்
  தர்மா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.