சின்ன சின்ன வார்த்தைகளில்
செதுக்கி வரும் கடிதம் எங்கே?
சேர்த்து வைத்து படிக்கும் போது
கிடைத்த அந்த சுகமும் எங்கே?
அன்பின் மொழி அன்னை வழி
வரும் கடிதம் பேசிடுமே!
அடுத்து என்ன உன் பயணம்
தந்தை கடிதம் கேட்டிடுமே!
அண்ணவன் கடிதங்களோ
ஆற்றலினைப் பெருக்கிடுமே!
சின்னத்தங்கை கடிதமெனில்
உடலெல்லாம் சிலிர்த்திடுமே!
நண்பன் கடிதம் கிடைத்துவிட்டால்
நமக்குள் எழும் வீரம்தானே!
நாலுகால் பாய்ச்சலிலே
நம்மை ஓடச்செய்திடுமே!
விண்ணும் மண்ணும் வெற்றி பெற
அவன் கடிதம் துணை வருமே!
வீழ்ந்தாலும் எழுந்து மீண்டும்
வென்றிடத்தான் செய்திடுமே!
என்னவளின் கடிதம் கண்டு
எனக்குள் வரும் பூகம்பமே!
இனிய காதல் மொழியினிலே
நானும் மூழ்கி முத்தெடுப்பேன்!
கன்னியவள் கைபட்ட
கடிதம்கூட கரும்புதானே!
காதல் தூது வந்ததாலே
கடிதம் கூட தோழிதானே!
வண்ணங்களில் வார்த்தைகளில்
வார்த்தெடுத்த மடல்கள் எங்கே?
வாசிக்கின்ற பொழுதெல்லாம்
பூப்பூக்கும் நெஞ்சம் எங்கே?
இன்று அந்தக் கடிதங்களை
காணாத ஏக்கத்திலே
எல்லாமே தலைகீழாய்
போனதுதான் வாழ்க்கையிலே!
எனதன்புத் தோழர்களே
எழுதுங்கள் கடிதங்களை!
அன்பு கருணை பாசமென
அணைத்திடுங்கள் உலகத்தையே!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!