கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும். காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.
கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.
கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும்.
கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும்.
சமவெளியில் அரிதாக கடுக்காய் மரங்கள் வளர்கின்றன. மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். கடுக்காய் அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது
எச்சரிக்கை
சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதைத் தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.
கடுக்காய்த் தூள் அல்லது கடுக்காய்ச் சூரணம்: கடுக்காயைக் கொட்டை நீக்கி, மேல் தோலைச் சேகரித்து, காயவைத்து, தூள் செய்து, பருத்தித் துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இருவேளைகள், மோரில் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, இரவில் 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டுவர செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீரும்.
கடுக்காய்த் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பலவகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.
கடுக்காய்த் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து, பல் துலக்கிவர ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.
கடுக்காய்த் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்ய ஈரல் விருத்தியடையும்.
திரிபாலா சூரணம்
விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.
புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்.