கட்டுப்பாடு காப்பாற்றும்

கட்டுப்பாடு காப்பாற்றும் என்பதை இந்த சிறுகதை மூலம் உணர்ந்து கொள்வோம்.

மலர்வனம் என்ற காட்டின் அருகே கோழி கோமு தன்னுடைய ஐந்து குஞ்சுகளுடன் வசித்து வந்தது.

கோழி கோமு தனது குஞ்சுகளிடம் “என் அருமைக் குழந்தைகளே, காக்கை, கழுகு, பருந்து, நரி ஆகியவற்றிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.” என்றது.

“அவைகள் நம்மை உணவாக உட்கொள்ளக் கூடியவை. ஆதலால் நீங்கள் அவைகளை கண்டாலோ, குரலினைக் கேட்டாலோ ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும்.” என்று அவ்வப்போது அறிவுரை கூறிக் கொண்டே இருந்தது.

அது தனது குழந்தைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.

பிடிக்காத கட்டுப்பாடு

கோழி கோமுவின் அறிவுரைகள் மற்றும் செயல்பாடுகள் அதன் குஞ்சுகளுள் ஒன்றான கோழிக்குஞ்சு மஞ்சுவிற்குப் பிடிக்கவில்லை.

தன்னுடைய அம்மா தன்னையும், தன்னுடன் பிறந்தவர்களையும் அடக்கி ஆள்வதாக நினைத்தது. ஆதலால் எப்படியாவது தன்னுடைய அம்மாவின் கட்டுப்பாட்டை மீறி சுதந்திரமாக வாழ நினைத்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.

புதிய சுதந்திரம்

ஒருநாள் கோழி குஞ்சு கோமு தன்னுடைய குஞ்சுகளுடன் காட்டின் புதர் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.

 

கட்டுப்பாடு காப்பாற்றும்
கட்டுப்பாடு காப்பாற்றும்

 

அப்போது கோழிகுஞ்சு மஞ்சு இதுதான் தன் திட்டம் நிறைவேற சரியான தருணம் என்று எண்ணி புதருக்குள் ஒளிந்து கொண்டது. கோழி கோமுவும் தன்னுடைய குஞ்சான மஞ்சுவைக் கவனிக்கவில்லை.

கோழியும், குஞ்சுகளும் அவ்விடத்தைவிட்டு சென்ற பின்னர் கோழிகுஞ்சு மஞ்சு புதரினைவிட்டு வெளியே வந்தது. அதற்கு உலகம் புதிதாகத் தெரிந்தது.

தன்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. இந்த உலகில் இனி எனக்கு கவலை இல்லை என்று எண்ணியபடி காட்டில் இங்கும் அங்கும் ஓடியது.

சுதந்திரம் தந்த பரிசு

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கோழிக்குஞ்சு காட்டிற்குள் நெடுந்தூரம் சென்று விட்டது. ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கலாம் எனத் தூங்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து தன்னை யாரோ தூக்குவதைப் போல கோழிக்குஞ்சு மஞ்சு உணர்ந்தது.

பின்னர் சுதாரித்துக் கொண்டு கவனிக்கும்போது ஒரு கழுகின் வாயில் தான் மாட்டியிருப்பதை அது அறிந்தது. அம்மாவின் அறிவுரை அதற்கு ஞாபகத்திற்கு வந்தது. அது தான்செய்த தவறுக்காக வருந்தியது.

தைரியம் தந்த மறுவாழ்வு

கழுகிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென மஞ்சு எண்ணியது. அதன் மனதில் ஒரு வழி தோன்றியது. 

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கழுகிடம் “ஐயா, நீங்கள் என்னைச் சாப்பிடும் முன் ஒரே ஒருமுறை என் அம்மாவையும், என்னுடைய சகோதரர்களையும் பார்க்க அனுமதியுங்கள்” என்று கோழிக்குஞ்சு கூறியது.

இதனைக் கேட்டதும் கழுகு ‘நான் ஒரு வேளை உணவிற்காக இக்கோழிக்குஞ்சினைப் பிடித்தேன். இப்போதோ இக்குஞ்சின் அம்மாவும், உடன்பிறப்புக்களும் எனக்கு உணவாகப் போகின்றனர். என்னே என்னுடைய அதிர்ஷ்டம்’ என்று எண்ணியது.

பின்னர் கோழிகுஞ்சு மஞ்சுவிடம் “சரி உன்னுடைய அம்மா இருக்கும் இடத்தைக் காட்டு. நான் உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று கூறியது.

கோழிக்குஞ்சு மஞ்சுவும் “சரி” என்றது. கழுகு கோழிக்குஞ்சினை வாயில் கவ்வியபடி பறந்து சென்றது.

ஒரு புதரின் அருகே வரும்போது கோழிக்குஞ்சு கழுகிடம் “என் அம்மா வழக்கமாக இங்கேதான் இரைத்தேடித் தருவார். ஆதலால் இங்கேயே இறக்கி விடுங்கள்.” என்று கூறியது.

கழுகும் கோழிக்குஞ்சினை இறக்கிவிட்டது. புதருக்குள் கோழிக்குஞ்சு ஒளிந்து கொண்டது. கழுகால் அதனை கண்டுபிடிக்க இயவில்லை. கழுகு ஏமாற்றத்துடன் வேறு இரையைத் தேடிச் சென்றது.

ஆனால் அது வழக்கமான புதர் அல்ல. மஞ்சு வெகுநேரம் கழித்து வெளியே வந்தது. பிறகு அலைந்து திரிந்து தனது அம்மாவைக் கண்டடைந்தது.தன்னுடைய அம்மாவினைக் கண்டதும் கோழிக்குஞ்சு மஞ்சு ஓடிச் சென்று கட்டிக் கொண்டது.

“அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனிமேல் உங்களுடைய சொல்படி நடப்பேன்.” என்று அழுது கொண்டே கூறியது. கோழி கோமுவும், கோழிக்குஞ்சு மஞ்சினை ஏற்றுக் கொண்டது.

கட்டுப்பாடு காப்பாற்றும் என்பதை அறிந்து கொண்டீர்கள்தானே!

நம்முடைய அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோர் நம்முடைய நன்மைக்குத்தான் அறிவுரை வழங்குவார்கள். அவர்களுடைய சொல்படி நடந்தால் கோழிக்குஞ்சு மஞ்சுவின் நிலை நமக்கு வராது.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.