கணம்புல்ல நாயனார் – தலைமுடியால் விளக்கேற்றியவர்

கணம்புல்ல நாயனார் விளக்கு எரிக்க நெய் இல்லாததால் தம்முடைய தலைமுடியால் விளக்கேற்றியவர்.

திருக்கோயில் கட்டுதல், திருக்கோயிலின் பூசைக்குரிய பொருட்களை வழங்குதல், நந்தவனம் அமைத்தல், திருவாபரணம், பரிவட்டம், பாத்திரம் கொடுத்தல், திருக்கோவிலைப் பெருக்குதல் மற்றும் விளக்கிடுதல் என திருக்கோவிலில் செய்யக்கூடிய திருத்தொண்டுகள் பல இருக்கின்றன.

அவற்றுள் திருக்கோவிலில் திருவிளக்கிடுதலை பெருந்தொண்டாகக் கருதி செய்து வந்தார் கணம்புல்ல நாயனார்.

வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்கு வேளுர் என்னும் திருத்தலத்தில் தோன்றியவர் கணம்புல்லர். பெரும் செல்வந்தரான அவர் அவ்வூர் மக்களுக்கெல்லாம் தலைவராக விளங்கினார்.

செல்வ வளத்தோடு பெரும் குணநலனும் வாய்க்கப் பெற்ற கணம்புல்லர் இறைவனின் திருவடியே நிலையானது என்ற எண்ணத்தினை உடையவராய் விளங்கினார்.

சிவனாரின் மீதும் அவரின் அடியவர் மீதும் பேரன்பு கொண்ட அவர் சிவாலயத்தில் யாமம் வரை நின்றெரியும் நெய் விளக்கினை ஏற்றும் பணியை தவறாது செய்து வந்தார்.

நாளடைவில் அவருக்கு வறுமை ஏற்பட்டது. ஆனாலும் அவர் திருவிளக்கிடும் பணியை நிறுத்தவில்லை.

தம்முடைய சொத்துகளையும் உடைமைகளையும் விற்ற போதும் திருவிளக்கிடும் பணியினை மட்டும் தொடர்ந்தார்.

வறுமையின் தன்மை அதிகரிக்கவே, அவர் தம்முடைய சொத்துக்கள் முழுவதையும் விற்றுவிட்டு அவ்வூரைவிட்டு நீங்கினார்.

அச்செல்வத்தைக் கொண்டு சிவனாரின் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று திருவிளக்கிட்டு வழிபட்டு பேரானந்தம் கொண்டார்.

இறுதியில் தில்லையை அடைந்து அம்பலத்தானை வழிபட்டு திருவிளக்கிட்டார். தில்லையில் சிலகாலம் தங்கியிருந்த அவருக்கு அவ்வூரினைவிட்டு நீங்க மனமில்லாததால் அங்கேயே தங்கி விட்டார்.

நாளடைவில் அவரிடம் இருந்த செல்வம் முழுவதும் கரைந்தது. சேல்வந்தராக வாழ்ந்த அவருக்கு அடுத்தவரிடம் வேலை செய்யும் எண்ணம் உண்டாகவில்லை.

ஆதலால் அவர் கணம்புல் என்னும் புல்லை அறுத்து விற்று அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு திருவிளக்கு ஏற்றி மகிழ்ந்தார். இதனால் அவர் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டார்.

ஒருநாள் அவர் அறுத்து விற்பனைக்குக் கொண்டு வந்த கணம்புல்லை ஒருவரும் வாங்கவில்லை. ஆதலால் திருவிளக்கிடும் பணி நின்று விடுமோ என்று அஞ்சினார்.

ஒருவாறு திடம் கொண்டவராக கணம்புல்லை திரித்து விளக்கேற்றினார். ஆனால் அவ்விளக்கு நெய் விளக்கு போல் நின்று எரியாமல் ‘புசுபுசு’ வென வேகமாக‌ எரிந்தது.

இதனைக் கண்டதும் ‘இரவு முழுவதும் விளக்கு நின்று எரிய வேண்டும்’ என்ற எண்ணம் தலைதூக்க தன்னுடைய திருமுடியாலேயே திருவிளக்கு ஏற்றத் துணிந்தார்.

த‌ம்முடைய அடியாரின் செயலைக் கண்டு மனமிரங்கிய சிவனார், உமையம்மையுடன் விடை வாகனத்தில் கணம்புல்ல நாயனாருக்கு காட்சியளித்து, அவருக்குத் தம்முடைய திருவடியில் நீங்காத‌ இன்பத்தை வழங்கினார்.

கணம் புல்ல நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

சிவாலயங்களில் தம்முடைய திருமுடியால் விளக்கெரித்த கணம்புல்ல நாயனாரை, சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கு அடியேன்‘ என்று புகழ்கிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.