கணவன் மனைவி உறவு புனிதமானது. மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு அதுதான் அடிப்படை.
‘நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்‘ என சொல்வதுண்டு.
ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களது குடும்ப வாழ்க்கையை, அவர்களது குடும்பத்தை எடை போட முடியும்.
இன்றைய நாளில் பெரும்பாலான குடும்பங்களில் தோன்றும் பிரச்சினைகளில் முக்கியமானது கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஊடல், சண்டை அல்லது கருத்து வேறுபாடு.
குடும்பத்தின் சீர்குலைவுக்கு அஸ்திவாரம் அமைப்பதே இத்தகைய போக்குதான்.
இருவருக்குள்ளும் ஒருவித ‘ஈகோ‘ என்று சொல்லப்படும் வறட்டு கௌரவம் தோன்றிக் கொள்ள பிரச்சனை தலைதூக்குகிறது.
கணவனின் கடமை
குடும்பத்தில் கணவனோ, மனைவியோ கோபப்பட நேரும்போது, முதலில் யார் தணிந்து போக வேண்டும்? என்பதில்தான் இத்தகைய ‘ஈகோ’ பிரச்சினை முளைவிடுகிறது.
இல்வாழ்க்கையில் ஊடல் மற்றும் கூடல் வெகு சகஜம்.
‘ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும்’ என்கிறார் வள்ளுவர்.
யார் தணிந்து போனாலென்ன?
தணிந்து போகிறவரே வென்றவராவார் என்பது வள்ளுவர் வாக்கு.
கோழி மிதித்தா குஞ்சு முடமாகப் போகிறது?
விதண்டாவாதமும், பிடிவாதமும் பிரச்சனையை வளர்க்குமே தவிர, சுமூக உறவுக்கு நிச்சயம் வழிவகுக்காது.
தணிந்து போவதால் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை.
மனஇறுக்கத்தை தளர்த்த வைப்பது என்பது ஒருபெரிய விஷயம் தானே?
குடும்பத்தில் அக்கறையும் மனைவிமீது நீங்காத அன்பும் கொண்டு, மனைவியின் சந்தோஷமே தன் சந்தோஷம் என நினைத்துச் செயல்படும் கணவன், தன் மனைவியிடம் தணிந்து போவதை கௌரவக் குறைவாக ஒருபோதும் கருதமாட்டான்.
தான் தணிந்து போவதால் அவன் மனம் குளிர்ந்து மகிழ்ச்சியடைந்து, மேலும் மேலும் தன்பால் அவளுக்கு அன்பு ஊற்றாய் பெருகும் என்பதால், விஷயத்தைப் பெரிதுபடுத்தாது நொடியில் மறந்து தணிந்து போய்விடுவான்.
பெண்மையை மதித்துப் போற்ற நினைப்பதாக இருந்தால், கோபத்திற்குப் பின் மனைவியிடம் கணவன் தணிந்து போவதில் எவ்வித தவறும் இல்லை.
மனைவியின் பொறுப்பு
பெண்களை முன்னேறவிடாமல் தடுப்பது அவர்களின் துணிவின்மையா அல்லது அடக்கமின்மையா என்கிற ஓர் சர்ச்சை எழுகிறது.
இது பற்றி அலசினால் பெண்களுக்கு அணிகலனே அடக்கம் தான்! என்றே சொல்ல வேண்டும்.
துணிச்சலும் தேவையே.
அதற்காக ‘எதற்கும் துணிந்தவள்‘ என்கிற ரீதியில் அடக்கமின்றிச் செயல்படுவதின் மூலம் பெண்ணானவள் வீண்சொல்லுக்கும் பழிக்கும் ஆளாகி, தானும் பெயரைக் கெடுத்துக் கொள்வதுடன் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இழுக்கைத் தேடித் தந்து விடுகிறாள்.
வெறும் பயந்தாங்கொள்ளியாக, வாயில்லாப் பூச்சியாக இல்லாத அளவுக்குத் துணிச்சல் இருந்தாலே போதுமானது.
ஆனால் அடக்கம் இல்லை என்றால் பெண் இனத்திற்கே பெருமை இல்லை.
இன்றைய நாளில் துணிச்சல் என்கிற பெயரில் அடக்க ஒடுக்கமின்றி, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் பெண்கள் ஏராளம்.
எடுத்தெறிந்து பேசுதல், தேவையின்றி பேசுதல், சப்தமாகப் பேசுதல் மற்றும் அலட்சிய மனப்பான்மை போன்றவை பெண்களை எளிதாக ‘அழிவு’ என்னும் பாதாளத்திற்குள் தள்ளிவிடும்.
‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்’
என்னும் குறளை நினைவிற் கொண்டு குடும்பம், அலுவலகம், பொது இடம், சமுதாயம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் பணிவுடனும் அடக்கத்துடனும் செயல்படுவதால் மட்டுமே தங்களை நன்கு உயர்த்திக் கொள்ள முடியும்.
மாறாக அடக்கமின்மையுடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாமல் பின்னடைவு ஏற்படுவது உறுதி.
நெகிழும் தன்மை மகிழ்ச்சி தரும்
குடும்ப வாழ்வில் ஒவ்வொருவருக்கும் நெகிழும் தன்மை மிகமிக இன்றியமையாதது.
இறுக்கமான குணத்தைக் கொண்டு விளங்குபவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல்வேறு இன்னல்களே ஏற்படும்.
இன்றைய நாளில், பெரும்பாலோர்க்கு ரத்த அழுத்தம் இருப்பதைப் பார்க்கிறோம்.
பலரும் இதற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து கொள்ளாமலேயே உணர்ச்சிவயப்பட்டு, பீதியடைந்து பல்வேறு மருந்துகளை உட்கொண்டு உள்ளத்தையும் உடலையும் கெடுத்துக் கொள்கின்றனர்.
ஒருவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ‘மன இறுக்கம்’.
மற்ற காரணங்கள் யாவும் இதற்குப் பிறகுதான்.
தொட்டதிற்கெல்லாம் எரிந்து விழுவது, எளிதில் உணர்ச்சிவயப்பட்டுவது, கோபப்படுவது போன்றவைகள் தான் ரத்த அழுத்தத்திற்கு மூல காரணம்.
இரத்த அழுத்தம் நாளடைவில் மாரடைப்பாக மாறி உயிரையே குடித்துவிடும்.
வாழ்க்கையில் இறுக்கமான குணத்தைக் கொண்டு அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதென்பது கடினம்.
இறுக்கமான குணத்தைக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்?
தன்னையும் வருத்திக் கொண்டு, பிறரையும் துன்பத்தில் ஆழ்த்த வைப்பதால் நமக்குக் கிடைக்கும் லாபம் தான் என்ன?
குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுத்தல், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், அனுசரித்துச் செல்லுதல் ஆகிய தன்மைகள் மிக அவசியம்.
மாறாக, பிடிவாத குணம், அழுத்த குணம் போன்றவற்றால் மனஇறுக்கம் அதிகரித்து அடுத்தவர் கணிப்பில் நாம் நம் மதிப்பை இழந்து விடுகிறோம்.
பதட்டப்படாமல், அமைதியாக நிலைமையை ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இனிமையாகப் பேச, பழக, புன்சிரிப்புடன் திகழ, மற்றவர்களின் எண்ணங்களை, உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள, மற்றவர்களுடன் ஒத்துப் போக என சில விஷயங்களை நாம் கற்றுக் கொண்டோமேயானால், குடும்ப வாழ்க்கை அமோகமாக அமையும்; சிறந்து விளங்கும்.
வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
குடும்ப நபர் யாராக இருப்பினும், நம்மைப் போலவே நினைத்து, அவருக்கும் மானம், மரியாதை, சுய கௌரவம், உணர்ச்சிகள், அபிப்ராயங்கள், ஆசைகள் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இக்குணங்கள் யாவையும் பெற்றுக் கொள்வதின் மூலம் இயற்கையாகவே ‘நெகிழும் தன்மை’ நம்மை ஆட்கொண்டு விடும்.
கடுகடுவென இருப்பது, சிடுசிடுவென எரிந்து விழுவது, இரக்கத் தன்மையே இல்லாது கோபப்படுவது போன்ற இறுக்கமான குணங்களைக் கொண்டிருந்தால் வாழ்க்கை சூன்யமாவதுடன் அமைதியையும் நிம்மதியையும் இழக்க நேரிடும்.
நெகிழும் தன்மையைக் கொண்டவர்களது குடும்ப வாழ்வு கோலாகலம் தரும்.
கணவன் மனைவி உறவு சிறப்பாக அமைந்தால் வீடு மகிழ்ச்சி பெறும்; நாடு அமைதி பெறும்.
குடும்பத்தை நல்லதோர் பல்கலைக்கழகமாக மாற்றும் வித்தை நம் கையில்தான் உள்ளது.
அந்த வித்தையை முறையாகப் புரிந்து கொண்டு, கற்றுக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை இனியதோர் பயணமாக அமைத்துக் கொள்வோம்!
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
Comments
“கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?” மீது ஒரு மறுமொழி
அருமை