இன்றைய சூழ்நிலையில் கணினி, இணையம் இரண்டும் முகத்தின் இருவிழிகளைப் போல மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அறிவியல், தகவல் வளர்ச்சி உலகை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொடர்பு சாதனங்களில் கணினியும் இணையமும் முதலிடம் பெறுகின்றன.
ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் மற்றோர் இடத்தில் அறிய இவை உதவுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டு பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளை செய்து காட்டும் திறன் வாய்ந்தது. இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப் போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலை செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது.
கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரைச் சேர்ந்த பிளேங் காஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார்.
கி.பி. 1833ல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரை கணினியின் தந்தை என்று அழைக்கின்றனர். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வேஸ் என்பவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளை வகுத்தார். எனவே இவர் முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்படுகிறார்.
மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு பின் ஹார்வார்டு பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் ஹேவார்டு ஜக்கன் என்பவர் ஐ.பி.எம். பொறியாளருடன் இணைந்து தற்போது உள்ள கணினியைக் கண்டறிந்தார். இதற்கு ஹார் வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமரிக்காவும், ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இன்றைய நிலையில் பல்லூடக வசதி கொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணிணிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
கணினியை பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க, அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. இதனுடன் இணைய தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது.
இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர். ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம், அன்றாட நிகழ்வுகள் என எல்லாவற்றைப் பற்றியும் இணையத்தின் மூலம் அறியமுடிகிறது.
கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது.
இதற்கு மாற்றாக ஒரு கட்டடத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறு பலகையைப் பொருத்திப் பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும் பரப்பு வலைப்பின்னல் என்று அழைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப் பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது.
முழுமையான இணைப்பைப் பெறச் செயற்கைக் கோள் வழி இணைப்பினை பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின் மீது வலம் வரும் விண்வெளி கலன்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர்ல் என்னும் இயற்பியல் வல்லுநர் இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைப் பின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம். இவ்வலையமைப்பு பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
இன்று பேரூர் முதல் சிற்றூர் வரை இணையதள வசதிகள் கிடைக்கின்றன. இணையதளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்களாவன:
1)கணினி, 2) தொலைபேசி, 3) இணையச் சேவை வழங்குநர், 4) மாற்றி, 5) தொடர்பு மென்பொருள்
இவற்றைக் கொண்டு இணைய சேவைக்கு உரியவரிடம் தனிக் கணக்கு தொடங்குதல் வேண்டும். பின்பு கணினியை இணைய தளத்தடத்தில் இணைக்க வேண்டும்.
தொலைபேசி வழியாகக் கணினியையும், மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி இணைப்புச் சேவையாகும். இம்முறையில் விரைவும், வசதியும் குறைவாக இருந்தமையால் புதிய அணுகுமுறை தேவைப்பட்டது.
வையக விரிவு வலை செயல்படுவதைக் கொண்டு இணைய இணைப்பு நான்கு வகைகளில் கிடைக்கின்றது. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, கம்பி வடமாற்றி, செயற்கைக்கோள் சேவை, கண்ணறைச் சேவை என்பன அவை.
இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள் மற்றும் சிக்கல்களுக்கான வழிகாட்டுதல்கள், தீர்வுகள் ஆகியவற்றை பெற இயலும். தீர்வுகளைப் பெற மின்னஞ்சல் முகவரி உதவுகிறது.
பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எல்லா இடத்திலும் கணினியும், இணையமும் ஆட்சி செலுத்துகின்றன. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றன.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும், இணையமும் தொலைத் தொடர்பு கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.